உள்ளாட்சி தேர்தல் எப்போது?


உள்ளாட்சி தேர்தல் எப்போது?
x
தினத்தந்தி 25 March 2018 9:30 PM GMT (Updated: 2018-03-25T16:49:05+05:30)

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் உள்ளன.

மிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் உள்ளன. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தவேண்டும். கடந்த 2016–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24–ந்தேதியோடு 5 ஆண்டுகளை கழித்துவிட்ட உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகளின் பதவிகாலம் முடிந்தநிலையில், மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அக்டோபர் 17 மற்றும் 19–ந்தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சித்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டநிலையில், தி.மு.க. சார்பில் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது என்று தொடர்ந்த வழக்கினால் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.

தமிழக அரசும் 2011–ம் ஆண்டு மக்கள்தொகையின் கணக்கின்படி, அறிவிக்கப்பட்டுள்ள மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து வார்டுகளை தொகுதி வரையறை செய்யவேண்டும் என்று ஒரு சட்டத்தை நிறைவேற்றியதால் தேர்தல் நடக்காத சூழ்நிலை உருவாகிவிட்டது. இந்தநிலையில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் உரையில், ‘நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளாலும், 2011–ம் ஆண்டு மக்கள்தொகையின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டுகளின் எல்லை வரையறைப் பணிகளை தமிழ்நாடு எல்லை வரையறை ஆணையம் செய்துகொண்டிருப்பதாலும், மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளின் எல்லைகளை மறுவரையறை செய்த பின்னரே, மாநில தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட இயலும்’ என்று திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இப்போது இல்லை என்பதை தெரிவித்துவிட்டது.

உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாததால் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளில் ஏற்படும் குறைகளுக்கு வார்டு உறுப்பினர்கள் அல்லது கவுன்சிலர்கள் மூலமாகத்தான் மக்கள் தீர்வுகண்டு கொண்டிருந்தார்கள். இப்போது யாரிடம் போய் சொல்வது? என்றநிலையில் மக்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரு தொடர்பே இல்லாமல் போய்விட்டது. ஒருபக்கம் மக்களுக்கு பாதிப்பு என்றாலும், மற்றொரு பக்கம் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் வரவேண்டிய நிதி மத்திய அரசாங்கத்திடமிருந்து சரியாக வரவில்லை. 14–வது நிதிக்குழு பரிந்துரையின்படி கிராம ஊராட்சி பிரதிநிதிகள்தான் கணக்கு தணிக்கை அறிக்கையை தாக்கல்செய்து, செயல்பாட்டு மானியத்தை மத்திய அரசாங்கத்திடம் இருந்து பெறமுடியும். மேலும், அந்த கணக்கு தணிக்கையில் அவர்கள் முந்தைய ஆண்டைவிட வருவாய் பெருகி இருப்பதை சுட்டிக்காட்டவேண்டும். இப்படிப்பட்ட நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் மத்திய அரசாங்கம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய அடிப்படை மற்றும் செயல்பாட்டு மானியம் என்றவகையில் ரூ.1,950 கோடியை இன்னும் வழங்காமல் இருக்கிறது. பல திட்டங்களுக்குரிய பணம் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாகவே வழங்கப்படுகிறது. எனவே, மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத பாதிப்பைப்போக்க தமிழக அரசு உடனடியாக வார்டுகளின் எல்லை வரையறை பணிகளை போர்க்கால அடிப்படையில் முடித்து, எவ்வளவு விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியுமோ, அவ்வளவு விரைவில் நடத்தவேண்டும் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாகும்.

Next Story