வேலியே பயிரை மேய்வதா?


வேலியே பயிரை மேய்வதா?
x
தினத்தந்தி 17 April 2018 9:30 PM GMT (Updated: 2018-04-17T18:29:50+05:30)

‘ஒருவருக்கு அவர் தாய் உயிரைக்கொடுக்கிறார். ஆசிரியர் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கிறார்’ என்பது சான்றோர்களின் கருத்து.

‘ஒருவருக்கு அவர் தாய் உயிரைக்கொடுக்கிறார். ஆசிரியர் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கிறார்’ என்பது சான்றோர்களின் கருத்து. மாணவச்செல்வங்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்கவேண்டிய கல்லூரி ஆசிரியை ஒருவரே ஒழுக்கக்கேடான செயல்களுக்கு, தன் மாணவிகளை அழைக்கும் வகையில் ஆசைவார்த்தைகளை கூறி, வலைவீசியதாக ஒரு வெட்கக்கேடான உரையாடல் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவுகிறது. வேலியே பயிரை மேய்வதா?.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறையில் உதவிபேராசிரியராக பணியாற்றியவர் 47 வயதான நிர்மலாதேவி. தன்னிடம் படிக்கும் மாணவிகளுக்கெல்லாம் ஒரு தாயைப்போன்ற வயதில் இருக்கும் நிர்மலாதேவி செய்தகாரியமும், 4 மாணவிகளிடம் அவர்பேசிய உரையாடலும் சமூகவலைத்தளங்களில் வைரலாக வெளிவந்திருக்கிறது. கேட்கவே காதுகூசும் வகையில் உள்ள அந்த உரையாடலில், ‘‘ரகசியமாக சில வி‌ஷயங்களை செய்தால், கல்வியில் 4 பேரையும் பெரிய லெவலுக்கு கொண்டுபோக என்னால் முடியும். பல்கலைக்கழகத்தில் உள்ள உயர்அதிகாரிகள் சில வி‌ஷயங்களை சக்சஸ்புல்லாக முடிப்பதற்கு கல்லூரி மாணவிகளை சில வி‌ஷயங்களுக்காக எதிர்பார்க்கிறார்கள். பணரீதியாகவும் நல்ல சப்போர்ட் இருக்கும். உங்களுக்கு வரும் பணத்தை புதிய வங்கிக்கணக்கு தொடங்கி அதில் போட்டுவைக்கிறேன். என்னையே டெஸ்ட் பண்ணினதற்குப்பிறகு சொன்ன வி‌ஷயம்தான் அது. அவர்கள் உயர்அதிகாரிகள்’’ என்பது போன்ற பல ஆசைவார்த்தைகளை அள்ளிவீசியிருக்கிறார். இதில் அந்த 4 மாணவிகளையும் நிச்சயமாக பாராட்டவேண்டும். நிர்மலாதேவி பேசத்தொடங்கிய உடனேயே பேச இஷ்டமில்லாமல் தடுத்துப்பார்த்திருக்கிறார்கள். இது எங்களுக்கு செட் ஆகாது, இஷ்டமில்லை மேம். நாங்கள் மேற்படிப்பு படிக்கிறதாக இல்லை. இதைப்பற்றி இதற்குமேலே பேசவேண்டாம். எங்களுக்கு இதில் ஆர்வமில்லை மேம். நீங்கள் எத்தனை தடவைகேட்டாலும் இதுதான் எங்கள்பதிலாக இருக்கும். இதுக்குமேலே இதைப்பற்றி பேசவேண்டாம் மேம். எங்களை புரிந்துகொள்ளுங்கள்’’ என்று பேசிய அந்த மாணவச்செல்வங்கள் நிச்சயமாக பாராட்டுக்குரியவர்கள். இதுபற்றி நிர்மலாதேவி, ‘‘பேசியது நான்தான். ஆனால், நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது’’ என்கிறார்.

இந்தச்சம்பவத்தை பார்த்தால் மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு ஒழுக்கம் கற்றுக்கொடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கல்லூரி ஆசிரியர்கள் நியமனத்தில் வேலையில் சேரும்முன்பு அவர்களுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்கவேண்டும். அவ்வப்போது புத்தாக்க பயிற்சிகளையும் அளிக்கவேண்டும். ஏற்கனவே பெண் குழந்தைகளை உயர்படிப்புக்கு அனுப்பத்தயங்கும் பெற்றோர்கள் இந்தச்சம்பவத்தை கேள்விப்படும்போது, இன்னும் நிச்சயமாக பயப்படுவார்கள். பல்கலைக்கழக வேந்தர் என்றமுறையில் கவர்னர் இந்தச்சம்பவம் குறித்து விசாரிக்க திறமையிலும், நேர்மையிலும் சிறந்தவர் என்று பெயர்பெற்று தலைமைசெயலாளர் அந்தஸ்தில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.சந்தானம் தலைமையில் ஒரு உயர்மட்ட விசாரணையை அமைத்துள்ளார். ஆர்.சந்தானம் இந்த வி‌ஷயத்தை தீவிரமாக விசாரித்து, பேராசிரியை கைகாட்டும் நபர்கள் யார்–யார்?, எவ்வளவு நாளாக இந்த ஒழுக்கக்கேடான செயல் நடந்துவருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற கேவலமான செயல்கள் நடக்காமல் இருக்க என்னென்ன செய்யவேண்டும்? என்று ஒரு விரிவான பரிந்துரையை அளிக்கவேண்டும். காவல்துறையும் பேராசிரியை நிர்மலாதேவியை தீவிரமாக விசாரித்து அவரையும், மாணவிகளையும் பயன்படுத்தும் அதிகாரிகள் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்களையும் கண்டுபிடித்து சட்டத்தின்முன் நிறுத்தவேண்டும். ஆர்.சந்தானம் விசாரணை அறிக்கையும், போலீஸ் தொடரும் வழக்கில் தீர்ப்பும் மிகவிரைவில் வெளிவரவேண்டும்.

Next Story