‘சர்வதேச சுற்றுச்சூழல் தினம்’


‘சர்வதேச சுற்றுச்சூழல் தினம்’
x
தினத்தந்தி 3 Jun 2018 9:30 PM GMT (Updated: 2018-06-03T17:35:04+05:30)

ஒவ்வொரு மாதமும் பிரதமர் நரேந்திரமோடி ‘மனதின்குரல்’ என்ற தலைப்பில் மக்களிடையே உரையாற்றி வருகிறார். அவர் உரையில் நிச்சயம் ஏதாவது ஒரு செய்தி மாதந்தோறும் இருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு ஆற்றிய உரையில், ‘பிளாஸ்டிக் மாசுகளை ஒழிப்போம்’ என்பதையே கருப்பொருளாக கொண்டு பேசியிருக்கிறார். இந்த ஆண்டு சர்வதேச சுற்றுச்சூழல் தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. சுற்றுச்சூழலுக்காக ஐக்கிய நாடுகள் நடத்தும் மிகப்பெரிய கொண்டாட்டம் இதுதான். இந்தியா அதிகாரப்பூர்வமாக சர்வதேச சுற்றுச்சூழல் தினக்கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவரிடமும் நான் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், இந்த கருப்பொருளையொட்டி இதன் மகத்துவத்தை புரிந்துகொண்டு, நாம் அனைவரும் பாலிதீன் மற்றும் குறைந்த தரமுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கும் முடிவை மேற்கொள்வோம் என்று பிரதமர் பேசியிருக்கிறார். எனவே, மெல்லிய இழையாக இருக்கின்ற பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடுகள் நீக்கப்படவேண்டியது அவசியம். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதினால் ஏற்படும் புகை நச்சுத்தன்மை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கும் நோக்கத்தில்தான் ‘சர்வதேச சுற்றுச்சூழல் தினம்’ கொண்டாடப்பட இருக்கிறது.

இந்த ஆண்டு இந்த கொண்டாட்டத்தை இந்தியா நடத்துகிறது. சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, பல்கலைக்கழக மானியக்குழு பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க மாணவர்களின் பங்கை பெரிதும் எதிர்பார்க்கிறது. அனைத்து பல்கலைக்கழகங்களும், உயர்கல்வி நிறுவனங்களும் பிளாஸ்டிக் ‘கப்’கள், பிளாஸ்டிக்கிலான மதிய உணவு பாக்கெட்டுகள், ‘ஸ்டிரா’, பாட்டில்கள் மற்றும் பைகளை தங்கள் வளாகத்திற்குள் தடைசெய்யவேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒருமுறை நீர்குடிக்க பயன்படுத்திவிட்டு தூர எறியும் பிளாஸ்டிக் பாட்டில்கள் பயன்பாட்டை கைவிட்டுவிட்டு, திரும்ப பயன்படுத்தும் பாட்டில்களை வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறியிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ், அனைத்து நகராட்சிகளும் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்துவதற்கான விழிப்புணர்வையும் பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தவேண்டும். பள்ளிக்கூடங்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளவேண்டும் என்று கோரி இருக்கிறது. சுற்றுச்சூழலை பாதுகாப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதெல்லாம் சட்டம் போட்டு நிறுத்திவிடமுடியாது. பொதுமக்களிடையே அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

கோவையில் உள்ள ஒரு உணவகத்தில் பார்சல் வாங்க வருபவர்கள் துணிப்பை கொண்டுவந்தால் ஒரு டீ அல்லது போண்டா இலவசம் என்று அறிவிப்பு பலகையே போடப்பட்டுள்ளது. இதனால் அந்தக்கடைக்கு வருபவர்கள் அவர்களே கையில் துணிப்பையை கொண்டுவரும் முறையை தொடங்கிவிட்டனர். அந்தக்கடையிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதில்லை. தமிழக கவர்னரான பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்றவுடன், பிளாஸ்டிக் பாட்டிலில் மினரல் வாட்டர் பயன்படுத்தும் முறையை முழுவதுமாக தடை செய்துவிட்டார். அதற்கு பதிலாக கவர்னர் மாளிகையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் எல்லோருக்கும் கண்ணாடி டம்ளர்களில்தான் வழங்கப்படுகிறது. இதுபோல, பொதுமக்கள் அவர்களாகவே பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவேண்டிய விழிப்புணர்வை, நடைமுறைகளை பின்பற்றவேண்டும். அரசியல் கட்சிகளும் இதை ஒரு சமுதாய கடமையாக கையில் எடுத்துக்கொண்டால் நிச்சயமாக சுற்றுச்சூழல் பாதிக்கப்படாது. ஆக, சட்டம் போட்டோ, விதிகளை கடுமையாக்கியோ, மெல்லிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பதற்கு பதிலாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில்தான் இதன் வெற்றியே இருக்கிறது.

Next Story