‘ஒளிமிகுந்த இந்தியா’


‘ஒளிமிகுந்த இந்தியா’
x
தினத்தந்தி 4 May 2018 9:30 PM GMT (Updated: 2018-05-04T17:40:41+05:30)

இந்தியாவை ஒரு ஒளிமிகுந்த நாடாக மாற்றும் முயற்சியில் பிரதமர் நரேந்திரமோடி வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம்.

ந்தியாவை ஒரு ஒளிமிகுந்த நாடாக மாற்றும் முயற்சியில் பிரதமர் நரேந்திரமோடி வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்லலாம். இந்தியா சுதந்திரம் அடைந்து 71 ஆண்டுகள் ஆகியும் மொத்தம் உள்ள 5 லட்சத்து 97 ஆயிரத்து 464 கிராமங்களில், 18 ஆயிரத்து 452 கிராமங்களில் மின்சார வசதி இல்லாமல் இருந்தது. 2015–ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின்போது டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றும்போது, அடுத்த 1000 நாட்களில் நம்நாட்டில் மின்சார வசதி இல்லாத அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என்றார். 

பிரதமர் 1000 நாட்கள் என்று இலக்கு நிர்ணயித்தார். ஆனால் 987 நாட்களிலேயே அதன் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டார். கடைசி கிராமமாக மணிப்பூரில் மலை கிராமமான லீசாங் என்ற குக்கிராமத்துக்கு 28–4–2018 அன்று மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டது. பிரதமர் நரேந்திரமோடி, அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டு முடித்துவிட்டதை மிகவும் பெருமைபட அடுத்தநாள், ‘டுவிட்டரில்’ பல செய்திகள் மூலம் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார். ஒரு கிராமம் மின்சார வசதி பெற்று இருக்கிறது என்று கணக்கிடப்பட அந்த கிராமத்தில் அடிப்படை மின்சார உள்கட்டமைப்பு வசதியாக டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் விநியோக லைன்கள் இருக்க வேண்டும். அந்த கிராமத்தில் உள்ள மொத்த வீடுகளில் 10 சதவீத வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு இருக்க வேண்டும். இதுதவிர பொதுமக்கள் சேவையில் உள்ள பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், சமுதாய கூடங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு இருக்க வேண்டும். 

அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி வழங்கிய அரசாங்கத்தின் இப்போதைய சவால் அனைத்து வீடுகளுக்கும் மின்சார வசதி வழங்கப்பட வேண்டும் என்பதுதான். அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க ‘சவுபாக்யா’ என்று ஒரு திட்டம் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க அடுத்த ஆண்டு மார்ச் மாதம்தான் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் தற்போது 3 கோடியே 10 லட்சத்து 80 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் இல்லை என்று கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி அறிவிக்கும்போது தெரிவிக்கப்பட்டது. அப்போது முதல் இப்போது வரை வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தை கணக்கிட்டால் இன்னும் 3 கோடி வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட வேண்டும். இப்போது இந்த 3 கோடி வீடுகளுக்கும் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த இலக்கை மத்திய அரசாங்கம் நிறைவேற்றிவிடும். ஆனால் மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டால் மட்டும் போதாது. 24 மணி நேரமும் தடையில்லாமல், மின்வெட்டு இல்லாமல் வழங்கப்பட வேண்டும். மின்சார உற்பத்தியை இன்னமும் பெருக்கி விநியோகத்தை சீர்படுத்த வேண்டும். ‘பசுமை எரிசக்தி’ என்று கூறப்படும் சூரிய சக்தி மின்சார உற்பத்தி, காற்றாலை மின்சார உற்பத்தி போன்ற மரபுசாரா மின் உற்பத்திகளில் இன்னமும் முனைப்பு காட்ட வேண்டும். அனைத்து வீடுகள், கட்டிடங்கள், அரசு அலுவலகங்களில் சூரியசக்தி மின்சார உற்பத்தி வசதிகளை பெருக்க வேண்டும். இந்த திட்டங்களில் இலக்கை மிஞ்சியது போல தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து அறிவிப்புகளையும் 2019 தேர்தலுக்கு முன்பு நிறைவேற்ற வேண்டும்.

Next Story