பிரதமர் தொடங்கி வைக்கும் ராணுவ கண்காட்சி


பிரதமர் தொடங்கி வைக்கும் ராணுவ கண்காட்சி
x
தினத்தந்தி 11 April 2018 9:30 PM GMT (Updated: 2018-04-11T22:45:23+05:30)

சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தி தலைமையிலான சுதந்திர போராட்ட வீரர்கள், ‘இந்தியனாக இரு, இந்திய பொருட்களையே வாங்கு’ என்று இந்தியாவில் தயாராகும் பொருட்களை மட்டும் வாங்கி, அதன் மூலமாக தேசபக்தியை வளர்க்கும் முழக்கங்களை எழுப்பி வந்தனர்.

சுதந்திர போராட்டத்தின்போது மகாத்மா காந்தி தலைமையிலான சுதந்திர போராட்ட வீரர்கள், ‘இந்தியனாக இரு, இந்திய பொருட்களையே வாங்கு’ என்று இந்தியாவில் தயாராகும் பொருட்களை மட்டும் வாங்கி, அதன் மூலமாக தேசபக்தியை வளர்க்கும் முழக்கங்களை எழுப்பி வந்தனர். அதுபோல, இப்போது மோடி, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற வகையில் வெளிநாடுகளை நம்பியிராமல், இந்தியாவிலேயே அனைத்து பொருட்களையும் உற்பத்தி செய்யும் வகையில் சிறு, குறு, நடுத்தர கனரக தொழில்களை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ராணுவ மந்திரியாக பொறுப்பேற்றுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த நிர்மலா சீதாராமன், பிரதமர் நரேந்திர மோடியின் கனவை நனவாக்கும் வகையில், ராணுவ தளவாட பொருட்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதில் தீவிரம் காட்டுகிறார். இந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்ததுபோல, சென்னையில் இருந்து திருச்சி, கோவை, சேலம், ஓசூர் வரை ஒரு நாற்கரம் போல ராணுவ தொழில் வழித்தடத்தை அமைக்கும் பணியில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த ராணுவ தொழில் வழித்தடத்தை தொடங்குவதன்மூலம், இந்தியாவில் பெரும்பாலான ராணுவ தளவாட பொருட்களை தமிழ்நாட்டு தொழில் வழித்தடத்தில் உற்பத்தி செய்யமுடியும். இது நிச்சயமாக தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடியும், ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனும் அளித்த பரிசு என்றே சொல்லலாம். இதற்காக அவர்கள் இருவருக்கும் தமிழ்நாடு நன்றி தெரிவிக்கிறது. குறைந்தபட்சம் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் இதன்மூலம் உருவாகும்.

நாடு முழுவதும் உற்பத்தியாகும் ராணுவ பொருட்களில், 30 சதவீதம் தமிழ்நாட்டு தொழில் வழித்தடத்திலேயே உற்பத்தி செய்யமுடியும். இது ஒரு பரிசு என்றால், மற்றொரு பரிசு இன்று சென்னை அருகே கிழக்குகடற்கரை சாலையில் திருவிடந்தை என்ற ஊரில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைக்கும் ராணுவ கண்காட்சிதான். 2 ஆண்டுக்கு ஒருமுறை ராணுவ கண்காட்சி நடக்கிறது. இதுவரையில் தென்னிந்தியாவில் இதுபோல ராணுவ கண்காட்சி நடந்ததில்லை. இன்று முதல் 14–ந் தேதிவரை நடக்கும் இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம், உலகுக்கு இந்தியாவின் ராணுவ பொருட்களின் உற்பத்தித்திறனை காட்டுவதுதான். இந்த கண்காட்சியில் இந்தியாவை சேர்ந்த 517 அரங்கங்களும், 154 சர்வதேச காட்சி அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியை 14–ந்தேதி பொதுமக்கள் பார்க்கமுடியும். அப்படி கண்காட்சியை பார்க்க விரும்பும் பொதுமக்கள் www.defexpoindia.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து உள்ளே நுழைவதற்கான அனுமதி பேட்ஜை 13–ந்தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

இதுமட்டுமல்லாமல், 13, 15–ந்தேதிகளில் சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல்களை பொதுமக்கள் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தங்கள் அடையாள அட்டையையும், அதன் ஜெராக்ஸ் நகலையும் பொதுமக்கள் தீவுத்திடலுக்கு காலை 10 மணிக்கு கொண்டுவரவேண்டும். அவர்களை அணி அணியாக அழைத்துச்சென்று போர்க்கப்பல்களை காட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆக, இந்த ராணுவ கண்காட்சி நமது ராணுவத்தின் பெருமைகளை அறிந்துகொள்ளவும், நமது நாட்டு தயாரிப்புகளையும், வெளிநாட்டு தயாரிப்புகளை தெரிந்துகொள்ளவும் உதவும். ராணுவ தொழில் வழித்தடத்தில் தொழில்தொடங்க விரும்பும் இளம் தொழில் முனைவோர் இந்த கண்காட்சியை பார்த்து ஒரு முயற்சியை மேற்கொள்வதற்கு நிச்சயமாக இது வழிவகுக்கும்.

Next Story