காவிரி மேலாண்மை ஆணையம் மறந்து போச்சா?


காவிரி மேலாண்மை ஆணையம் மறந்து போச்சா?
x
தினத்தந்தி 30 May 2018 9:30 PM GMT (Updated: 2018-05-30T19:01:50+05:30)

தமிழ்நாட்டில் பொதுவாக ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால், அந்தநேரங்களில் மட்டும் பரபரப்பாக பேசப்படுவது உண்டு. அரசியல் கட்சிகள் அறிக்கைகள் விடுவதும், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடப்பதும் உண்டு.

மிழ்நாட்டில் பொதுவாக ஏதாவது ஒரு பிரச்சினை வந்தால், அந்தநேரங்களில் மட்டும் பரபரப்பாக பேசப்படுவது உண்டு. அரசியல் கட்சிகள் அறிக்கைகள் விடுவதும், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடப்பதும் உண்டு. ஆனால், அந்தப்பிரச்சினை தீரும்முன்பு மற்றொரு பிரச்சினை தலையெடுத்துவிட்டால், பழையபிரச்சினை அது உயிர்பிரச்சினையாக இருந்தாலும்கூட மக்கள் மறந்துவிடுவார்கள். அதுபோன்ற நிலைமைதான் இப்போது காவிரி பிரச்சினைக்கும் ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் பிரச்சினை வந்தவுடன் எல்லோருடைய கவனமும் அதில்தான் இருக்கிறதே தவிர, காவிரி மேலாண்மை ஆணையம் என்னாச்சு? என்பது எல்லோருக்கும் மறந்து விட்டது. ஆண்டாண்டு காலமாக இருந்த காவிரி பிரச்சினை தமிழக டெல்டா பகுதிகளில் உள்ள 13 மாவட்டங்களுக்கு உயிர்பிரச்சினையாகும். இவ்வளவு நாளும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாத நிலையில், கடந்த 18–ந்தேதி உச்சநீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நிறைவோ? குறைவோ? இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு வந்துவிட்டது என்று எல்லோரும் மனநிறைவோடு இருந்தனர். 

காவிரி நடுவர்மன்றம் வழங்கிய தீர்ப்பில் 192 டி.எம்.சி தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்படவேண்டும் என்று இருந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் அதை 177.25 டி.எம்.சி.யாக குறைத்தது. சரி, இந்தக்குறைவு நிச்சயமாக பாதிப்புதான் என்றாலும் இதுவாவது கிடைப்பதற்கு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு அமைக்கப்படும் என்று தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்பிற்கு வலுவூட்டும் வகையில் கடந்த 18–ந்தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். இந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் இருக்கும். 10 உறுப்பினர்கள் கொண்ட இந்த ஆணையத்தில் தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரிக்கு பிரதிநிதித்துவம் இருக்கும் என்றும், தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே அரசிதழில் வெளியிட்டு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். 

தென்மேற்கு பருவமழை நேற்றுமுன்தினம் தொடங்கிவிட்டது. ஆனால், இந்த காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைப்பது தொடர்பாக எந்த அறிவிக்கையும் அரசிதழில் வெளியிடப்படவும் இல்லை. காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படவும் இல்லை. உச்சநீதிமன்றத்தின் மிக முக்கியமான தீர்ப்பே தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன்பே, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பதுதான். இந்த உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கு மத்திய மந்திரிசபை கூட்டப்பட்டு அதன் ஒப்புதலை பெற்றுத்தான் அரசிதழில் வெளியிடமுடியும். அரசிதழில் வெளியிட்ட பிறகுதான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான உத்தரவை பிறப்பிக்கமுடியும். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகுதான் மாநிலங்களில் இருந்து பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையிலான உறுப்பினர்களின் நியமனத்தையும், மத்திய அரசாங்கம் நியமிக்க வேண்டிய உறுப்பினர்களையும் நியமிக்கவேண்டும். ஆக காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒவ்வொரு செயலும் அரசிதழில் வெளியிட்ட பிறகுதான் தொடங்கமுடியும். இவ்வளவு நாளும் காவிரி பிரச்சினைக்காக போராடிய தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளும் உடனடியாக அரசிதழில் வெளியிட்டு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க வலியுறுத்தவேண்டும். இல்லையென்றால் நடுவர்மன்ற தீர்ப்பு 2007–ல் வெளியிடப்பட்டு, 2013–ல் அரசிதழில் வெளியிட்டது போல் ஆகிவிடும். காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்ற தீர்ப்பு உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால் உச்சநீதிமன்றத்தின் கதவுகளைத்தான் மீண்டும் தட்டவேண்டும்.

Next Story