ஐ.ஏ.எஸ். ஆக ஏழ்மை தடையில்லை


ஐ.ஏ.எஸ். ஆக ஏழ்மை தடையில்லை
x
தினத்தந்தி 3 May 2018 12:26 AM GMT (Updated: 2018-05-03T05:56:09+05:30)

வேலைவாய்ப்புகள் தேடும்போது, அரசுப்பணிகளில் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், படித்து முடித்தவர்கள் முதல் தேடலாக அரசுப்பணியைத்தான் வைத்திருக்கிறார்கள்.

எத்தனை அரசு பணிகள் இருந்தாலும், ஒவ்வொரு துறையிலும் தலைமை பொறுப்புகளில் உள்ளவர்கள் ‘சிவில் சர்வீசஸ்’ என்று கூறப்படும் அகில இந்திய பணிகள் தேர்வு பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள். சிவில் சர்வீசில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற 24 வகை பணிகளுக்கான தேர்வுகள் நடக்கிறது.

அந்தவகையில் 2017-ம் ஆண்டுக்காக 990 பணிகளுக்கு தேர்வு நடந்தது. இதற்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முதல்நிலை என்று கூறப்படும் ‘பிரிலிமினரி’ தேர்வுக்கு அழைக்கப்பட்டார்கள். அதில் தேர்வுபெற்ற 13 ஆயிரத்து 366 பேர் மெயின்தேர்வு என்று அழைக்கப்படும் முதன்மைதேர்வை எழுதினார்கள். அதில் தேர்வுபெற்றவர்களில் 2 ஆயிரத்து 568 பேருக்கு நேர்முகத்தேர்வு நடந்து, 990 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நடந்துமுடிந்த இந்த தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேர்வு பெற்றது மிக மிக குறைவாக இருக்கிறது. 50-க்கும் குறைவானவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வளவுக்கும் மாணவர்களிடையே சிவில் சர்வீசஸ் தேர்வில் தேற வேண்டும் என்று ஆசை இருக்கிறது, நிறைய பயிற்சி மையங்களும் இருக்கின்றன என்றாலும், சரியான புரிதல் இல்லை. நாம் ஏழைகள், கிராமப்புற பள்ளிக்கூடங்களில் படித்தோம், அரசு பள்ளிக்கூடங்களில்தான் படித்தோம், தமிழ்மொழி வழிக்கல்வியில் பயின்றோம், நமக்கு எங்கே கிடைக்கப்போகிறது? என்று ஏராளமான மாணவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. ஆனால் இந்த ஆண்டு தேர்வு பெற்றவர்களில் சிலர் அரசுப்பள்ளிக்கூடங்களில் தமிழ்மொழி வழிக்கல்வியில் படித்தவர்கள்; ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். தமிழில் தேர்வு எழுதியவர்கள்.

தமிழ்நாட்டில் 3-வது இடத்தைப்பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாகும் சிவகுரு பிரபாகரன் ரெயில்வே பிளாட்பாரத்தில் தங்கிப்படித்தவர். இதுபோல, திருவண்ணாமலை மாவட்டம் சின்னக்கல்லந்தல் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் ஆடுமேய்க்கும் தொழிலாளியின் மகன். இருவருமே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அரசு பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள். சைதை துரைசாமியின், ‘மனிதநேய மையத்தில்’ படித்தவர்கள் இதன்மூலம் ஐ.ஏ.எஸ்.-ஆக ஏழ்மை ஒரு தடையில்லை என்பது தெரிகிறது. ஆக, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படித்து தேற வேண்டும் என்றால், அதற்கான ஆசை சிறு வகுப்பிலேயே வரவேண்டும். திட்டமிட்டு படிப்பதும், பொதுஅறிவுக்கான செய்தித்தாள்களை, இதழ்களை வாசிப்பதும், தகவல் பரிமாற்றத்திறனை வளர்த்துக் கொள்வதும், தலைமை பண்புகளை உருவாக்கிக் கொள்வதும் அவசியம். தமிழக கல்வியின் தரமும், அதற்கேற்ற வகையில் உயர்த்தப்பட வேண்டும். மனப்பாடம் செய்யும் சக்தியை மட்டும் மதிப்பீடு செய்யாமல் புரிந்து கொள்ளும் திறனையும், அறிந்து, அலசி ஆராயும் ஆற்றலையும் மேம்படுத்திக் கொள்ளவேண்டியது முக்கியமானதாகும். இதற்கு வழிகாட்ட தமிழக அரசு சென்னையில் உள்ள கன்னிமாரா மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகங்களில் இருப்பதுபோல, அனைத்து நூலகங்களிலும், சிவில் சர்வீசஸ் தேர்வை எதிர்கொள்வதற்கு துணை புரிவதற்கான நூல்களை தனிபிரிவில் வைக்க வேண்டும். முதல்கட்ட தேர்வுக்கு அரசு சார்பில் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் இலவச பயிற்சி அளிப்பதுபோல, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் வழங்க வேண்டும். அடுத்து வரப்போகும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் தமிழக மாணவர்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். 

Next Story