கேள்வித்தாள் ‘லீக்’ ஆகலாமா?


கேள்வித்தாள் ‘லீக்’ ஆகலாமா?
x
தினத்தந்தி 2 April 2018 6:58 PM GMT (Updated: 2018-04-03T00:28:39+05:30)

மாணவ பருவத்தில் மிக முக்கியமான காலக்கட்டம் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பு தேர்வுகள்தான்.

ஏனெனில், 10-வது வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால், பிளஸ்-1 வகுப்பில் அவர்கள் விரும்பிய பாடவகுப்புகளில் சேரமுடியும். பிளஸ்-2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்தால்தான், அவர்கள் விரும்பிய உயர்படிப்புகளில் சேரவும், நல்ல வேலைவாய்ப்புகளை பெறவும் முடியும். ஆகவேதான், இந்த இரு வகுப்புகளிலும் படிக்கும் மாணவர்களும், தங்கள் பொழுதுபோக்குகளையெல்லாம் மறந்து, படிப்பு படிப்பு என்ற நிலையில் படிப்பதைத்தவிர வேறு சிந்தனையே இல்லாமல் கடுமையாக உழைப்பார்கள். தேர்வு எழுதி முடித்தவுடன், அப்பாடி ஆண்டு முழுவதும் படித்தோம். இனி இந்த கோடை விடுமுறையில் சற்று ஓய்வு எடுத்துக்கொள்ளலாம். இன்புற்று மகிழலாம் என்று நிம்மதி பெருமூச்சுவிடுவார்கள்.

ஆனால் இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த 10-வது வகுப்பு மாணவர்களுக்கும், 12-வது வகுப்பு மாணவர்களுக்கும் அவர்கள் எண்ணத்தில் இடிவிழுந்ததுபோல் ஆகிவிட்டது. காரணம் பிளஸ்-2 வகுப்பு பொருளாதார தேர்வு வினாத்தாளும், 10-ம் வகுப்பு கணக்கு தேர்வு வினாத்தாளும் ‘லீக்’ ஆகிவிட்டது என்றுகூறி, அந்த தேர்வுகளை ரத்துசெய்து மறுதேர்வு என்று முதலில் அறிவித்தார்கள். ஆனால், 2 நாட்களுக்குப்பிறகு பிளஸ்-2 பொருளாதார பாடத்துக்குத்தான் ஏப்ரல் 25-ந் தேதி மறுதேர்வு நடத்தப்படும். 10-ம் வகுப்பு கணக்கு பாடத்துக்கு மறுதேர்வு நடந்தால் டெல்லி, அரியானாவில் மட்டும் நடக்கும். இதுகுறித்து 15 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று மத்திய பள்ளிக்கூட கல்வித்துறை செயலாளர் அறிவித்தார். நிச்சயமாக இது அந்த மாணவர்களுக்கு மனசோர்வையும், மனஅழுத்தத்தையும், சலிப்பையும் கொடுக்கும். முதலில் தேர்வு எழுதும்போது இருந்த உற்சாகம் மீண்டும் இருக்குமா என்பது சந்தேகமே!. இது சி.பி.எஸ்.இ.க்கு ஒரு அவமானம்தான். மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. தேர்வில் நம்பிக்கை இல்லாதநிலையை இது உருவாக்கிவிடும். சி.பி.எஸ்.இ.-யை பொறுத்தமட்டில், வினாத்தாள் ‘லீக்’ ஆவது இதுதான் முதல்முறையல்ல. ஏற்கனவே 2006-ம் ஆண்டும், 2011-ம் ஆண்டும் கேள்வித்தாள்கள் ‘லீக்’ ஆகியிருக்கிறது. 10-ம் வகுப்பு கணக்கு வினாத்தாளை பொறுத்தமட்டில், சி.பி.எஸ்.இ. தலைவருக்கே முந்தினநாள் அனுப்பப்பட்டு இருக்கிறது. ‘முடிந்தால் என்னை பிடித்துப்பார்’ என்ற தைரியம்தான் இந்த வினாத்தாளை அனுப்பியவர்களுக்கு இருந்திருக்கிறது.

பிளஸ்-2 வகுப்பு பொருளாதார பாடத்திட்ட வினாத்தாள் பலருக்கு ‘வாட்ஸ்-அப்’பில் வந்தது. அது கையால் எழுதப்பட்டு இருந்தது. இதேபோல கணக்கு தேர்வுக்கான வினாத்தாள் முந்தினநாளே வடமாநிலங்களில் ‘வாட்ஸ்-அப்’பில் வந்துவிட்டது. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இந்த வினாத்தாள் கிடைக்கவில்லை. முந்தினநாள் ‘வாட்ஸ்-அப்’பில் வெளியான உடனேயே அந்த கேள்வித்தாளுக்கு பதிலாக வேறு கேள்வித்தாள்களை அனுப்ப ஏற்பாடு செய்திருக்கலாம். நவீன தொழில்நுட்பத்தில் இது உறுதியாக சாத்தியமான ஒன்றுதான். எதிர்காலத்தில் எலக்ட்ரானிக் குறியீடு கொண்ட வினாத்தாள்களை தயாரிக்க சி.பி.எஸ்.இ. திட்டமிட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு ஒருமணி நேரத்திற்கு முன்புதான் கிடைக்க வகைசெய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. என்ன நடவடிக்கை எடுத்தாலும் இனி ஒருபோதும் வினாத்தாள் ‘லீக்’ ஆகிவிட்டது என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும்.

Next Story