தாங்க முடியாத பெட்ரோல்–டீசல் விலை


தாங்க முடியாத பெட்ரோல்–டீசல் விலை
x
தினத்தந்தி 21 May 2018 10:30 PM GMT (Updated: 2018-05-22T00:27:34+05:30)

கடந்த 14–ந் தேதி முதல் பெட்ரோல்–டீசல் விலை தினமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இப்போதெல்லாம் பொதுமக்களுக்கு அடிக்கடி மாநில சட்டசபை தேர்தல் நடந்தால் பெட்ரோல்–டீசல் விலை உயராமல் இருக்குமே! என்ற எண்ணம் வந்துவிட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத் சட்டசபை தேர்தல் நடந்தது. சரக்கு சேவை வரியில் பல பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டது. பெட்ரோல்–டீசல் விலை தினமும் 1 முதல் 3 காசுகள் வரை குறைந்து கொண்டே வந்தது. குஜராத் சட்டசபை தேர்தலின் வாக்குப்பதிவு டிசம்பர் 13–ந்தேதி முடிந்தவுடன் விலை உயரத்தொடங்கிவிட்டது. அதுபோல, கர்நாடக மாநில தேர்தல் நடந்ததையொட்டி, கடந்த மாதம் 24–ந்தேதி முதல் இந்த மாதம் 14–ந் தேதிவரை பெட்ரோல்–டீசல் விலை உயர்த்தப்படாமல் அப்படியே நிலையாக நிறுத்தப்பட்டு வந்தது. பொதுவாக பெட்ரோல்–டீசல் விலை நிர்ணயிக்கப்படுவது சர்வதேச கச்சா எண்ணெய் விலையை பொறுத்தும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை பொறுத்தும்தான்.

ரூபாய் மதிப்பு குறைந்ததால் அதன் காரணமாக அதிக விலைகொடுத்து டாலர் வாங்கவேண்டிய நிலையில் அந்த செலவு அதிகரித்துள்ளது. ஏப்ரல் 24–ந்தேதிக்குப்பிறகு கச்சா எண்ணெய் விலை ஏறத்தாழ ஒரு பீப்பாய்க்கு 3 டாலருக்கு மேல் உயர்ந்திருக்கிறது. நேற்று ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 79.07 அமெரிக்க டாலராகும். இதுபோல, ரூபாய் மதிப்பும், ஒரு டாலருக்கு கணக்கிட்டால் 68.01 காசாக இருந்தது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது, ரூபாய் மதிப்பு சரிந்துவிட்டது. எனவேதான் பெட்ரோல்–டீசல் விலை அதிகமாக உயர்ந்துகொண்டே போகிறது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் இதுவரை இல்லாத அளவு பெட்ரோல்–டீசல் விலை உச்சத்தை எட்டியுள்ளதால் மக்கள் வாழ்வில் பெரும்பாதிப்பு ஏற்படும்நிலை உருவாக தொடங்கிவிட்டது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.47 ஆகும். டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.71.59 ஆகும். இவ்வளவு விலை வாசியை மக்களால் தாங்கிக்கொள்ளவே முடியாது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது, ரூபாய் மதிப்பு விலை சரிந்து விட்டது என்று பெட்ரோல்–டீசல் விலை உயர்வுக்கு ஒரு காரணத்தைச் சொன்னாலும், மத்திய–மாநில அரசுகள் விதிக்கும் வரிகள்தான் விலை உயர்வை மேலும் தூண்டுகிறது, அதிகரிக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் 47 சதவீதம் மத்திய அரசின் கலால்வரியும், மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரியும் ஆகும். அதுபோல, டீசல் விலையில் 40 சதவீதம் மத்திய–மாநில அரசுகள் விதிக்கும் வரிகளை பொறுத்துதான் இருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வை நாம் குறைக்கமுடியாது. ரூபாய் மதிப்பு விலை வீழ்ச்சியை தடுக்கமுடியாது. பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்றால், உடனடியாக மத்திய–மாநில அரசுகள் வரிகளை குறைப்பதை தவிர வேறு வழியில்லை. ஆகவே, மக்களின் நலன்தான் முக்கியம் என்று செயல்படவேண்டிய மத்திய–மாநில அரசுகள் உடனடியாக இந்த வரிகளை குறைக்கவும், 28 சதவீத சரக்கு சேவைவரி வளையத்துக்குள் பெட்ரோல்–டீசல் விலையை கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கவேண்டிய தருணம் இது. விலைவாசி உயர்வில் இருந்து பொதுமக்களை அரவணைத்து காப்பாற்ற வேண்டியதுதான் மத்திய–மாநில அரசுகளின் கடமையாகும்.

Next Story