வேலைவாய்ப்புகள் பெருக சிறுதொழில் வளர்ச்சி


வேலைவாய்ப்புகள் பெருக சிறுதொழில் வளர்ச்சி
x
தினத்தந்தி 15 April 2018 9:30 PM GMT (Updated: 15 April 2018 6:08 PM GMT)

சில நாட்களுக்கு முன்பு ‘கியா மோட்டார்ஸ்’ நிறுவனம் தனது முதலாவது இந்திய உற்பத்தி தொழிற்சாலையின் கட்டமைப்பை நிறுவுவதற்கான விழாவை ஆந்திரா மாநிலம், அனந்தபூரில் நடத்தியது.

சில நாட்களுக்கு முன்பு ‘கியா மோட்டார்ஸ்’ நிறுவனம் தனது முதலாவது இந்திய உற்பத்தி தொழிற்சாலையின் கட்டமைப்பை நிறுவுவதற்கான விழாவை ஆந்திரா மாநிலம், அனந்தபூரில் நடத்தியது. ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை உற்பத்திசெய்ய திட்டமிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 31–ந்தேதி கிருஷ்ணா மாவட்டம், மல்லவள்ளியில் பஸ்கள் உற்பத்திக்காக அசோக் லேலண்டு நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைக்காக சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டியிருக்கிறார். இந்த நிறுவனங்கள் மட்டுமல்லாமல், மேலும் பல தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கு சென்றுகொண்டிருப்பதை பார்க்கும்போது, தமிழக அரசு தொழில்முனைவோரை ஈர்க்க இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என எண்ணத்தோன்றுகிறது. இந்தநிலையில், தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்துகொண்டு வருவதை திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள, நிதிஅயோக் நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2015–16–ல் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.79 சதவீதமாக இருந்தது. அது 2016–17–ல் 7.93 சதவீதமாக குறைந்துள்ளது. இதேநேரத்தில் குஜராத் போன்ற மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி விகிதம் 1 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்திருக்கிறது. இதுமட்டுமல்லாமல், உற்பத்திபிரிவிலும் தமிழ்நாடு பலத்த பாதிப்புக்குள்ளாகியிருக்கிது. 2015–16–ல் உற்பத்திபிரிவு 7.1 சதவீதம் வளர்ந்துள்ளநிலையில், அடுத்தஆண்டே இந்த வளர்ச்சிவிகிதம் வெறும் 1.64 சதவீதமாக குறைந்துள்ளது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததில், உற்பத்திபிரிவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை யாராலும் மறுக்கமுடியாது என்றாலும், இந்தளவிற்கு குறைந்துள்ளது நிச்சயமாக கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

குஜராத் மாநில வளர்ச்சி 7.80 சதவீதமாக இருந்தது, 9.18 சதவீதமாக உயர்ந்துள்ளது. உற்பத்தி பெருகினால்தான் வேலைவாய்ப்புகள் பெருகும். இன்றைய காலகட்டத்தில் வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபடவேண்டும் என்றால் உற்பத்தி பெருமளவில் உயர்ந்தாகவேண்டும். அடுத்த சிலஆண்டுகளுக்கு வேளாண்மை, வங்கிப்பிரிவு, நிதிசேவைகள் போன்ற பிரிவுகளிலும், அரசாங்க வேலைவாய்ப்புகளிலும் பெருமளவில் நிச்சயமாக வேலைவாய்ப்பு வளர்ச்சியை காணமுடியாது. ஆக வேலைவாய்ப்புகள் பெருகவேண்டுமென்றால், தொழில்துறை அதிலும் குறிப்பாக குறு, சிறு, நடுத்தர தொழில்கள் பெருமளவில் வளர்ந்தால்தான் வேலைவாய்ப்புகள் பெருகும். கனரகதொழில்கள் வளர்ந்தால் எல்லாமே எந்திரமயமாகியிருக்கும் நிலையில் உற்பத்திபெருகும். ஆனால், அந்தளவிற்கு வேலைவாய்ப்பு பெருகும் என்று சொல்லமுடியாது. 

மத்திய அரசாங்கம் கூட இந்த ஆண்டு குறு, சிறு நடுத்தர தொழில்கள் மூலம் 5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறியிருக்கிறது. நாடு முழுவதிலும் இத்தகைய 6 கோடி தொழில் நிறுவனங்களில் 11 கோடி பேர் பணியாற்றுகிறார்கள். இத்தகைய நிறுவனங்கள்தான் மொத்த உற்பத்தியில் 45 சதவீத பங்களிப்பை அளிக்கிறது. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீத ஏற்றுமதி குறு, சிறு நடுத்தரதொழில்கள் மூலமாகத்தான் கிடைத்துள்ளது. 

தமிழ்நாட்டிலும் 15 லட்சத்து 61 ஆயிரம் தொழில்முனைவோர் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்களை நடத்துவதாக பதிவுசெய்துள்ளனர். ரூ.1 லட்சத்து 68 ஆயிரத்து 331 கோடி முதலீட்டில், 99 லட்சத்து 78 ஆயிரம் பேருக்கு இந்த நிறுவனங்கள் வேலைவாய்ப்புகள் அளிக்கிறது. வேலைவாய்ப்புகளை பெருக்க அரசு இதுபோன்ற சிறு தொழிற்சாலைகளை வளர்க்க தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல், நமது பல்கலைக்கழகங்கள் இதுபோன்ற சிறு தொழில்களில் திறன்வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கும் வகையிலான படிப்புகளை உருவாக்கவேண்டும்.

Next Story