ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாடு


ஏ.டி.எம்.களில் பணம் தட்டுப்பாடு
x
தினத்தந்தி 18 April 2018 9:30 PM GMT (Updated: 2018-04-18T19:35:41+05:30)

நாட்டின் பொருள் பரிமாற்றங்களுக்கும், சேவை பரிமாற்றங்களுக்கும் பணப்புழக்கம் என்பது மிகமிக தேவையான ஒன்றாகும்.

நாட்டின் பொருள் பரிமாற்றங்களுக்கும், சேவை பரிமாற்றங்களுக்கும் பணப்புழக்கம் என்பது மிகமிக தேவையான ஒன்றாகும். என்னதான் டிஜிட்டல் பரிமாற்றம் என்று பேசினாலும், பணப்பரிமாற்றம் இல்லாவிட்டால் எல்லாமே முடங்கிப்போய்விடும். 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி யாரும் எதிர்பார்க்காத வகையில், 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். நவம்பர் 4–ந்தேதி ரூ.17 லட்சத்து 97 ஆயிரம் கோடி அளவில் பணப்புழக்கம் இருந்தது. ஒரே அடியில் 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தவுடன், ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடி மதிப்பில்லாமல் போய்விட்டது. 86.4 சதவீத ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. மக்கள் 14 சதவீதத்திற்கும் குறைவான பணப்புழக்கத்தை வைத்தே எல்லாவற்றையும் செய்யவேண்டியதிருந்ததால், கிராமப்புற பொருளாதாரம், சிறுதொழில், விவசாயம், வணிகம் என்று இந்திய பொருளாதாரத்தின் அடிப்படைகளே அந்தநேரத்தில் சாய்ந்துவிட்டன.

மக்களுக்கும், பொருளாதாரத்திற்கும் பெரியபாதிப்பு ஏற்பட்டது. அந்தப்பாதிப்பிலிருந்து நாடு இன்னமும் முழுமையாக மீளவில்லை. இந்தநிலையில், மீண்டும் அதேபோல ஒரு நிலைமை உருவாகிவிடுமோ? என்று எல்லோரும் அச்சப்படும் வகையில், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலும் சென்னை உள்பட பல இடங்களில் நிறைய ஏ.டி.எம்.களில் பணமில்லாத சூழ்நிலை உருவாகிக்கொண்டிருக்கிறது. சில ஏ.டி.எம்.களில் சீக்கிரம் பணம் தீர்ந்துவிடுகிறது. இதன்காரணமாக மக்களுக்கு ஒரு அச்சமான நிலை ஏற்பட்டுள்ளது. இது திருமண சீசன், கொள்முதல் சீசன், மக்களின் தேவை அதிகரித்துள்ள சூழ்நிலை என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப்பெற்றுக் கொண்டிருக்கலாம் அல்லது 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை நிறுத்தியிருக்கலாம் என்று கடந்த டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட ஸ்டேட் வங்கியின் ஆராய்ச்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவலும் குறிப்பிடத்தக்கது.

ஏனெனில், பல ஏ.டி.எம்.களில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வசதிகளை வழங்கும் கேசட்டுகளை, 200 ரூபாய் வழங்கும் கேசட்டுகளாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். நிதி அமைச்சகமோ, கடந்த 3 மாதங்களாகவே மக்கள் பணம் எடுக்கும் தேவை அதிகரித்துக்கொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறது. இப்போது முன்பைவிட அதிகமாக ரூ.18 லட்சத்து 30 ஆயிரம் கோடி பணப்புழக்கம் இருக்கிறது என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது. அதுபோல இந்தமாதம் முதல் 13 நாட்களில் ரூ.45 ஆயிரம் கோடி பணம் சப்ளை அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் நிதிஅமைச்சம் கூறியுள்ளது. 500 ரூபாய் நோட்டுகளை வழக்கத்தைவிட, 5 மடங்கு அதிகமாக அச்சடிக்க இருக்கிறோம் என்று பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திரகார்க் தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி, நாட்டில் நிதிநெருக்கடிநிலை ஏற்பட்டுவிட்டது என்று கூறுகிறார். ஆக, மக்களுக்கு இப்போது பெரியசந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவ்வளவு ரொக்கப்பணம் தட்டுப்பாடு வரும்வரை ரிசர்வ் வங்கியும், மத்திய அரசாங்கமும் என்ன செய்தது? என்பதுதான் மக்கள் கேள்வி. மீண்டும் பழையநிலைமை திரும்பாத வகையில், ரூபாய் நோட்டு தட்டுப்பாடு வரவேவராது என்ற உறுதியையும் தந்து, ஏ.டி.எம்.மில் பணத்தட்டுப்பாடே இல்லாதவகையில் அனைத்து ஏற்பாடுகளையும் உடனடியாக செய்யவேண்டும்.

Next Story