வேலையில்லா திண்டாட்ட கொடுமை


வேலையில்லா திண்டாட்ட கொடுமை
x
தினத்தந்தி 16 April 2018 10:15 PM GMT (Updated: 2018-04-16T17:55:31+05:30)

ரெயில்வே துறையில் ஒரு லட்சம் பணிகளுக்கு, 3 கோடி பேருக்குமேல் விண்ணப்பித்துள்ளது, இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் எந்தளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை காட்டுகிறது.

பிளஸ்–2 படிப்பு தகுதியுள்ள பணிகளுக்குக்கூட பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், என்ஜினீயரிங் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பித்திருக்கிறார்கள். தமிழ்நாடும் இதில் சளைத்ததல்ல. அண்மையில் 494 கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கும், 4 ஆயிரத்து 96 இளநிலை உதவியாளர்கள் பணிகளுக்கும், 205 இளநிலை உதவியாளர் பிணையம் பணிகளுக்கும், 48 வரிதண்டலர் பணிகளுக்கும், 74 நிலஅளவையர் பணிகளுக்கும், 156 வரைவாளர் பணிகளுக்கும், 3 ஆயிரத்து 463 தட்டச்சர் பணிகளுக்கும், 815 சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளுக்கும் என 9 ஆயிரத்து 351 அரசுப்பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப்–4 தேர்வு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடந்தது. இந்த பணிகளுக்கு 20 லட்சத்து 83 ஆயிரத்து 152 பேர் விண்ணப்பம் செய்தனர். இவர்களில் ஆண்களைவிட, பெண்களே அதிகளவில் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் 17 லட்சத்து 52 ஆயிரத்து 804 பேர்தான் தேர்வு எழுதினர். இந்த பதவிகளுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி 10–ம் வகுப்பு தேர்வு பெற்றிருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் விண்ணப்பம் செய்தவர்களில் 992 பேர் பி.எச்.டி. பட்டமும், 23 ஆயிரம் பேர் எம்.பில். பட்டமும், 2.5 லட்சம் பேர் முதுகலை பட்டமும் பெற்றவர்கள். இதுதவிர, என்ஜினீயரிங் படித்தவர்களும் ஏராளமானவர்கள் விண்ணப்பம் செய்தனர். என்ஜினீயரிங் பட்டதாரிகளை கழித்தால் மீதம் 6 லட்சத்து 20 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பம் செய்துள்ளார்கள். 

தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும், குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளைப்போல் இல்லாமல் இருந்தது. இந்தத்தேர்வில் எலக்ட்ரானிக் மற்றும் கம்யூனிகே‌ஷன் என்ஜினீயரிங் படித்த மாணவர்களால் மட்டுமே பதில் எழுதக்கூடிய 5ஜி வயர்லெஸ் பற்றிய கேள்விகள் இடம் பெற்றிருந்தன. இந்தியா–மாலத்தீவு இணை ராணுவ ஒத்திகை பற்றிய கேள்வி இடம் பெற்றிருந்தது. 7–12–17 அன்று இந்திய ராணுவத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட ஊர்தி எது? என்று கேட்கப்பட்டது. 

தமிழ்நாட்டைச் சுற்றி எந்த கேள்விகளும் கேட்கப்படவில்லை. இவ்வளவு என்ஜினீயரிங் பட்டதாரிகள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்.பில். படித்தவர்கள், பி.எச்.டி. படித்தவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்திருப்பதை பார்க்கும்போது, தமிழ்நாட்டிலுள்ள வேலையில்லா திண்டாட்டத்தின் கொடூரம் புரிகிறது. என்ஜினீயரிங் பட்டம் பெற்றவர்கள்கூட அவர்கள் படிப்புக்கு தொடர்பு இல்லாத வேலையில் சேரும் கட்டாயம் இருக்கிறது. பாராளுமன்றத்தில் மத்திய தொழிலாளர் துறை தாக்கல் செய்த அறிக்கையில் அண்டை மாநிலங்களைவிட, தமிழ்நாட்டில்தான் வேலையில்லா திண்டாட்டம் அதிகமாக இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த சிறிய பதவிகளை படித்தவர்கள் கொத்திக் கொண்டு போய்விட்டால், 10–ம் வகுப்பு படித்தவர்களுக்கு எப்போது வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது புரியாத புதிராக இருக்கிறது. அரசு உடனடியாக வேலைவாய்ப்பை பெருக்கும் முயற்சிகளில் ஈடுபடவேண்டும். இதற்கு வேகமான தொழில்வளர்ச்சி மற்றும் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி இருந்தால்தான் படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கமுடியும். படிக்காதவர்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்க முடியும். எனவே, தொழில்வளர்ச்சியில் அரசு இன்னும் அதிகமாக முனைப்பு காட்ட வேண்டும்.

Next Story