காவிரி மேலாண்மை ஆணையமா?


காவிரி  மேலாண்மை ஆணையமா?
x
தினத்தந்தி 17 May 2018 9:30 PM GMT (Updated: 17 May 2018 1:28 PM GMT)

தமிழக மக்களின் பல ஆண்டு கோரிக்கையான ‘காவிரி மேலாண்மை வாரியம்’, இப்போது வேறுபெயரில் அமையப்போகிறதோ? என்ற சந்தேகம் மத்திய அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தால் உருவாகியுள்ளது.

மிழக மக்களின் பல ஆண்டு கோரிக்கையான ‘காவிரி மேலாண்மை வாரியம்’, இப்போது வேறுபெயரில் அமையப்போகிறதோ? என்ற சந்தேகம் மத்திய அரசாங்கம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தால் உருவாகியுள்ளது. வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய கர்நாடக மாநில தேர்தல் முடியட்டும் என்று மத்திய அரசு தாமதித்தது. ஆனால், கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசாங்கம் இவ்வாறு தாமதித்திருக்க வேண்டியதில்லை. ஏனெனில், நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் காவிரி ஆற்றுபடுகையில் 4 மாவட்டங்களில் உள்ள 27 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு சாதகமான தீர்ப்பு இல்லை. மதசார்பற்ற ஜனதாதளம் 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும், பா.ஜ.க. 4 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. 

14–ந்தேதி தாக்கல் செய்த வரைவு செயல்திட்டத்தில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இந்த வரைவு செயல் திட்டத்தில் காவிரி பிரச்சினைக்கு தீர்வுகாண வாரியம் அல்லது ஆணையம் அல்லது குழு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்று அமைக்கப்படும். காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்படும். இந்த அமைப்பு 9 உறுப்பினர்களை கொண்டதாக இருக்கும். இதன் தலைவர் நீர்வளம் மற்றும் நீர்மேலாண்மை செயல்திறன் கொண்ட பொறியாளராக இருப்பார். எந்த மாநிலமாவது காவிரி நடுவர்மன்றம் அல்லது சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பின்படி, தண்ணீரை பகிர்ந்துகொள்ள ஒப்புதல்தர மறுத்தால், இந்த அமைப்பு மத்திய அரசாங்கத்தை அணுகி, மத்திய அரசு எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும். இந்த அமைப்பின் தலைமையகம் பெங்களூருவில் செயல்படும் என்பது உள்பட பல அம்சங்களை குறிப்பிட்டிருந்தது. 

நேற்று முன்தினம் மீண்டும் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் வந்தபோது, இந்த அமைப்பின் பெயர் காவிரி மேலாண்மை வாரியம் என்றே இருக்கும். இதன் தலைமையிடம் டெல்லியில்தான் இருக்கும். காவிரி நீர் ஒழுங்காற்று குழு பெங்களூருவில் இயங்கும். இந்த மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பே இறுதியானது என்பது உள்பட பல கருத்துகளை கூறி, அதற்கேற்றவாறு வரைவு திட்டத்தை மாற்றி தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, நேற்று திருத்தப்பட்ட வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்த மத்திய அரசாங்கம், திடீரென பல்டி அடித்துவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அல்ல, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் என்றே இந்த அமைப்புக்கு பெயரிடப்படும். மேலாண்மை வாரியத்தைவிட, மேலாண்மை ஆணையம் அதிக அதிகாரம் கொண்டதாகத்தான் இருக்கும் என்று கூறியது. இதுகுறித்தும், கர்நாடகாவின் சில ஆட்சேபனைகள் குறித்தும் இன்று அல்லது 22–ந்தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியிருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியமா?, ஆணையமா? என்பது சுப்ரீம் கோர்ட்டு அளிக்கப்போகும் தீர்ப்பில்தான் இருக்கிறது. ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் மணம் மாறாததுபோல, அதிகாரம் குறையக்கூடாது. மத்தியிலும், கர்நாடகத்திலும் பா.ஜ.க.வே ஆட்சி செய்வதால், மத்திய அரசாங்கம், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை முழு உணர்வோடு செயல்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகளிடம் இருக்கிறது.

Next Story