கசக்கி எறியப்பட்ட பிஞ்சுமலர்


கசக்கி எறியப்பட்ட பிஞ்சுமலர்
x
தினத்தந்தி 19 April 2018 9:30 PM GMT (Updated: 2018-04-19T19:55:36+05:30)

மகாகவி பாரதியார், ‘பாரத ஜனங்களின் தற்கால நிலைமை’ என்ற தலைப்பில் எழுதிய ஒரு பாடல் இன்றைக்கு நடக்கும் நிலைமைகளை பார்க்கும்போது, ஒட்டுமொத்த பாரத மக்களும் பாடவேண்டிய நிலை இருக்கிறது.

காகவி பாரதியார், ‘பாரத ஜனங்களின் தற்கால நிலைமை’ என்ற தலைப்பில் எழுதிய ஒரு பாடல் இன்றைக்கு நடக்கும் நிலைமைகளை பார்க்கும்போது, ஒட்டுமொத்த பாரத மக்களும் பாடவேண்டிய நிலை இருக்கிறது.

‘‘நெஞ்சு பொறுக்கு திலையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்’’...என்பதுதான் அந்தப்பாடல். ஜம்மு–காஷ்மீர் மாநிலத்திலுள்ள கதுவா கிராமத்தைச்சேர்ந்தவர் முகம்மது யூசுப் புஜ்வாலா. இவர் அங்குள்ள பகர்வால் சமுதாயத்தைச்சேர்ந்தவர். இது ஒரு நாடோடி சமுதாயம். ஆடு, மாடு, குதிரைகளை வளர்த்து பிழைக்கும் சமுதாயம். பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் முகம்மது யூசுப் தன் தாய், 2 மகன்கள், ஒருமகளை இழந்ததால், தன் மைத்துனியின் 3 மாதக்குழந்தையை வாங்கி தத்தெடுத்து வளர்த்தார். அந்த குழந்தையை மிகச்செல்லமாக வளர்த்திருக்கிறார். ஜம்முவில் பெரும்பான்மையாக வசிக்கும் மற்றொரு சமூகத்தினர், இந்த நாடோடி குடும்பங்களை தங்கள்பகுதியில் வசிக்கக்கூடாது, வெளியேறி செல்லவேண்டும் என்று வெகு நாட்களாகவே அதட்டி, மிரட்டி அச்சுறுத்தி வந்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், முகம்மது யூசிப்பின் வளர்ப்பு மகளான 8 வயது சிறுமி தாங்கள் வளர்த்த 2 குதிரைக்குட்டிகளை தேடிக்கொண்டு, அந்தப்பகுதியில் உள்ள குளத்துக்கரைக்கு சென்றிருக்கிறாள். அதன்பிறகு அவளை காணவில்லை. ஒருவாரம் கழித்து அந்த ஊரிலுள்ள ஓய்வுபெற்ற அரசு அலுவலர் சஞ்சிராம் என்பவர் வீட்டின் அருகில் உடலெல்லாம் சிதைக்கப்பட்டு, நெருப்பு காயங்களோடு கை–கால்கள் முறிக்கப்பட்டு, முகம் முழுவதும் காயத்தோடு அந்த சிறுமி பிணமாக கிடந்திருக்கிறாள். ஆரம்பத்தில் போலீசார் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. 3 மாதங்களுக்குப்பிறகு காவல்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தபிறகு, இது நாடு முழுவதும் பரபரப்பான செய்தியாக வந்தபோது போலீஸ் விசாரணையை தொடங்கியது. சஞ்சிராம் உள்பட 8 பேர் கோவிலில் வைத்து இந்த கொடூர செயலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதில் மிகவேதனை என்னவென்றால், கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் 2 பா.ஜ.க. மந்திரிகளும் கலந்துகொண்டதுதான். இப்போது அவர்கள் மந்திரிசபையில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளனர். நாடுமுழுவதும் கொந்தளித்துக்கொண்டிருந்தது. இந்த சம்பவம் பெரும்தீயாக எரிந்துகொண்டிருக்கின்ற நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் மைனர் பெண்ணை கற்பழித்ததாக ஒரு பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில், கிரிக்கெட் ஸ்டேடியம் அருகிலுள்ள புதரில் 11 வயது சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறாள். ஆக, விவரம் அறியாத பிஞ்சுமலர்கள் இவ்வாறு கசக்கி எறியப்படும் சம்பவங்கள் அதிகமாக நடந்துகொண்டிருக்கிறது. காஷ்மீர் முதல்–மந்திரி இந்த வழக்கை விசாரிக்க விரைவுகோர்ட்டு அமைத்து 90 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது சற்று ஆறுதலை தருகிறது. மத்தியமந்திரி மேனகாகாந்தி, 12 வயதுக்கு குறைந்தவர்களை கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை விதிக்கும்வகையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தடுப்புசட்டத்தில் திருத்தம் கொண்டுவரவேண்டும் என்று கூறியிருக்கிறார். இதே கருத்து நாடுமுழுவதும் இப்போது எதிரொலித்திருக்கிறது. இந்தச்சம்பவத்தில் குற்றவாளிகள் யாரும் தப்பமுடியாது என்று பிரதமர் கூறியிருக்கிறார். தண்டனை மட்டும் இதுபோன்ற குற்றங்களை தடுத்துவிடுமா? அல்லது வேறு எந்தவகையான நடவடிக்கைகளை அரசும், சமுதாயமும் எடுக்கவேண்டும் என்பதை தீவிரமாக ஆராய்ந்து, இனி ஒருபோதும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத நிலையை உருவாக்கவேண்டும்.

Next Story