கேரளா வழிகாட்டுகிறது


கேரளா வழிகாட்டுகிறது
x
தினத்தந்தி 31 May 2018 9:30 PM GMT (Updated: 2018-05-31T19:20:15+05:30)

பொதுமக்களுக்கு அன்றாட செலவில் பெரும்பாதிப்பு என்னவென்றால், பெட்ரோல்–டீசல் விலை உயர்வுதான்.

பொதுமக்களுக்கு அன்றாட செலவில் பெரும்பாதிப்பு என்னவென்றால், பெட்ரோல்–டீசல் விலை உயர்வுதான். இந்த விலை நிர்ணயமெல்லாம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு இணையான ரூபாய் மதிப்பை பொறுத்துதான் நிர்ணயிக்கப்படுகிறது. நேற்று கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 77.37 அமெரிக்க டாலராகும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.67.50 காசுகள் ஆகும். கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே இருக்கிறது. கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் 3–வது இடத்தில் இந்தியா இருக்கிறது. கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அதிக செலவை இந்தியா செலவழிக்க வேண்டியநிலையில், இந்தியாவின் நடப்புகணக்கு பற்றாக்குறை கூடுதலாக வாய்ப்பு இருக்கிறது. 

2014–ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் விலை குறைந்துகொண்டே இருந்த கச்சா எண்ணெய் சமீபகாலமாக ஏறுமுகத்தில் இருக்கிறது. கர்நாடக தேர்தல் நடந்தநேரத்தில் பெட்ரோல்–டீசல் விலை உயர்த்தப்படவில்லை. ஆனால் கர்நாடகா தேர்தல் முடிந்தபிறகு கடந்த மாதம் 14–ந்தேதி முதல் தொடர்ந்து பெட்ரோல்–டீசல் விலை உயர்த்தப்பட்டது. கடந்த 16 நாட்களாக விலை உயர்ந்துகொண்டே இருந்தது. பெட்ரோல் விலை டெல்லி விலையில் லிட்டருக்கு ரூ.3.80 காசும், டீசலுக்கு ரூ.3.38–ம் உயர்த்தப்பட்டுள்ளது. அத்திபூத்தாற்போல, நேற்று முன்தினம் 56 காசுகள் குறைப்பதாக காலையில் அறிவித்துவிட்டு, கொஞ்சநேரத்தில் இல்லை... இல்லை... 56 காசுகள் இல்லை. 1 காசு குறைக்கிறோம் என்று பொதுமக்களுக்கு பெரிய நிவாரணம் அளிப்பதுபோல அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 7 காசுகள் குறைந்து ரூ.81.31 ஆகவும், டீசல் விலை 6 காசுகள் குறைந்து ரூ.73.07 ஆகவும் இருந்தது. இவ்வளவு விலை உயர்வை போக்க வேண்டுமென்றால் மத்திய அரசாங்கத்தின் கலால்வரி குறைக்கப்படவேண்டும். அதோடு மாநில அரசுகள் விதிக்கும் மதிப்புக்கூட்டு வரி குறைக்கப்படவேண்டும். இவை இரண்டுக்கும் மேலாக பெட்ரோல்–டீசல் விலையை சரக்கு சேவைவரி வளையத்திற்குள் கொண்டுவரவேண்டும் என்பதுதான் பொதுவான கோரிக்கையாக இருக்கிறது. 

மத்திய அரசாங்கம் கலால்வரியாக பெட்ரோலுக்கு ரூ.19.48 ஆகவும், டீசலுக்கு ரூ.15.33 ஆகவும் விதிக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் அவரவர் முடிவுக்கேற்ப மதிப்புக்கூட்டு வரியை விதிக்கின்றன. தமிழக அரசு மதிப்புக்கூட்டுவரி பெட்ரோல் விலையில் 34 சதவீதமும், டீசல் மீது 25 சதவீதமும் விதிக்கிறது. இந்தநிலையில் கேரளாவை பொறுத்தமட்டில், பெட்ரோலுக்கு தமிழ்நாட்டைவிட குறைவாகவே மதிப்புக்கூட்டு வரி வசூலிக்கிறது. பெட்ரோல் மீது 32.2 சதவீத மதிப்புக்கூட்டுவரி வசூல் செய்கிறது. டீசல்மீது 25.58 சதவீதமும் வசூலிக்கிறது. கேரள அரசாங்கம் இன்றுமுதல் பெட்ரோல்–டீசல் விலையில் 1 ரூபாயை குறைக்க முடிவுசெய்துள்ளது. இந்த 1 ரூபாய் குறைப்பினாலேயே கேரள அரசுக்கு ஆண்டுக்கு ரூ.509 கோடி இழப்பு ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் எந்த மாநில அரசாங்கமும் செய்யாத ஒரு துணிச்சலான நடவடிக்கையை கேரள அரசாங்கம் எடுத்து இருக்கிறது. தமிழக அரசும், மத்திய அரசும், கேரளாவைப் பின்பற்றி உடனடியாக தாங்கள் விதிக்கும் வரிகளில் சற்று வரிச்சலுகை அளித்து பொதுமக்களின் வலியை குறைக்க முன்வரவேண்டும்.

Next Story