தொட்டால் ‘ஷாக்’ அடிக்கும்


தொட்டால் ‘ஷாக்’ அடிக்கும்
x
தினத்தந்தி 30 March 2018 9:30 PM GMT (Updated: 2018-03-31T00:26:44+05:30)

‘தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதி’ என்றொரு பழமொழி உண்டு. அது தமிழ்நாடு விஷயத்தில் உண்மையாகிவிடக்கூடாது என்பதுதான் தமிழக மக்களின் கோரிக்கையாகும்.

‘தாமதமான நீதி, மறுக்கப்பட்ட நீதி’ என்றொரு பழமொழி உண்டு. அது தமிழ்நாடு விஷயத்தில் உண்மையாகிவிடக்கூடாது என்பதுதான் தமிழக மக்களின் கோரிக்கையாகும். காவிரி பிரச்சினையில் ஒரு தீர்வை மத்திய அரசாங்கம் வழங்கவேண்டும் என்று இவ்வளவு காலமும் தமிழ்நாடு வலியுறுத்தி வந்தது. நடுவர்மன்ற தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்று குழுவும் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தும், மத்திய அரசாங்கங்கள் அதை நிறைவேற்றவில்லை. இடையில் உச்சநீதிமன்றம் இதுதொடர்பான வழக்கில் கடந்த மாதம் 16-ந்தேதி, 6 வாரகாலத்துக்குள் நடுவர்மன்ற தீர்ப்பில் கூறப்பட்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த 6 வாரகாலக்கெடு 29-ந்தேதி முடிவடைந்துவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று மத்திய மந்திரிகள், பா.ஜ.க. தலைவர்கள் உறுதி கூறினார்கள். இந்த உறுதிமொழிகளெல்லாம் காற்றில் கலந்த கீதமாக கரைந்து போய்விட்டது. இதெல்லாம் நடக்காதவகையில், 6 வாரகாலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசாங்கம் இப்போது காலக்கெடு முடிவடைந்தநிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் விளக்கம்கோரி மனு தாக்கல் செய்ய உள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்பில் மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் தாவா சட்டம் பிரிவு 6 ஏ-ன் கீழ் ஒரு செயல்திட்டம் 6 வாரகாலத்துக்குள் செயல் படுத்தப்படவேண்டும் என்று கூறியிருந்தது. இந்த 6 வாரகாலமும் மத்திய அரசாங்கத்திற்கு சந்தேகம் ஏற்படவில்லை. காலக்கெடு முடிந்தவுடன் இந்த ‘செயல்திட்டம்’ என்பதன் பொருள் என்ன? என்ற வகையில், உச்சநீதிமன்றம் விளக்கவேண்டும் என்று கேட்கப்போகிறது. இந்த செயல்திட்டம் என்ற வார்த்தையில் சந்தேகம் இருந்திருந்தால் உச்சநீதிமன்ற தீர்ப்புவந்த அடுத்தநாளே மனு தாக்கல் செய்து, இந்த 6 வாரகாலத்துக்குள் உச்சநீதிமன்றம் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் அந்த அமைப்பை அமைத்திருக்கலாம். ஆனால் 6 வாரகாலமும் தாமதப்படுத்தி, இப்போது மனு தாக்கல் செய்கிறது என்றால், இது தாமதப்படுத்துவதற்கான ‘யுக்தி’ என்றே தெரிகிறது என்பதுதான் தமிழக விவசாயிகளின் கருத்தாகும்.

ஏற்கனவே காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு தொடர்பான வழக்கில் 2016-ம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதவாக்கில் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை 3 நாட்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டதை மத்திய அரசாங்கம் மறந்திருக்க முடியாது. இப்போது மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கையை அடுத்து, தமிழக அரசின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர இருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் ஏப்ரல் 3-ந்தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. செயற்குழுவிலும் கண்டனம் தெரிவித்து, 1-ந்தேதி சர்வகட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறது. பா.ம.க. ஏப்ரல் 11-ந்தேதி முழுஅடைப்பு போராட்டம் அறிவித்திருக்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. தமிழக அரசும், தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும் தமிழக மக்களின் உரிமையில், மத்திய அரசாங்கம் கை வைத்தால் ‘ஷாக்’ அடிக்கும் என்ற ஒரு உணர்வை மத்திய அரசாங்கத்திற்கு ஏற்படுத்தும் வகையில், ஒற்றுமையாக போராட்டங்களை கையில் எடுத்து இருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் இந்தப்பிரச்சினையில் விசேஷ கவனம் எடுத்து ஒரு சில நாட்களில் இறுதியான, உறுதியான தீர்ப்பை வழங்கவேண்டும்.

Next Story