பேச்சுவார்த்தைதான் தீர்வு


பேச்சுவார்த்தைதான் தீர்வு
x
தினத்தந்தி 8 May 2018 9:30 PM GMT (Updated: 8 May 2018 2:06 PM GMT)

தமிழ்நாட்டின் மக்கள்தொகை 2011 கணக்கெடுப்பின்படி, 7 கோடியே 21 லட்சமாகும். இதில் அரசு ஊழியர்கள் 12 லட்சம் பேர் மற்றும் அரசில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுபவர்கள் 7.42 லட்சம் பேர்.

அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையான சமவேலைக்கு சமஊதியம் என்பதை அமல்படுத்தவேண்டும்.

ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுனர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களையவேண்டும்.

பல்கலைக்கழக கல்லூரி ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் அமல்படுத்துதல், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள், தொகுப்பூதியம், கணினி ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்படவேண்டும்.

21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடன் ரொக்கமாக வழங்கிடவேண்டும் என்பதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ–ஜியோ கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.

இப்போது இறுதியாக நேற்று தலைமை செயலகம் நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார்கள். இதையொட்டி, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கத்தலைவர்களை கைது செய்திருந்தது.

இந்தநிலையில், அரசின் சார்பில் தங்கள் நிதிநிலையை விளக்கி அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகைகளில் ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளார்.

2017–2018–ம் ஆண்டில் அரசின் மொத்த வரிவருவாய் ரூ.93,795 கோடியாகும். இதில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான சம்பளச்செலவு மட்டும் ரூ.45,006 கோடியாகும். இதுதவிர ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கும் ஓய்வூதிய தொகை ரூ.20,397 கோடி. ஆகமொத்தம் ரூ.65,403 கோடி நிர்வாகத்தை நடத்தும் அரசு ஊழியர்களுக்காக சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் வழங்கப்படுகிறது. அதாவது மொத்த வரிவருவாயில் சுமார் 70 சதவீதம் இவ்வாறு செலவு செய்யப்படுகிறது.

தமிழ்நாடு அரசு பல்வேறு வளர்ச்சிபணிகளுக்காக பெற்றுள்ள கடனுக்கான வட்டிசெலவு 24 சதவீதம். மீதமுள்ள 6 சதவீதம் மாநில வரிவருவாயுடன், மத்திய அரசிடமிருந்து பெறப்படும் வரிபகிர்வு உள்பட ரூ.41,600 கோடியைக்கொண்டு தான் தமிழ்நாடு அரசு மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று அதில் தெள்ளத்தெளிவாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று போராட்டம் நடத்த திட்டமிட்டு சேப்பாக்கம் வந்தநேரத்திலும், வரும் வழியிலும் ஏராளமான ஆண்–பெண் ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். போலீசாரின் கண்காணிப்பு, தடையையும் மீறி பலர் ஆங்காங்கு குவிந்தனர். இதுபோன்ற நிலையை அரசும் சரி, ஊழியர்களும் சரி தவிர்த்து இருக்கலாம்.

அரசு எந்திரம் என்ற சக்கரத்துக்கு அச்சாணி போன்றவர்கள் அரசு ஊழியர்கள். இந்த சக்கரம் இலகுவாக சத்தமில்லாமல் சுழல துணைபுரியும் உராய்வை தடுக்கும் மசகு எண்ணெய் போன்றது இருவருக்கும் இடையே உள்ள நல்லுறவு. எனவே, இத்தகைய போராட்டங்கள், கைது நடவடிக்கைகள் போன்ற நல்லுறவை கெடுக்கும் முயற்சிகளை இருசாராரும் தவிர்த்து, பேச்சுவார்த்தைகள் மூலமே பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டும்.

Next Story