ரஜினிகாந்தின் முதல் வாக்குறுதி


ரஜினிகாந்தின் முதல் வாக்குறுதி
x
தினத்தந்தி 10 May 2018 9:30 PM GMT (Updated: 2018-05-10T22:36:39+05:30)

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?, வரமாட்டாரா?, வந்தால் எப்போது வருவார்?, தனிக்கட்சி தொடங்குவாரா?, ஏதாவது கட்சியோடு கூட்டணி சேருவாரா?, எந்த கட்சியோடு கூட்டணி வைப்பார்? என்ற கேள்விக்கெல்லாம் விடைகாண முடியாமல், 1996–ம் ஆண்டு முதல் எல்லோரும் காத்துக்கொண்டிருந்தார்கள்.

ஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?, வரமாட்டாரா?, வந்தால் எப்போது வருவார்?, தனிக்கட்சி தொடங்குவாரா?, ஏதாவது கட்சியோடு கூட்டணி சேருவாரா?, எந்த கட்சியோடு கூட்டணி வைப்பார்? என்ற கேள்விக்கெல்லாம் விடைகாண முடியாமல், 1996–ம் ஆண்டு முதல் எல்லோரும் காத்துக்கொண்டிருந்தார்கள். பலகட்டங்களில் அவர் சூசகமாக சொல்லிக்கொண்டிருந்தாலும், கடந்த டிசம்பர் 31–ந்தேதி ரசிகர்களை சந்திக்கும்போது உறுதிபட சொல்லிவிட்டார். ‘‘நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் நிற்போம்’’ என்று உறுதியாக தெரிவித்துவிட்டார். 

இந்தநிலையில், நேற்று முன்தினம் அவரது 164–வது படமான ‘காலா’ ஆடியோ வெளியீடு சென்னையில் நடந்தது. இந்தக்கூட்டத்தில் அவர் நிச்சயமாக தன் கட்சியின் பெயர், போகும்பாதையை அறிவித்துவிடுவார் என்ற எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. இந்த நிகழ்ச்சியில், ‘நீங்கள் கட்சியின் பெயரையெல்லாம் அறிவிப்பீர்கள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்களே’ என்று ‘தினத்தந்தி’ செய்தியாளர் கேட்டபோது, ‘அரசியல் பிரவேசம், கட்சிப்பெயரை அறிவிப்பதற்கான மேடை இது அல்லவே, இது ஆடியோ வெளியிடுவதற்கான மேடை’ என்று பதில் அளித்தார். ஆனால் அவரது 30 நிமிட பேச்சின்போது, வெளிப்படையாக எதையும் சொல்லாவிட்டாலும், வழக்கம்போல சூசகமாக பல கருத்துகளை தெரிவித்துவிட்டார். அடிக்கடி வெளிவரும் ‘காலா’ படத்தில் உள்ள அவரது வசனமான, ‘‘வேங்கையன் மகன் ஒத்தையில நிக்கேன்... தில் இருந்தா மொத்தமா வாங்கல...’’ என்பதை இந்த மேடையிலும் சொன்னார். இதன் பொருளை அரசியல் நோக்கர்கள், அவர் தனியாகத்தான் தேர்தலில் நிற்கப்போகிறார். ஏற்கனவே டிசம்பர் 31–ந்தேதி பேசும்போதுகூட, 234 தொகுதிகளிலும் நிற்போம் என்றுதான் சொல்லியிருக்கிறார் என்று விளக்கம் கூறுகிறார்கள். 

பேச்சின் இறுதியில், ‘‘நதிகள் இணைப்பு என்பது என் வாழ்க்கையின் ஒரே கனவு, தென்னிந்திய நதிகளை இணைத்துவிட்டால், அதன்பிறகு மறுநாளே நான் கண்மூடினாலும் எனக்கு கவலையில்லை’’ என்று தனது அரசியலின் முதல் வாக்குறுதியை அறிவித்துவிட்டார். நதிநீர் இணைப்பு என்பது ரஜினிகாந்த் உள்ளத்தில் வெகுகாலமாகவே அசைவாடிக்கொண்டிருக்கும் ஒரு அழுத்தமான உணர்வு ஆகும். 13–10–2002 அன்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்றுகோரி, சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்த நேரத்தில், கங்கை–காவிரி இணைப்பு திட்டத்தை அமல்படுத்தவேண்டும். அப்படி கங்கை நதியை இணைக்க முடியாவிட்டால், குறைந்தபட்சம் தென்னிந்திய நதிகளையாவது இணைக்கவேண்டும். எவ்வளவு பணம் என்று கவலைப்படாதீர்கள், நாளைக்கே அறிவித்தால்கூட, நாளையே ரூ.1 கோடி தருகிறேன், எனது பாக்கெட்டிலிருந்து தருகிறேன். பணம் வேண்டும் என்றால் மக்களிடம், எங்களிடம் விடுங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியது இன்னும் பசுமையாக எல்லோருக்கும் நினைவில் இருக்கலாம். ஆக, அவரது முதல் இலக்கு தென்னிந்திய நதிகளை இணைப்பதுதான். நதிநீர் இணைப்பு என்பது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கண்ட கனவு. மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் கண்ட கனவு. இப்போது ரஜினிகாந்த் அறிவித்த முதல் வாக்குறுதி. தென்னிந்திய நதிகள் இணைக்கப்படவேண்டும் என்றால், தென் மாநிலங்களோடு நல்லிணக்கம் வேண்டும். அதை உருவாக்க அனைவரும் பாடுபடவேண்டும்.

Next Story