பெட்ரோல் – டீசல் வரியை குறைக்க வேண்டும்


பெட்ரோல் – டீசல் வரியை குறைக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 April 2018 8:46 PM GMT (Updated: 2018-04-05T02:16:29+05:30)

ஒரு நாட்டின் பொருளாதாரத்திலும், தனிமனிதன் வாழ்க்கையிலும் பெட்ரோல்–டீசல் விலை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பெட்ரோல்–டீசல் இந்தியாவில் கிடைப்பதில்லை. பெரும்பாலும் சவுதி அரேபியா, ஈரான், ஈராக், நைஜீரியா, வெனிசூலா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக மத்திய அரசு ஏராளமாக செலவழிக்க வேண்டியதிருக்கிறது. கச்சா எண்ணெயின் விலை எப்போதும் ஒரேசீராக இருப்பதில்லை. ஏற்றத்தோடும் இருக்கும். இறங்கவும் செய்யும். எடுத்துக்காட்டாக, 2012–ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 120 அமெரிக்க டாலராக இருந்தது. இப்போது 67.30 டாலராக இருக்கிறது. கச்சா எண்ணெயின் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல்–டீசல் விலை நிர்ணயம் என்றாலும், குறையும்போது அதற்கேற்ற வகையில் குறைக்கப்படுவதில்லை.

கடந்த ஆண்டு ஜூன் மாதம்வரை ஒவ்வொரு மாதமும் 1–ந்தேதியும், 16–ந்தேதியும் பெட்ரோல்–டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டது. ஜூன் 16–ந்தேதி முதல் இந்த விலை நிர்ணயம் தினசரி நடந்துவருகிறது. தற்போது இதுவரையில் எப்போதும் இல்லாத அளவு டீசல் விலை உயர்ந்திருக்கிறது. பெட்ரோல் விலையும் 4 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.76.72 ஆகும். டீசல் ரூ.68.38 ஆகும். தெற்கு ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில்தான் பெட்ரோல்–டீசல் விலை அதிகமாக இருக்கிறது. இதற்கு காரணம், மொத்த விற்பனை தொகையில் பாதிதொகைக்குமேல் மத்திய–மாநில வரிகளாக போய்விடுகிறது. கடந்த 2014–ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம்வரை மத்திய அரசு பெட்ரோல்–டீசல் விலை மீது விதிக்கப்படும் கலால்வரியை 9 முறை உயர்த்தியுள்ளது. ஒரே ஒருமுறை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு லிட்டருக்கு ரூ.2 குறைத்திருந்தது. அந்தநேரத்தில் மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளும் பெட்ரோல்–டீசல் மீது விதிக்கும் மதிப்பு கூட்டுவரியை குறைக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தது. மராட்டியம், குஜராத், மத்தியபிரதேசம், இமாசலபிரதேசம் மாநிலங்களில் மட்டும் மாநில மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்பட்டதே தவிர, மற்ற மாநிலங்களில் வரியை குறைக்கவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.88 ஆகவும், டீசல் ரூ.59.14 ஆகவும் இருந்தநேரத்தில் கலால்வரியை லிட்டருக்கு மத்திய அரசு ரூ.2 குறைத்தது. இப்போது இவ்வளவு விலை உயர்ந்திருக்கிற நேரத்தில், கண்டிப்பாக கலால்வரியை மத்திய அரசு குறைக்கவேண்டும். அதுபோல, தமிழக அரசும் மதிப்புக்கூட்டுவரியை குறைக்கவேண்டும். இவ்வளவு தொகை வரியாக போகின்ற நேரத்தில், பெட்ரோல்–டீசல் விலையை குறைக்கவேண்டுமென்றால், மத்திய அரசு இதை சரக்கு சேவைவரி (ஜி.எஸ்.டி.) வளையத்துக்குள் கொண்டுவரவேண்டும். மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். சரக்கு சேவைவரிக்குள் பெட்ரோல்–டீசல் கொண்டுவரப்பட்டால், கலால்வரி இருக்காது. மதிப்புக் கூட்டுவரி இருக்காது. அதிகபட்சம் வரியான 28 சதவீத வரி பெட்ரோல்–டீசல் மீது நிர்ணயித்தால்கூட, இப்போது விற்கப்படும் விலையைவிட பெருமளவில் குறைந்துவிடும். பெட்ரோல்–டீசல் விலை குறைக்கப்பட்டால், நிச்சயமாக அத்தியாவசிய பண்டங்களின் விலை குறையும். பொதுமக்கள் செலவும் பெருமளவு குறையும்.

Next Story