குட்கா வழக்கில் வேகமான சி.பி.ஐ. விசாரணை


குட்கா வழக்கில் வேகமான சி.பி.ஐ. விசாரணை
x
தினத்தந்தி 27 April 2018 9:30 PM GMT (Updated: 2018-04-28T00:33:45+05:30)

தமிழக அரசியலில் அனல்பறக்கும் வகையில் பேசப்பட்டு வந்த குட்கா ஊழல் புகார் தொடர்பாக ஒரு பெரிய பிரச்சினையை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைத்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் கொண்ட பெஞ்சு, தமிழக அரசியலில் அனல்பறக்கும் வகையில் பேசப்பட்டு வந்த குட்கா ஊழல் புகார் தொடர்பாக ஒரு பெரிய பிரச்சினையை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைத்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புகையிலை பொருட்களே புற்றுநோய்க்கு முக்கியகாரணம். எனவே, புகையிலையை புகைப்பதோ, மெல்லுவதோ கூடாது என்று உலகம் முழுவதும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக குட்கா, பான்மசாலா போன்ற போதைப்பொருட்களுக்கு ஏராளமானோர் அடிமையாகிக்கொண்டிருப்பது தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், மருத்துவ நிபுணர்களும் குட்கா பான்மசாலா போன்றவற்றை தடை செய்யவேண்டும் என்று மத்திய-மாநில அரசுகளை நீண்டகாலமாக கேட்டுக்கொண்டு வந்தனர். உச்சநீதிமன்றமும், மத்திய அரசாங்கமும் குட்கா போன்ற போதைப் பொருட்களை 2011-ம் ஆண்டிலிருந்து தடை செய்து உத்தரவிட்டது. மத்திய அரசாங்கம் தடை செய்த பிறகும், தமிழ்நாட்டில் தாராளமாக குட்கா, பான்மசாலா புழங்கி வந்தது. இந்தநிலையில், 2013-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா குட்கா, பான்மசாலாவுக்கு தடை விதித்து உத்தர விட்டார். இந்த தடை அமலுக்கு வந்தது. ஆனால் தடை அமலில் இருந்த நேரத்திலும், கடைகளில் குட்கா, பான்மசாலா பாக்கெட்டுகள் தொங்கவிடப்பட்டு, தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

2016-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வருமான வரித்துறையினர் எம்.டி.எம். என்ற பான்மசாலா நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு கிடங்கிலும், அதன் உரிமையாளரான மாதவராவ் வீட்டிலும் வரிஏய்ப்பு இருக்கிறதா? என்ற சோதனையில் ரூ.250 கோடி அளவிற்கு வரிஏய்ப்பு இருந்தது கண்டுபிடிக் கப்பட்டது. அப்போது அங்கு கைப்பற்றப்பட்ட டைரியில் இந்த பொருட்களை விற்பனை செய்ய, சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், காவல்துறை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் பல உயர் அதிகாரி களுக்கு பணம் கொடுத்ததாக நேரடியாகவும், சங்கேத வார்த்தைகளாலும் எழுதப்பட்டிருந்தது கைப்பற்றப் பட்டது. வருமான வரித்துறையினர் இதுபோன்ற லஞ்ச பரிமாற்றமாக ரூ.39 கோடியே 91 லட்சம் கொடுத்ததாக கிடைத்த தகவலை அப்போதைய போலீஸ் டி.ஜி.பி. அசோக்குமாருக்கும், தலைமை செயலாளர் ராமமோகனராவுக்கும் அனுப்பியிருந்தனர்.

2017 ஜூலை மாதத்தில் இந்த குட்கா ஊழல் வழக்கு லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுப்பப்பட்டது. தொடர்ந்து தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இப்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. வழக்கில் குறிப்பிடப் பட்டுள்ள அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று தி.மு.க. போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால் அ.தி.மு.க. தரப்பில் அமைச்சர் ஜெயக்குமார், புகார்தான் சொல்லப்படுகிறதே தவிர நிரூபிக்கப்படவில்லை. எனவே, ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்கிறார். ஆக, இப்போது இந்த முழுவிவகாரமும் சி.பி.ஐ. கையில்தான் இருக்கிறது. சி.பி.ஐ. காலம் தாழ்த்தாமல் திறமையான அதிகாரிகள் குழுவை நியமித்து, இதில் உண்மை என்ன? என்று உலகுக்கு காட்டுவதற்கு உடனடியாக விசாரணையை தொடங்கி முடிக்கவேண்டும் என்பதுதான் பொதுமக்களின் கோரிக்கையாகும்.

Next Story