நீடிக்குமா?, நிலைக்குமா?


நீடிக்குமா?, நிலைக்குமா?
x
தினத்தந்தி 28 May 2018 8:21 PM GMT (Updated: 2018-05-29T01:51:48+05:30)

நேற்றுவரை நீ யாரோ?, நான் யாரோ?. இன்று முதல் நீ வேறோ, நான் வேறோ என்ற முறையில் கர்நாடக மாநிலத்தில் காங்கிரசுக்கும், மதசார்பற்ற ஜனதாதளத்திற்கும் இடையே திடீரென ஒரு கூட்டணி ஏற்பட்டது. இது தேர்தலின் பிந்தைய கூட்டணி.

பா.ஜ.க.வின் முதல்-மந்திரி எடியூரப்பாவால் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழ்நிலையில், அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற வாக்கிற்கிணங்க, காங்கிரசுக்கும், மதசார்பற்ற ஜனதாதளத்திற்கும் ஏற்பட்ட கூட்டணியாக, கடந்த 23-ந்தேதி மதசார்பற்ற ஜனதாதள கட்சித்தலைவர் குமாரசாமி முதல்-மந்திரியாகவும், காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவர் பரமேஸ்வர் துணை முதல்-மந்திரியாகவும் பதவியேற்றனர். ஆனால், இதுவரை அமைச்சரவை அமைக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். மொத்தம் 34 பேர் கொண்ட அமைச்சரவை அமைப்பது என்றும், இதில் காங்கிரசுக்கு 22 இடங்களும், மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு 12 இடங்களும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், முக்கிய இலாகாக்களை பிரிப்பதில் கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

நிதி, வருவாய், நீர்வளஆதாரம், பொதுப்பணித்துறை, எரிசக்தி ஆகிய இலாகாக்களை தங்களிடம்தான் ஒப்படைக்கவேண்டும் என்று இருகட்சிகளும் உறுதியாக இருக்கின்றன. ஆதிதிராவிடர் நலன், சமூகநலத்துறை, கல்வி, மருத்துவம், கைத்தறி போன்ற துறைகளுக்காக போட்டியிட்டால், மக்களுக்கு சேவைசெய்ய இவ்வளவு போட்டியா?, என்ன ஆரோக்கியமான போட்டி! என்று மக்கள் மகிழ்ச்சி அடையக்கூடும். ஆனால், அதைவிடுத்து, மற்ற இலாகாக்கள் மீது இவ்வளவு போட்டி என்பதை பார்த்தால் அமைச்சரவை அமையுமா?, அமைந்தாலும் நிலைக்குமா?, நீடிக்குமா? என்ற சந்தேகம் அரசியல் நோக்கர்களுக்கு இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், கூட்டணி அமைத்து முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி பதவியேற்றபிறகு, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் நேற்று நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரும், மதசார்பற்ற ஜனதாதள வேட்பாளரும் போட்டியிட்டது, இந்த சந்தேகத்தை மேலும் வளர்க்கிறது. இருகட்சிகளுக்கும் இடையே கூட்டணி மலர்ந்து இருந்தால் ஒருகட்சி வேட்பாளர் வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்கலாமே?. எங்கள் கட்சி ஆதரவு கூட்டணி கட்சிக்கே என்று பகிரங்கமாக அறிவித்திருக்கலாமே?.

இந்தநிலையில், சோனியாகாந்தியை மருத்துவ பரிசோதனைக்காக ராகுல்காந்தி அமெரிக்கா அழைத்து சென்றிருக்கிறார். அவர் வெள்ளிக்கிழமைதான் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல்காந்தி திரும்பிவந்து அவரிடம் இறுதிச்சுற்று பேச்சுவார்த்தை நடத்தியபிறகுதான் அமைச்சரவை அமையும் என்றவகையில், இன்னும் சிலநாட்கள் அமைச்சரவை அமைய வாய்ப்பில்லை என்று தெரிகிறது. தேர்தல் வாக்குறுதியில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் வாங்கப்பட்ட விவசாய கடன்கள் அனைத்தையும் பதவி ஏற்று 24 மணி நேரத்திற்குள் ரத்துசெய்வோம் என்று மதசார்பற்ற ஜனதாதளம் சொன்னது என்ன ஆச்சு? என்று பா.ஜ.க.வும், மற்ற எதிர்க்கட்சிகளும் கேட்கத்தொடங்கிவிட்டனர். நான் கர்நாடக மாநிலத்தில் உள்ள 6½ கோடி மக்களின் தயவில் இல்லை. காங்கிரஸ் கட்சிக்குத்தான் கடமைப்பட்டு இருக்கிறேன். விவசாய கடன் ரத்து செய்யப்படவில்லையென்றால், யாரும் என்னை ராஜினாமா செய்ய சொல்லத்தேவையில்லை. நானே பதவியில் இருக்கமாட்டேன் என்று குமாரசாமி அடித்து சொல்கிறார். மொத்தத்தில், கர்நாடக அரசில் அமைச்சரவை அமைப்பது குழப்பத்துக்குமேல் குழப்பமாக இருக்கிறது.


Next Story