ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுமா?


ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுமா?
x
தினத்தந்தி 29 May 2018 9:30 PM GMT (Updated: 2018-05-29T18:46:55+05:30)

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலேயே இப்போது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலேயே இப்போது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலைக்கு குஜராத், கோவா, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் அனுமதி அளிக்கவில்லை. அனுமதி அளித்து பணிகள் தொடங்கப்பட்ட மராட்டிய மாநிலத்திலும் வெளியே அனுப்பப்பட்டது. எங்கும் கால்பதிக்க முடியாத ஸ்டெர்லைட் நிறுவனம் தமிழ்நாட்டில் தொடங்க தூத்துக்குடியை தேர்ந்தெடுத்தது. 

1994–ல் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் இந்த ஆலைக்கான அனுமதி வழங்கப்பட்டு, 1996–ல் ஆலை இயங்கத்தொடங்கியது. முதலில் இருந்தே சுற்றுச்சூழல் பாதிக்கிறது, பலநோய்கள் குறிப்பாக புற்றுநோய் தாக்குகிறது என்று பொதுமக்கள் பலத்த எதிர்ப்புகளை தெரிவித்திருந்தனர். தொடர்ந்து நீதிமன்றங்களின் உத்தரவாலும், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவாலும் அவ்வப்போது மூடப்படுவதும், திரும்ப திறக்கப்படுவதும் ஒரு தொடர்கதையாக இருந்தது. 12–2–2018 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அதன் அருகில் குமரெட்டியாபுரம் ஊர் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் விசுவரூபம் எடுத்தது. 100–வது நாள் பேராட்டம் நடந்தபோது, ஏராளமான மக்கள் ஆக்ரோ‌ஷத்துடன் ஆங்காங்கு ஊர்வலமாக சென்றநேரத்தில் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, தூத்துக்குடி நகரமே போர்க்களமானது. 22 மற்றும் 23–ந்தேதிகளில் நடந்த 3 துப்பாக்கி சூடுகளில் 13 பேர் உயிர் இழந்தனர். ஏராளமானவர்கள் காயம் அடைந்துள்ளனர். ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்பதையே பொதுமக்கள் தங்கள் குறிக்கோளாக கொண்டிருந்தனர். பொதுமக்கள் நலன்கருதி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவுகளை மேற்கோள்காட்டி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்–அமைச்சர் அறிவித்தார். சற்றுநேரத்திலேயே தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஸ்டெர்லைட் ஆலையை மூடி ‘சீல்’ வைத்தார். நேற்று ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கான நில ஒதுக்கீட்டை சிப்காட் நிறுவனம் ரத்து செய்துவிட்டது. ஆனால், இந்த உத்தரவுகள் கோர்ட்டில் நிற்காது. அமைச்சரவையில் முடிவெடுத்து சட்டம் நிறைவேற்றினால்தான் வலுவுள்ளதாக இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

தொழில் அதிபர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கும்போது, ஒரு தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பாதித்தால் அதை போக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமே தவிர, இப்படி ஆலையை மூடஉத்தரவிட்டால் எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பெரிய நிறுவனங்கள் முன்வர தயங்கும், வேலைவாய்ப்பு பாதிக்கும் என்கிறார்கள். துப்பாக்கிச்சூடு நடந்தது குறித்து 3 சம்பவங்களிலும் சொல்லி வைத்தாற்போல துணை தாசில்தார்களே இதற்கான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்கள் என்று முதல் தகவல் அறிக்கைகளில் கூறப்பட்டிருப்பது நம்பும்படியாக இல்லை என்றும் சிலர் கூறுகிறார்கள். இதுமட்டுமல்லாமல், இந்த உத்தரவை எதிர்த்து ஆலை நிர்வாகம் நீதிமன்றத்தை நாடினால் அரசாங்கம், பொதுமக்கள் உணர்வுகளை புரிந்துகொண்டு இதற்கான வாதங்களை வலுவாக வைக்கவேண்டும். இப்போது வீதியில் வந்து போராடும் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், ஆர்ப்பாட்டக்காரர்களும் தங்களையும் இணைத்துக்கொண்டு, தங்கள் தரப்பு வாதங்களையும் தெரிவிக்கவேண்டும். எனவே, எதிர்ப்பு தெரிவித்த அனைவரும் போராட்டம் நடத்தியதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக நினைக்காமல், இப்போதே ‘கேவியட் மனு’ தாக்கல் செய்யவேண்டும். மொத்தத்தில், எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கும் வகையிலான தொழிற்சாலை அமைந்தால், முதலிலேயே பொதுமக்களின் கருத்துக்கு ஏற்ப அரசு முடிவு செய்யவேண்டும்.

Next Story