மே 3–ந்தேதி வரை காத்திருக்க வேண்டாம்


மே 3–ந்தேதி வரை காத்திருக்க வேண்டாம்
x
தினத்தந்தி 12 April 2018 10:08 PM GMT (Updated: 2018-04-13T03:38:48+05:30)

காவிரி பிரச்சினை தீர்வு காணப்படாமல் இடியாப்ப சிக்கல்போல இழுத்துக்கொண்டே போகிறது.

காவிரி பிரச்சினை தீர்வு காணப்படாமல் இடியாப்ப சிக்கல்போல இழுத்துக்கொண்டே போகிறது. வடமாநிலங்களில் எப்படி கங்கை ஆற்றை உயிர்நதியாக கருதுகிறார்களோ, அதுபோல தென்மாநில மக்கள் குறிப்பாக தமிழக மக்களுக்கு உயிர்நதி என்றால் அது காவிரி தான். தமிழக மக்களின் ரத்தநாளம் போல கருதப்படுவது காவிரிநதி. காவிரி பிரச்சினையில் நடுவர்மன்றம் 2007–ம் ஆண்டு இறுதித்தீர்ப்பு வழங்கியும் அந்ததீர்ப்பில் கூறியபடி எதுவும் நிறைவேற்றப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரிநீர் ஒழுங்காற்றுக்குழுவையும் அமைக்கவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. ஆனால், மத்திய அரசாங்கங்கள் அதை நிறைவேற்றவில்லை. பிறகு இது தொடர்பான வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் 16–ந்தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 6 வாரகாலத்திற்குள் ஒரு செயல்திட்டத்தை அமைக்கவேண்டும் என்று மத்திய அரசாங்கத்திற்கு உத்தரவிடப்பட்டது. 

காவிரி ஆறு ஒரு தேசசொத்து. அதை எந்த மாநிலமும் உரிமை கொண்டாடமுடியாது என்று முதல்முறையாக பட்டவர்த்தனமாக உச்சநீதிமன்றம் அறிவித்தது. காவிரி நடுவர்மன்றத்தின் தீர்ப்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவேண்டும் என்று தெளிவாக கூறப்பட்டிருந்ததால், அந்தத்தீர்ப்பை அங்கீகரித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் 6 வாரங்களுக்குள் அமைக்கப்பட்டுவிடும் என்றே விவசாயிகள் உறுதியாக நம்பியிருந்தார்கள். ஆனால், மத்திய அரசாங்கம் 6 வாரகாலமும் அமைதியாக இருந்துவிட்டு, கடைசிநாள் அன்று உச்சநீதிமன்றத்தில் செயல்திட்டம் என்றால் என்ன? என்பதற்கு விளக்கம்வேண்டும், மேலும் கர்நாடக மாநிலத்தில் மே 12–ந்தேதி தேர்தல் நடைபெறுவதால், பிப்ரவரி 16–ந்தேதி வழங்கப்பட்ட உத்தரவில் கொடுக்கப்பட்ட 6 வாரகால கெடுவுக்குப்பதிலாக, மேலும் 3 மாதகாலம் அவகாசம் வழங்கவேண்டும் என்று கோரி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. 

இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசாங்கம் அமல்படுத்த தவறியது என்றவகையில், தமிழக அரசும், புதுச்சேரி அரசும், கோர்ட்டு அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான பெஞ்சு, 6 வாரகாலத்திற்குள் ஒரு செயல்திட்டத்தை வகுக்காத மத்திய அரசாங்கத்தின்மீது கடுமையான கண்டனங்களை தெரிவித்தது. நீங்கள் எங்கள் உத்தரவின்படி செயல்பட்டிருக்கவேண்டும். செயல்திட்டத்தை உருவாக்கியிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு நீங்கள் செயல்படாதது ஆச்சரியத்தை அளிக்கிறது. நீர் பங்கீட்டு கொள்கைக்கு நீங்கள் மதிப்பளிக்கவேண்டும். மே 3–ந்தேதிக்குள் மத்திய அரசாங்கம் ஒரு வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மே 3–ந்தேதி என்று ஒரு நீண்ட காலஅவகாசம் உச்சநீதிமன்றத்தால் கொடுக்கப்பட்டிருப்பது தமிழக விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தாலும், உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள வாசகங்கள் சற்று நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. ஆக, இப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினை மத்திய அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது. இனியும் இந்தப்பிரச்சினையை ரப்பராக இழுத்துக்கொண்டு போகாமல், கர்நாடக தேர்தல் ஒருபக்கம் இருந்தாலும், மே 3–ந்தேதிவரை மத்திய அரசாங்கம் காத்துக்கொண்டிருக்காமல் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உணர்வுப்பூர்வமாக புரிந்துகொண்டு, விரைவில் செயல்திட்டம் என்பதன் அர்த்தம் தொனிக்கும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்பதுதான் தமிழக விவசாயிகளின் கோரிக்கையாகும், அதுதான் தார்மீக நீதியும் கூட.

Next Story