கர்நாடக தேர்தலுக்காக காத்திருக்கிறதா பெட்ரோல்-டீசல் விலை?


கர்நாடக தேர்தலுக்காக காத்திருக்கிறதா பெட்ரோல்-டீசல் விலை?
x
தினத்தந்தி 11 May 2018 9:30 PM GMT (Updated: 11 May 2018 6:48 PM GMT)

மக்களின் போக்குவரத்து செலவில் தாக்கம் ஏற்படுத்துவது பெட்ரோல் விலையென்றால், விலைவாசி உயர்வுக்கு ஒரு முக்கியமான காரணம் டீசல் விலைதான்.

க்களின் போக்குவரத்து செலவில் தாக்கம் ஏற்படுத்துவது பெட்ரோல் விலையென்றால், விலைவாசி உயர்வுக்கு ஒரு முக்கியமான காரணம் டீசல் விலைதான். இந்தியாவில் பெட்ரோல்-டீசலுக்கான கச்சா எண்ணெய் உற்பத்தி போதிய அளவு கிடையாது. 80 சதவீதம் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. கச்சா எண்ணெயின் சர்வதேச விலை ஒரு டாலர் உயர்ந்தால், நமது இறக்குமதி செலவு ரூ.823 கோடி அதிகரிக்கிறது. இதுபோல, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு ரூபாய் குறைந்தாலும், இறக்குமதி செலவு ரூ.823 கோடி அதிகரிக்கும். ஆக, சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலையும், இந்திய ரூபாய் நோட்டின் மதிப்பும்தான் பெட்ரோல்-டீசல் விலையை நிர்ணயிக்கிறது. தற்போது கடந்த 15 மாதங்கள் இல்லாத அளவு ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. நேற்றைய கணக்கின்படி, டாலருக்கு நிகரான ரூபாய் நோட்டு மதிப்பு ரூ.67.21 காசுகளாகும். இதுபோல, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 77.51 டாலராகும். 2014-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குப்பிறகு கச்சா எண்ணெய் விலை இவ்வளவு உயர்ந்துள்ளது. நேற்று சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.77.39-ம், டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.69.52 ஆகும்.

பெட்ரோல் விலை கடந்த 55 மாதங்களாக இல்லாத நிலையிலும், டீசல் விலை இதுவரை எப்போதும் இல்லாத அளவும் உயர்ந்துள்ளது. 2010-ம் ஆண்டு வரை பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயம் மத்திய அரசாங்கத்திடம்தான் இருந்தது. அந்த ஆண்டு ஜூன் மாதத்தில் பெட்ரோலிய கம்பெனிகளே, பெட்ரோல் விலையை கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப நிர்ணயித்துக்கொள்ளலாம் என்றும், 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் டீசல் விலையையும் அவ்வாறே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் மத்திய அரசாங்கம் விதிகளை தளர்த்தியது. அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் முதல் தேதியிலும், 16-ந்தேதியிலும் பெட்ரோல்-டீசல் விலை திருத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல்-டீசல் விலை அந்தந்த நாளில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு இருக்கிறதோ, அதற்கேற்றவாறு தினமும் விலை உயர்வோ, இறக்கமோ இருந்து வந்தது. தினசரி ஏற்றம்-இறக்கத்தை கண்டு வந்த பொதுமக்கள், கடந்த மாதம் 24-ந்தேதி முதல் அதே விலையில் இருப்பதை பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.

ஏற்கனவே 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குஜராத் தேர்தல் நடந்தபோது, பெட்ரோல்-டீசல் விலை தினமும் குறைந்தது. குஜராத் தேர்தல் வாக்குப்பதிவு அந்தமாதம் 14-ந்தேதி முடிந்தவுடன் விலை உயரத்தொடங்கியது. அதுபோல, இப்போது கர்நாடக தேர்தல் நடைபெறுவதையொட்டி, பெட்ரோல்-டீசல் அதே விலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று பொதுவான ஒரு பேச்சு பரவலாக இருக்கிறது. இவ்வளவு நாளும் ஒரேநிலையில் இருந்து வந்த விலை, இன்று கர்நாடக தேர்தல் வாக்குப்பதிவுக்குப்பிறகு அப்படியே நிற்குமா?, இல்லை தேர்தல் முடிந்து விட்டது, இனி விலையில் மாற்றம் ஏற்படுமா? என்பது நாளை முதல் தெரிந்துவிடும். ஆனால், இதற்குமேல் விலை உயராமல் பெட்ரோல்-டீசல் விலையை குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை அரசு எடுக்கவேண்டும் என்பது பொதுமக்கள் கருத்து. ஏனெனில், இனி விலை ஏற்றம் தொடங்கினால், ‘சிறு பிள்ளைகளுக்கு பஞ்சுமிட்டாய் காட்டி ஏமாற்றியதுபோல்’ ஆகிவிடும்.

Next Story