உள்ளாட்சி தேர்தல் இப்போது இல்லையா?


உள்ளாட்சி தேர்தல் இப்போது இல்லையா?
x
தினத்தந்தி 23 April 2018 10:00 PM GMT (Updated: 23 April 2018 5:32 PM GMT)

உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இருந்தால்தான், மக்களின் பல அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கமுடியும்.

னநாயகத்தின் அஸ்திவாரம் என்னவென்றால், ‘உள்ளாட்சி அமைப்புகள்’ தான். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தியாக வேண்டும். தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கெல்லாம் கடந்த 2016–ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24–ந்தேதியுடன் பதவிகாலம் முடிவடைந்தது. அக்டோபர் 17 மற்றும் 19–ந்தேதிகளில் தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்தநேரத்தில் தி.மு.க. சார்பில் பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது என்று வழக்கு தொடர்ந்ததால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. அதன்பிறகு அரசும் வார்டுகளை வரையறை செய்யப்போகிறோம் என்றுசொல்லி ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. 

2011–ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர், பெண்கள் ஆகியோர்களுக்கான வார்டுகளை ஒதுக்கீடு செய்வதற்காகவும் ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளிலும், வார்டுகளின் தொகுதி வரையறைகளை உருவாக்குவதற்காகவும் பரிந்துரை செய்வதற்கு தொகுதிவரையறை ஆணையம் ஒன்றை அமைப்பதாக கூறி, அந்த சட்டத்தை அரசு நிறைவேற்றி தொகுதிவரையறை ஆணையமும் அமைத்துவிட்டது. இனி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் உள்ள வார்டுகளின் எல்லைகளை மறுவரையறை செய்தபிறகுதான் தேர்தல் நடத்தமுடியும். இப்போது மறுவரையறை ஆணையம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் வார்டுவரையறை செய்வதற்காக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து வந்த 8 ஆயிரத்து 9 ஆட்சேபணைகள் மற்றும் கருத்துருக்களில், 3 ஆயிரத்து 642 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 4 ஆயிரத்து 367 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. சென்னை மாநகராட்சி தவிர, மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 10 ஆயிரத்து 952 ஆட்சேபணை மனுக்கள் மற்றும் கருத்துருக்களில், 3 ஆயிரத்து 933 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இன்னும் 7 ஆயிரத்து 19 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. இதேபோல, சென்னை மாநகராட்சியை பொறுத்தமட்டில், 586 ஆட்சேபணைகள் கருத்துருக்களில் 190 மனுக்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டும், 20 மனுக்கள் பகுதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டும், மீதமுள்ள 376 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த மனுக்களையெல்லாம் பரிசீலனை செய்தபிறகுதான், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வாசல் திறக்கப்படும். இந்த ஆட்சேபணைகள் மற்றும் கருத்துருக்களின் அடிப்படையில் வார்டுகளில் மாற்றங்கள் செய்யப்படவேண்டும். அதற்குபிறகும் நிறைய நடைமுறைகள் இருக்கின்றன. இதையெல்லாம் பார்த்தால், இப்போதைக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லையென்று தெரிகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், மத்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவேண்டிய பெருமளவிலான நிதி கிடைக்காமல் போகும்நிலை ஏற்படும். உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதிகள் இருந்தால்தான், மக்களின் பல அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கமுடியும். எனவே, மறுவரையறை பணிகளுக்காக ஆணையத்திற்கு வந்துள்ள ஆட்சேபணைகள், கருத்துருக்களை எவ்வளவு விரைவில் பரிசீலனை செய்து, அரசுக்கு பரிந்துரை அனுப்ப முடியுமோ? அவ்வளவு விரைவாக அனுப்பவேண்டும். அரசும் உடனடியாக இடஒதுக்கீடுகள் கூடிய மறுவரையறை ஏற்பாடுகளை செய்து ஆணை வெளியிடவேண்டும். ஜனநாயகத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த, மக்கள் வசதிகளைப்பெற உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்தவேண்டும்.

Next Story