சூரிய மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு


சூரிய மின்சார உற்பத்தியில் தமிழ்நாடு
x
தினத்தந்தி 24 April 2018 9:30 PM GMT (Updated: 2018-04-25T00:00:17+05:30)

‘மின்சாரம் இல்லாமல் வாழ்க்கையே இல்லை’ என்பதுதான் இப்போதைய யதார்த்த நிலைமை. ஒரு மாநிலத்தின் தொழில்வளர்ச்சிக்கு முக்கியமாக தேவைப்படுவது மின்சாரம்.

‘மின்சாரம் இல்லாமல் வாழ்க்கையே இல்லை’ என்பதுதான் இப்போதைய யதார்த்த நிலைமை. ஒரு மாநிலத்தின் தொழில்வளர்ச்சிக்கு முக்கியமாக தேவைப்படுவது மின்சாரம். அனல் மின்சார நிலையம், புனல் மின்சார நிலையம், அணுமின் நிலையம் போன்ற மரபுசார்ந்த மின்உற்பத்தி நிலையங்களும், சூரியவெப்ப மின்சார உற்பத்தி நிலையம், காற்றாலை மின்உற்பத்தி நிலையங்கள் போன்றவை மூலமாக மரபுசாரா மின்உற்பத்தி நிலையங்களும் மின்சார சப்ளை செய்கிறது. இப்போது உலகம் முழுவதும் மரபுசாரா மின்உற்பத்தியில் அதிக கவனம் செலுத்திவருகிறார்கள். ஏனெனில், மரபுசாரா மின்உற்பத்தி நிலையங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. முதலில் முதலீடு அதிகமாக இருந்தாலும், அன்றாட நடைமுறை செலவுகள் அதில் இருக்காது. எனவேதான் உலகத்தின் கவனம் சூரியவெப்ப மின்சக்தி உற்பத்தியில் அதிகமாக இருக்கிறது.

2016-ம் ஆண்டுவரை இந்தியாவில் தமிழ்நாடுதான் சூரியவெப்ப மின்உற்பத்தியில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் தற்போது நாட்டில் 5-வது இடத்திற்கு போய்விட்டது. இப்போது நாட்டிலேயே முதல் இடத்தை கர்நாடகாவும், 2-வது இடத்தை தெலுங்கானாவும், 3-வது, 4-வது இடங்களை ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களும், 5-வது இடத்தைத்தான் தமிழ்நாடும் பெற்றிருக்கிறது. 2017-ம் ஆண்டு கடைசியில் தமிழ்நாடு 1,720 மெகாவாட் சூரிய மின்உற்பத்தி தயாரித்துள்ளது. இந்தநிலையில், ஒரே பாய்ச்சலாக கர்நாடகம் கடந்த மார்ச் மாதத்தில் உலகிலேயே மிகப்பெரிய சூரியவெப்ப மின்உற்பத்தி நிலையத்தை தொடங்கி பெரிய சாதனையை படைத்துள்ளது. கர்நாடகாவில் உள்ள தும்கூரு மாவட்டத்தில் ரூ.16 ஆயிரத்து 500 கோடி செலவில், 2,000 மெகாவாட் சூரியஒளி மின்உற்பத்தி செய்யும் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. ‘சக்தி ஸ்தலம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த மின்உற்பத்தி நிலையம், 5 கிராமங்களில் உள்ள 13 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பரந்துவிரிந்து அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சூரியவெப்ப மின்சார கொள்முதலுக்கு முன்பு தனியார் சூரியஒளி வெப்ப உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து யூனிட்டுக்கு ரூ.7.01 கொடுக்கவேண்டிய நிலை இருந்தது. இப்போது ரூ.3.47-க்கு சப்ளை செய்ய நிறுவனங்கள் தயாராக இருக்கிறது. இது இன்னும் குறைய வாய்ப்பிருக்கிறது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவில் உள்ள செங்கப்படை என்ற ஊரில் அதானி நிறுவனம் 648 மெகாவாட் சூரியவெப்ப மின்உற்பத்தி நிலையம் தொடங்கியபிறகு பெரியளவில் எந்த மின்உற்பத்தி நிலையமும் தொடங்கப்படவில்லை. 2012-ம் ஆண்டு சூரியவெப்ப மின்சக்தி கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த கொள்கையை வெளியிட்டபோது, 3 ஆண்டுகளில் அதாவது 2015-ம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு ஆயிரம் மெகாவாட் சூரியவெப்ப மின்சக்தி என்ற கணக்கில், 3 ஆயிரம் மெகாவாட் சூரியவெப்ப மின்சக்தி உற்பத்தி செய்து, தமிழ்நாட்டை உலகில் மிக முக்கியமான மின்உற்பத்தி தளமாக ஆக்குவதற்கு உறுதி அளித்தார். ஆனால், 6 ஆண்டுகளாகியும் இன்னமும் அந்த இலக்கை எட்டமுடியவில்லை. வீடுகளில் பயன்பாட்டுக்காக சூரியவெப்ப மின்சார உற்பத்தியில் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவரும் தமிழ்நாடு மின் பகிர்மானக்கழகம், ஜெயலலிதாவின் கனவு திட்டமான, ‘சூரிய வெப்ப மின்உற்பத்தி’ திட்டத்தை நிறைவேற்றுவதில் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தவேண்டும்.

Next Story