ஒரே தேசம்! ஒரே தேர்தல்!


ஒரே தேசம்! ஒரே தேர்தல்!
x
தினத்தந்தி 20 April 2018 9:30 PM GMT (Updated: 2018-04-20T18:25:07+05:30)

கடந்த சில ஆண்டுகளாகவே நாடாளுமன்றத் துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்து எழுந்து வந்தது.

டந்த சில ஆண்டுகளாகவே நாடாளுமன்றத் துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரேநேரத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பிலிருந்து எழுந்து வந்தது. பிரதமர் நரேந்திரமோடியும் சமீபத்தில் இவ்வாறு ஒரேநேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடத்தவேண்டும் என்ற தன் எண்ணத்தை தெரிவித்து, பா.ஜ.க. முதல்–மந்திரிகள் கூட்டத்தில் விவாதிக்க ஏற்பாடு செய்தார். இந்த ஆண்டு ஜனாதிபதி உரையிலும் இந்த கருத்து விரிவாக பேசப்பட்டது. இதை முழுமையாக ஆதரித்த ஜனாதிபதி, இதுகுறித்து ஒரு நீண்ட விவாதம் நடத்தி, அனைத்து அரசியல் கட்சிகளிடையே ஒரு ஒருமித்த கருத்துவேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். 

ஒரே தேசம்! ஒரே தேர்தல்! என்று பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டுவந்த இந்த பொருள் பற்றி சட்டகமி‌ஷனின் தலைவரான நீதிபதி பி.எஸ்.சவுகான் மற்றும் கமி‌ஷனின் அனைத்து உறுப்பினர் களும் கலந்துகொண்டு விரிவாக விவாதித்து ஒரு நகல் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. சட்டகமி‌ஷன்தான் மத்திய அரசாங்கத்தின் உயர்ந்த சட்ட ஆலோசனைக்குழு. இந்த வெள்ளை அறிக்கை விரைவில் அரசியல் சட்டநிபுணர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், அதிகாரிகள், மாணவர்கள் போன்றவர்களுக்கு அனுப்பப்பட்டு, அவர்கள் கருத்துகளும், ஆலோசனைகளும் மே 8–ந்தேதிக்குள் சட்ட கமி‌ஷனுக்கு வரவேண்டும் என்று கேட்கப்பட இருக்கிறது. 2021–ம் ஆண்டுவரை தேர்தலை சந்திக்க இருக்கும் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்களை, 2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு நடத்தவும், அதற்குப்பிறகு தேர்தல் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தல்களை 2024–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு நடத்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, ஆந்திரா, அருணாசலபிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கர், அரியானா, கேரளா, மத்திய பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலுங்கானா, மேற்குவங்காளம், டெல்லி, புதுச்சேரி, ஜம்மு–காஷ்மீர், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய 19 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்களையும், 2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு நடத்தவும், மற்ற மாநிலங்களுக்கு 2024–ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலோடு நடத்தவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஏதாவது மாநிலங்கள் அல்லது நாடாளுமன்றம் இடையிலேயே கலைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டால், அந்த 5 ஆண்டுகளில் மீதமுள்ள காலத்திற்கு மட்டும் தேர்தல் நடத்துவது என்றும் அதில் ஒரு கருத்து இருக்கிறது. இவ்வாறு ஒரேநேரத்தில் தேர்தல் நடத்த சில மாநிலங்களின் பதவிகாலத்தை நீட்டிக்கவும், சில மாநிலங்களின் பதவிகாலத்தை குறைக்கவும் வேண்டியதிருக்கிறது. அந்தவகையில், அரசியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் நாடாளுமன்ற, சட்டசபை நடைமுறை விதிகளில் திருத்தங்கள் கொண்டுவர வேண்டியதிருக்கிறது. நிச்சயமாக இது ஒரு நல்ல யோசனை. இதன்மூலம் அரசின் நிதிச்செலவை குறைக்க முடியும். ஒவ்வொரு நேரமும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து வளர்ச்சித் திட்டங்களை அறிவிக்கவோ, புதிய செயல்திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை தவிர்க்கப்படும். ஜனாதிபதி கூறியதுபோல, அடிக்கடி தேர்தல் நடத்துவது என்பது அரசுக்கும், மக்களுக்கும் பெரிய சுமைதான். எனவே, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மாநில அரசுகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் ஒருமித்த கருத்தைக்கொண்டு ஒரேநேரத்தில் தேர்தல் என்ற முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Next Story