வேளாண் விளைபொருட்களுக்கு எவ்வாறு விலை நிர்ணயம்?


வேளாண் விளைபொருட்களுக்கு எவ்வாறு விலை நிர்ணயம்?
x
தினத்தந்தி 27 March 2018 9:30 PM GMT (Updated: 2018-03-28T00:14:53+05:30)

சம்பா சாகுபடி பருவ விளைபொருட்களுக்கும் உற்பத்தி செலவைவிட 50 சதவீதம் அதிகமாக அதாவது, 1½ மடங்கு விலை குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

பா.ஜ.க. அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட குறுவை சாகுபடி வேளாண் விளைபொருள் விலையோடு, சம்பா சாகுபடி பருவ விளைபொருட்களுக்கும் உற்பத்தி செலவைவிட 50 சதவீதம் அதிகமாக அதாவது, 1½ மடங்கு விலை குறைந்தபட்ச ஆதார விலையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் எல்லோருக்கும் இந்த அறிவிப்பு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தாலும், உற்பத்தி விலையாக எந்தவிலையை நிர்ணயிப்பார்கள் என்பதில் பெரியசந்தேகம் இருந்தது. ஒருவேளை உற்பத்திச்செலவை குறைவாக நிர்ணயித்து, அதிலிருந்து 1½ மடங்கு விலை என்று நிர்ணயம் செய்துவிடுவார்களோ? என்று குழப்பமாக இருந்தது. இந்த குழப்பத்திற்கெல்லாம் ஒரு சரியான தெளிவு கிடைக்கும்வகையில் பிரதமர் புதியஅறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாதந்தோறும் ‘மன் கீ பாத்’ என்றபெயரில் அதாவது, ‘மனதின் குரல்’ என்ற பெயரில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றுவது வழக்கம். அந்தவகையில் 42–வது உரையாக கடந்த 25–ந்தேதி ரேடியோவில் பேசிய அவர், எப்படி இந்த விளைபொருட்கள் விலைநிர்ணயம் செய்யப்படும் என்பதை விவரித்தார். ‘‘குறைந்தபட்ச ஆதரவுவிலையை எட்ட என்னென்ன செலவினங்கள் சேர்க்கப்படுமென்றால், விவசாய நிலத்தில் பணியாற்றும் மற்ற பணியாளர்கள், அவர்களின் ஊதியம், விவசாயிகளின் கால்நடைகள், எந்திரம் அல்லது வாடகைக்கு அமர்த்தப்படும் கால்நடைகள் அல்லது எந்திரத்தின் செலவினம், விதைகளின் விலை, பயன்படுத்தப்பட்டிருக்கும் அனைத்துவிதமான உரங்களுக்கான செலவினம், நீர்ப்பாசனத்துக்கான செலவினம், மாநில அரசுக்கு செலுத்தப்பட்ட நிலவரி, வேலை மூலதனத்திற்கு செலுத்தப்பட்ட வட்டி, நிலம்குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்தால் அதற்கு உண்டான வாடகை மட்டுமல்ல, தானே உழைக்கும் விவசாயி அல்லது அவரது குடும்பத்தில் விவசாயத்தில் அவருக்கு துணைபுரிவோர், அதற்கான மதிப்பும் உற்பத்திச்செலவினத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. கிராமத்தில் இருக்கும் வட்டாரச் சந்தைகள், மொத்த விலைச்சந்தைகள், உலகச்சந்தையோடு இணைக்கப்படும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய அதிக தொலைவு செல்லத்தேவையில்லாத வகையில், நாடெங்கும் 22,000 கிராமப்புறச் சந்தைகளுக்குத் தேவையான கட்டமைப்பை ஏற்படுத்தி மேம்படுத்தும்’’என்று அறிவித்தார்.

பிரதமரின் இந்த அறிவிப்புகள் விவசாயிகளின் உள்ளங்களில் பால்வார்த்ததுபோல் இருக்கிறது. விவசாயிகள் விளைபொருட்களை விற்க நாடு முழுவதிலும் ஏராளமான விளைபொருள் கொள்முதல் நிலையங்களை தொடங்கவேண்டும். எந்தவொரு விவசாயிக்கும் கொள்முதல் நிலையங்களுக்கு விளைபொருட்களை கொண்டுசெல்ல அதிகபோக்குவரத்து செலவு ஏற்படக்கூடாது. நாடுமுழுவதும் உள்ள பெரிய 585 விவசாய சந்தைகளை தேசியமின்னணு வேளாண்சந்தையுடன் விரைவில் இணைக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், அரசே நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளிடமிருந்து அவர்கள் நிர்ணயித்த விலைக்கு கொள்முதல் செய்ய வசதிகள் இல்லாதநிலையில், தனியார் நிறுவனங்களுக்கும் இந்தவிலையில் கொள்முதல் செய்வதற்கான சட்டப்பூர்வ அனுமதியை வழங்கவேண்டும். அதேநேரத்தில் இடுபொருட்களின் விலையையும் குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மத்திய–மாநில அரசுகள் நீர்பாசனத்திட்டங்களை நிறைவேற்றுவதிலும் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும். 2020–ம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக இருக்கும் என்ற பிரதமர் அறிவிப்பின் இலக்கை அடையவேண்டுமென்றால், அடுத்த 2 ஆண்டுகளிலும் விவசாய வளர்ச்சி, நீர்ப்பாசனத்திட்டங்களின் வளர்ச்சி, நீர்மேலாண்மை திட்டங்கள் ஆகியவற்றில் மத்திய–மாநில அரசாங்கங்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

Next Story