கேட்டது மலையளவு; கிடைத்தது கடுகளவு


கேட்டது மலையளவு; கிடைத்தது கடுகளவு
x
தினத்தந்தி 29 April 2018 9:30 PM GMT (Updated: 2018-04-29T17:04:59+05:30)

சில இயற்கை சீற்றங்கள் எத்தனை ஆண்டுகாலம் ஆனாலும், மக்கள் மனதில் இருந்து அகலுவதில்லை. அதனால்தான் கடந்த 1964–ம் ஆண்டு டிசம்பர் 22–ந்தேதி நடந்த ‘தனுஷ்கோடி புயல் பாதிப்பு’ இன்னமும் மாறவில்லை.

 2004–ம் ஆண்டு டிசம்பர் 26–ந்தேதி நடந்த சுனாமியின் சுவடுகள் இன்னும் மக்களை விட்டுவிலகவில்லை. அதுபோன்ற ஒரு புயல்சேதம் கன்னியாகுமரி மாவட்டத்திலும், கேரளாவிலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29, 30–ந்தேதி வீசிய ‘ஒகி’ புயலால் உருவானது. அந்த சோகத்திலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை. இந்தப்புயலினால் 23 மீனவர்கள் மரணம் அடைந்தனர். இன்னும் 234 மீனவர்கள் கரைதிரும்பவில்லை. மீனவர்களுக்கும் பாதிப்பு, அந்த மாவட்டத்தில் உள்ள விவசாயத்திற்கும் பெரும்பாதிப்பு ஏற்பட்டது. பயிர்கள் எல்லாம் அழிந்தது. வீடுகள், சாலைகள், மின்கம்பங்கள் பெரும் சேதமாகியுள்ளன.

2016–ம் ஆண்டு டிசம்பர் 12–ந்தேதி வீசிய ‘வார்தா’ புயலாலும், வறட்சியாலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ‘வார்தா’ புயல் பாதிப்புக்காக ரூ.22,573 கோடியும், வறட்சி நிவாரண பணிகளுக்காக ரூ.39,565 கோடியும் தரவேண்டும் என்று மத்திய அரசாங்கத்திடம், தமிழக அரசு கோரியது. ஆனால் மத்திய அரசாங்கம் தந்தது எவ்வளவு தெரியுமா?, புயல் நிவாரணத்திற்கு ரூ.266 கோடியே 17 லட்சமும், வறட்சி நிவாரணமாக ரூ.1,748 கோடியே 28 லட்சம் மட்டும்தான். இதுபோல, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட வெள்ளபாதிப்பினால் ஏற்பட்ட சீரமைப்பு பணிகளுக்காக ரூ.4 ஆயிரத்து 47 கோடியும், ‘ஒகி’ புயல் பாதிப்புகாக ரூ.5,255 கோடியும் வழங்கவேண்டும் என்று மத்திய அரசாங்கத்திடம், தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், ‘ஒகி’ புயல் மற்றும் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புக்காக தமிழகத்திற்கு ரூ.133 கோடியே 5 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

கேட்டது மலையளவு, ஆனால் கிடைத்ததோ கடுகளவு மட்டுமே. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் புயல், வெள்ளம், வறட்சி நிவாரணத்திற்காக மத்திய அரசாங்கத்திடம், தமிழகம் ரூ.97 ஆயிரத்து 352 கோடி கேட்டுள்ளது. ஆனால் கிடைத்ததோ ரூ.3,884 கோடிதான். ஆக, ஒவ்வொருமுறையும் மத்திய அரசாங்கத்திடம், தமிழக அரசு பாதிப்புகளுக்காக நிவாரணதொகை கேட்பதும், அதை ஏற்று மத்தியஅரசாங்கம் உயர்மட்டக்குழுவை அனுப்புவதும், தொடர்ந்து மத்திய அரசாங்கம் ஒரு சொற்பத்தொகையை வழங்குவதும் ஒரு சம்பிரதாயமாகவே போய்விட்டது. இதற்கு காரணம் என்னவென்று முதல்–அமைச்சரே சட்டசபையில் கூறியிருக்கிறார். தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி உதவிக்கோரி மாநில அரசுகள் கேட்கும் கோரிக்கைகளில் தற்காலிக நிவாரணத்திற்கு மட்டுமே மத்திய அரசாங்கத்தால் நிதி ஒதுக்கப்படுகிறது. நிரந்தரபணிகளுக்கு திட்டங்களை சார்ந்துதான் நிதி பெறப்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இது காலம்காலமாக பின்பற்றப்படும் நடைமுறையாகும். இந்தநிலையில், கூடுதல் நிதியை மாநிலங்கள் பெறும்வகையில் பேரிடர் நிவாரண நிதி விதிகளை திருத்தவேண்டும் என்று மாநிலங்கள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று அதை பரிசீலிக்க, மத்திய அரசாங்கம் ஒருகுழுவை நியமித்துள்ளது. இந்தக்குழு விரைவில் தன்பணிகளை முடித்து தகுந்தவகையில் நடைமுறைகள் திருத்தப்படவேண்டும். இயற்கை இடர்பாட்டு நிவாரணங்களுக்காக தமிழக அரசு கேட்கும் முழுத்தொகையை தராவிட்டாலும், கணிசமான தொகையாவது மத்திய அரசாங்கம் தர வேண்டும்.

Next Story