செம்மொழியான நம் தமிழ் மொழியாம்..!


செம்மொழியான நம் தமிழ் மொழியாம்..!
x
தினத்தந்தி 1 May 2018 9:30 PM GMT (Updated: 1 May 2018 6:51 PM GMT)

செம்மொழியான நம் தமிழ் மொழி மத்திய அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்டதோ? என்றவகையில் நேற்று முன்தினம் பெரியசர்ச்சை கிளம்பியது.

 2018–ம் ஆண்டிற்கான ஜனாதிபதி விருது, ‘மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான்’விருது ஆகியவற்றுக்கு சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி, பாரசீகம் மற்றும் செம்மொழி அந்தஸ்துபெற்ற ஒரியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சிறந்த அறிஞர்களுக்கு வழங்குவதற்காக பெயர்களை பரிந்துரை செய்யுமாறு மத்திய அரசாங்க மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியது. இதில் செம்மொழியான நம் தமிழ் மொழி பெயர் இடம்பெறவில்லை என்ற கருத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சி தலைவர்கள் கடும்கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டனர். இதற்கு மறுப்புதெரிவித்த தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ்நாட்டில், தமிழுக்கென ‘செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம்’ தனியாக நிறுவப்பட்டுள்ளது. மற்றமொழிகளுக்கு இவ்வாறு தனிநிறுவனம் இல்லை. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சார்பில் தனியாக ஆண்டுதோறும் ‘தொல்காப்பியர் விருது’, ‘குறள்பீடவிருது’ போன்ற விருதுகள் ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்றன என்று அறிக்கை வெளியிட்டது. இது தமிழ்நெஞ்சங்களுக்கு மனநிறைவு அளிக்கிறது.

ஒருமொழி செம்மொழியாக தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைத்தன்மை, மொழிக்கோட்பாடு, இலக்கியவளம், உயர்சிந்தனை, பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு ஆகிய பதினோரு தகுதிகளை பெற்றிருந்தால்தான் அது செம்மொழியாகும். இந்த பதினோரு தகுதிகளை மட்டுமல்ல, இந்த தகுதிகளுக்கெல்லாம் மேலான, மேன்மையான தகுதிகளைப்பெற்ற மொழிதான் தமிழ்மொழி. 2010–ம் ஆண்டு ஜூன் மாதம் 23–ந்தேதியில் இருந்து 27–ந்தேதி வரை கோவையில், அப்போது முதல்–அமைச்சராக இருந்த கருணாநிதியால் உலகத் தமிழ்செம்மொழி மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டுக்காக கலைஞர் கருணாநிதி, ‘செம்மொழியான நம் தமிழ் மொழியாம்’ என்று ஒரு பாடலை எழுதினார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து, ஏராளமான பாடகர்கள் பாடிய இந்தப்பாடல் ஒவ்வொரு தமிழனின் மனதிலும் தமிழ்உணர்வை தட்டிஎழுப்பியது.

இந்தவிழாவில் கருணாநிதி பேசும்போது, ‘‘தமிழ் செம்மொழியே என முதன்முதலில் குரல்கொடுத்தவர் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் என்றும், முதன்முதலில் சொன்ன வெளிநாட்டு அறிஞர் ராபர்ட்கால்டுவெல் என்றும், முழங்கினார். அதன்பின்பு 100 ஆண்டுகளாக தமிழ்மொழியை செம்மொழியாக்க வேண்டும் என்று குரல்கொடுத்த பல அறிஞர்களின் பெயர்களை பட்டியலிட்ட கருணாநிதி, மத்தியில் சோனியாகாந்தியின் வழிகாட்டுதலிலும், மன்மோகன்சிங் தலைமையிலும் நடந்த ஐக்கியமுற்போக்கு கூட்டணி அரசுதான் 12.10.2004–அன்று தமிழ்மொழியை செம்மொழி என பிரகடனப்படுத்தியது என்று நன்றியோடு நினைவு கூறினார். அந்தநேரத்தில் கருணாநிதி தனக்கு, சோனியாகாந்தி எழுதிய கடிதத்தை படித்துக்காட்டினார். இந்தச்சாதனைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் காரணம் என்றாலும்கூட குறிப்பாகவும், சிறப்பாகவும் நீங்கள்தான் இதற்கு காரணம். உங்கள் தலைமையிலே உள்ள தி.மு.க.தான் இதற்கு காரணம்’’ என்று சோனியாகாந்தி எழுதியிருந்தார். நான் உங்களுக்கு சொல்கிறேன். இதை நான் ஒரு கடிதமாக அல்ல; காலாகாலத்துக்கும், இன்னும் நூறாண்டு காலம், இருநூறாண்டு காலத்துக்கும்பிறகு என் கொள்ளுப்பேரன் எடுத்துப்படித்து நம்முடைய தாத்தா கட்டிக்காத்த செப்பேடு இது! என்று பாராட்டுகிற அளவுக்கு ஆகவேண்டும்’’ என்று கருணாநிதி கூறினார். அவருடைய கொள்ளுப்பேரன் பேத்தி மட்டுமல்ல தமிழ்சமுதாயமே தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தமிழை செம்மொழியாக்கியதற்காக காலம் காலமாக நன்றி கடன்பட்டிருக்கிறது.

Next Story