காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் பலப்பரீட்சை


காங்கிரசுக்கும், பா.ஜ.க.வுக்கும் பலப்பரீட்சை
x
தினத்தந்தி 6 April 2018 8:57 PM GMT (Updated: 2018-04-07T02:27:51+05:30)

கர்நாடக மாநிலத்தில் 15–வது சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. 224 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் மே 12–ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.

கர்நாடக மாநிலம் தொடக்க காலங்களில் காங்கிரஸ் கோட்டையாகத்தான் இருந்தது. முதல் 7 சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெற்றிருந் திருக்கிறது. அதன்பிறகு ஜனதாகட்சி, காங்கிரஸ் கட்சி, ஜனதாதளம், தொடர்ந்து காங்கிரஸ் கட்சி, அடுத்து மதசார்பற்ற ஜனதாதளம், பா.ஜ.க. என்று மாறி மாறி ஆட்சியை பிடித்தநிலையில், 2008–ம்ஆண்டு நடந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

தொடர்ந்து 2013–ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இவ்வளவு நாளும் நடந்த தேர்தலில் இல்லாத ஒரு பெரிய பரபரப்பு இந்த தேர்தலில் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் தற்போது கர்நாடகம், பஞ்சாப், மிசோரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில்தான் ஆட்சியில் இருக்கிறது.

கர்நாடக மாநிலத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் காங்கிரசும், காங்கிரசின் முக்கிய மாநிலமான கர்நாடகாவை தட்டிப்பறிக்கவேண்டும் என்று பா.ஜ.க.வும் முனைப்பாக இருக்கிறது. மதசார்பற்ற ஜனதாதளம் தனித்து வெற்றிபெற முடியாவிட்டாலும், ஆட்சி அமைப்பதில் தனது பங்கு முக்கியமாக இருக்கவேண்டும் என்று கருதுகிறது.

2019–ம்ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கும், நடைபெறப்போகும் சட்டசபை தேர்தல்களுக்கும், இந்த தேர்தல் ஒரு முன்னோட்டமாக கருதப்படும் என்பதே எல்லோருடைய கணிப்பும் ஆகும். பா.ஜ.க.வின் முதல்–மந்திரி வேட்பாளர் எடியூரப்பா. இவர் லிங்காயத் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த சமுதாயத்தின் ஓட்டுகள் பெரும்பாலும் பா.ஜ.க.வுக்குதான் கிடைக்கும் என்று ஒரு எண்ணம் இருந்தது. ஆனால், காங்கிரஸ் முதல்–மந்திரியான சித்தராமையா மிகத்தெளிவாக திட்டமிட்டு காய்களை நகர்த்தினார்.

கர்நாடகா மக்கள் எப்பொழுதுமே மாநிலத்தின் மீதும், மொழியின் மீதும் அதிக பற்றுள்ளவர்கள். சில மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்தி பயன்பாட்டை எதிர்த்து பெரியஅளவில் காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதுமட்டு மல்லாமல், கர்நாடக மாநிலத்திற்கு என தனிக்கொடியை உருவாக்கி, மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலுக்கும் அனுப்பியுள்ளார். லிங்காயத் சமுதாயத்தை தனி மதமாக்கி, சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டு, மத்திய அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் பெறும் வெற்றிதான் காங்கிரசுக்கு புத்துயிர் ஊட்டும் என்று சோனியாகாந்தி டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசி இருக்கிறார். இதுமட்டுமல்லாமல், நெருக்கடிநிலை காலத்துக்குப்பிறகு 1977–ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்த நேரத்தில், 1978–ல் சிக்மகளூர் தொகுதியில் நடந்த தேர்தலில் இந்திரா காந்தி பெற்ற மகத்தான வெற்றிதான் நாட்டின் அரசியலுக்கு ஒரு புதிய பாதையை காட்டி காங்கிரஸ் கட்சியை ஒரு பலமான கட்சியாக உருவெடுக்க வழிவகுத்தது என்றும் பேசினார்.

அனல்பறக்கும் தேர்தல் பிரசாரங்கள் இருதரப்பிலும் இப்போதே தொடங்கி விட்டது. இரு கட்சிகளுக்குமே இது ஒரு பலப்பரீட்சை. கர்நாடகத்தில் பெறும் வெற்றிதான், அடுத்த தேர்தல் களிலும் வெற்றிபெறுவதற்கு ஒரு உந்துசக்தியாக கருதப்படுகிறது. இதற்கெல்லாம் விடையை மே 12–ந்தேதி கர்நாடக மக்கள் சொல்லப்போகிறார்கள்.   


Next Story