நல்ல அறிவிப்பு; எப்போது தொடங்கப்படும்?


நல்ல அறிவிப்பு; எப்போது தொடங்கப்படும்?
x
தினத்தந்தி 29 March 2018 9:30 PM GMT (Updated: 2018-03-29T23:42:58+05:30)

இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், மருத்துவ சிகிச்சைக்காக பணம் இல்லையே என்று தவிக்கும் ஏழை–எளிய மக்களுக்கு பலனளிக்கும் வகையில் தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டம் பற்றிய நல்ல அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், மருத்துவ சிகிச்சைக்காக பணம் இல்லையே என்று தவிக்கும் ஏழை–எளிய மக்களுக்கு பலனளிக்கும் வகையில் தேசிய மருத்துவ பாதுகாப்புத் திட்டம் பற்றிய நல்ல அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தத்திட்டத்தில் 10 கோடி ஏழை நலிந்த குடும்பங்களைச்சேர்ந்த 50 கோடி மக்கள் பயனடைவார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு சாதாரண மருத்துவ சிகிச்சையோடு, சிறப்பு மருத்துவ சிகிச்சைகளையும் பெறுவதற்காக ரூ.5 லட்சம் வழங்கப்படும். உலகத்திலேயே அரசு நிதிஉதவியோடு நடக்கும் மிகப்பெரிய மருத்துவத்திட்டம் இது என்று நிதிமந்திரி தெரிவித்தார். இந்தத்திட்டம் தங்குதடையின்றி செயல்பட போதுமான நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.

அதே பட்ஜெட் உரையில், வரிவிதிப்பு இனங்களில் வெளியிட்ட அறிவிப்பில், இப்போது வருமானவரி கட்டுபவர்களுக்கு அவர்கள் வரியில் 2 சதவீதம் தொடக்கக்கல்விக்காகவும், 1 சதவீதம் செகண்டரி மற்றும் உயர்கல்விக்காகவும் மேல்வரியாக வசூலிக்கப்படுகிறது. இந்த 3 சதவீதத்திற்கு கூடுதலாக இப்போது வறுமைகோட்டுக்கு கீழ்உள்ள மற்றும் கிராமங்களிலுள்ள மக்களின் மருத்துவ உதவிக்காக 1 சதவீதம் மேல்வரியாக வசூலிக்கப்படும். இந்த 1 சதவீத மருத்துவ மேல்வரி மூலம் ரூ.11 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று அறிவித்தார். கல்விக்கு என்றாலும் சரி, புதிதாக அறிவித்த மருத்துவ திட்டத்துக்கு என்றாலும் சரி, முறையாக வருமானவரி கட்டும் கொஞ்சம்பேர்களையே கசக்கிப்பிழிவது போல அவர்கள் கட்டும் வரியிலேயே மேல்வரி விதிக்கப்படுகிறதே. அவர்களை வருமானவரி மட்டும் கட்டசொல்லிவிட்டு, மேல்வரிக்கு பதிலாக அரசு அறிவிக்கும் திட்டங்களுக்கு வேறுவகைகளில் வருமானம் ஈட்டியிருக்கலாமே என்ற குறையும் வருமானவரி கட்டுபவர்களிடம் இருக்கிறது. ஆனால், இந்த 50 கோடி பேருக்கான மருத்துவ உதவித்திட்டத்திற்கு ரூ.11 ஆயிரம் கோடி போதாது. நிச்சயம் கூடுதலாக ரூ.50 ஆயிரம் கோடிகூட தேவைப்படலாம் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். நிதிப்பற்றாக்குறை ரூ.7 லட்சத்து 15 ஆயிரத்து 699 கோடியாக இருக்கும்நிலையில், இதுபோன்ற அறிவிப்புகள் பற்றாக்குறையின் அளவை இன்னும் அதிகரிக்கும்.

இந்தத்திட்டத்துக்கு ஆகும் செலவில் 60 சதவீத தொகையை மத்திய அரசாங்கமும், மாநில அரசு 40 சதவீதமும் பங்கீட்டுக்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசாங்கத்தின் இந்தத்திட்டத்தில், மாநில அரசுகளுக்கும் செலவு இருக்கிறது. இந்தநிலையில், நிதி தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு தன்அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், இந்தத்திட்டத்திற்கு மத்திய அரசாங்கம் எந்தவகையில் நிதிஒதுக்கீடு செய்யப்போகிறது என்றும், கூடுதல் நிதியை எப்படி திரட்டப்போகிறது என்றும் இன்னும் தெளிவாக தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இப்போது ரூ.10 ஆயிரம் கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதாது. இந்தத்திட்டம் எப்போது முதல் அமலுக்கு வரப்போகிறது?, இதற்கான கூடுதல் நிதி எப்படி ஒதுக்கீடு செய்யப்படும்?, தமிழக அரசு ஏற்கனவே நிறைவேற்றிக்கொண்டு இருக்கும் முதல்–அமைச்சர் காப்பீட்டு திட்டத்தையும் இதோடு இணைத்து அதற்கான நிதிஉதவியை தமிழக அரசுக்கு வழங்கவேண்டும் என்ற மாநில அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? என்பதை மத்திய அரசாங்கம் விரைவில் அறிவிக்கவேண்டும்.

Next Story