கவர்னரின் பெருந்தன்மை


கவர்னரின் பெருந்தன்மை
x
தினத்தந்தி 28 March 2018 9:30 PM GMT (Updated: 28 March 2018 6:42 PM GMT)

பன்வாரிலால் புரோகித் தமிழக கவர்னராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6–ந்தேதி பதவியேற்றார்.

ன்வாரிலால் புரோகித் தமிழக கவர்னராக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 6–ந்தேதி பதவியேற்றார். அன்றிலிருந்து கவர்னரின் பேச்சுகள், செயல்கள் அனைத்தும் தமிழக மக்களால் ஆர்வத்துடன் உற்றுநோக்கப்படுவதாகவும், பேசப்படுவதாகவும், வரவேற்கப்படுவதாகவும் அமைந்துள்ளது. கவர்னர் மாளிகையில் பதவியேற்றவுடன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும்போது, நான் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அரசியலுக்கு அப்பாற்பட்டு அரசியல் சட்டத்தின் அடிப்படையிலேயேதான் அமைந்திருக்கும். அனைத்து முடிவுகளும் அது சிறிதாக இருந்தாலும் சரி, பெரிதாக இருந்தாலும் சரி, எவ்வித அரசியல் கண்ணோட்டமும் இருக்காது. என்னுடைய முடிவுகள் எல்லாம் தகுதியின் அடிப்படையில்தான் இருக்கும். வளர்ச்சிப்பணிகள் அனைத்திற்கும் அரசுக்கு முழுஒத்துழைப்பையும் தருவேன். நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதி செய்துகொள்வேன். எனக்கு டெல்லியில் நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதிஉதவி கிடைக்க முயற்சிசெய்வேன் என்று தெரிவித்தது மிகவும் வித்தியாசமாக இருந்தது. அதன்பிறகு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செல்லும்போதெல்லாம் அங்கு தூய்மை இந்தியா திட்டத்தை விரைவுபடுத்தி, அவரே துப்புரவு பணிகளில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்பட உயர் அதிகாரிகளை அழைத்து வளர்ச்சிப் பணிகள் நிறைவேற்றப்படுவதை கேட்டறிகிறார்.

பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் சேலம் பெரியார், திருச்சி பாரதிதாசன், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் ஒரு வெளிப்படைத்தன்மையையும், சிறந்த நிர்வாகமுறையையும் கையாண்டுள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தமிழ்நாட்டில் இருக்கும்போது, கவர்னர் இவ்வாறு அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்துவது மாநில சுயாட்சியின் தத்துவத்திற்கு எதிரானது என்றுகூறி, செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் தி.மு.க.வினர் கருப்புகொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தராக தம்ம சூர்யநாராயண சாஸ்திரி நியமிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து, ஏற்கனவே ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ள ஒருவரை மீண்டும் அதே பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிப்பதா? என்று அறிக்கை வெளியிட்டார்.

இந்தநிலையில், மு.க.ஸ்டாலினை கவர்னர் தன்னை சந்திக்க வருமாறு அழைப்புவிடுத்தார். எல்லோரும் கவர்னரை சந்திக்க நேரம் கேட்பார்கள். ஆனால், கவர்னரே மு.க.ஸ்டாலினை அழைத்தது தமிழக மக்களுக்கு வியப்பை அளித்தது. மு.க.ஸ்டாலினிடம் அவர், சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் விதிகளின்படிதான் நடந்தது. தேர்வுக்குழு பரிந்துரை செய்த மூவரில் அவரும் ஒருவர். அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் தற்போது இல்லை. முன்பு ஒழுங்கு நடவடிக்கைக்குழு விசாரித்து அவர்மீது தவறு எதுவும் இல்லை என்று அறிவித்துள்ளது. மாவட்டங்களில் நான் ஆய்வு நடத்துவது இல்லை. வளர்ச்சித்திட்டங்களை தெரிந்துகொள்ளத்தான் அவர்களை சந்திக்கிறேன் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நீங்கள் சொன்னதை நான் யோசிக்கிறேன். நான் பரிசீலித்து முடிவு எடுக்கிறேன் என்று சொன்னதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். கவர்னரின் இந்த பெருந்தன்மை நிச்சயமாக பாராட்டுக்குரியது. ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்றமுறையில் மு.க.ஸ்டாலின் சொன்னதற்கு அவரையே அழைத்து விளக்கம் சொல்வது என்பது இதுவரையில் யாரும் செய்யாத ஒன்றாகும். இதே உறவு அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் இடையேயும் தொடரவேண்டும்.

Next Story