நீடிக்கட்டும் இந்த நடைமுறை


நீடிக்கட்டும் இந்த நடைமுறை
x
தினத்தந்தி 6 Jun 2018 9:30 PM GMT (Updated: 6 Jun 2018 6:17 PM GMT)

இன்றைய இளைஞர்களின் கனவு பணி என்பது எப்படியும் படித்து முடித்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். ஆகவேண்டும் அல்லது சிவில் சர்வீசஸ் பணிகளிலுள்ள 24 பணிகளில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து அகில இந்திய பணி அதிகாரியாக மிளிரவேண்டும் என்பதுதான்.

ன்றைய இளைஞர்களின் கனவு பணி என்பது எப்படியும் படித்து முடித்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ்., ஐ.எப்.எஸ். ஆகவேண்டும் அல்லது சிவில் சர்வீசஸ் பணிகளிலுள்ள 24 பணிகளில் ஏதாவது ஒன்றில் சேர்ந்து அகில இந்திய பணி அதிகாரியாக மிளிரவேண்டும் என்பதுதான். ஆண்டுக்கு ஏறத்தாழ ஆயிரம் பணிகள்தான் இருக்கும். முதலில் விண்ணப்ப மனுக்களை பரிசீலனை செய்து முதல்கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அந்த தேர்வில் மாணவர்களை வடிகட்டியபிறகுதான், முதன்மை தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். முதன்மை தேர்வு மிகவும் கடினமான தேர்வாகும். அதில் தகுதி பெற்றவர்கள்தான் ஆளுமை தேர்வு என்று அழைக்கப்படும் நேர்முகத்தேர்வுக்கு டெல்லிக்கு அழைக்கப்படுவார்கள். முதன்மை தேர்விலும், ஆளுமை தேர்விலும் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் வரிசை பட்டியல் வெளியிடப்படும். அதனை வைத்துதான் பணிகள் ஒதுக்கப்படும். அதுமட்டுமல்லாமல், எந்த மாநிலத்தில் பணி என்பதும் தீர்மானிக்கப்படும். 

இப்போது திடீரென இந்த நடைமுறையை மாற்ற ஒரு முயற்சி மத்திய அரசாங்கத்தில் எடுக்கப்படுவது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சிவில் சர்வீசஸ் பணிக்கு தேர்வு பெற்றவர்களுக்கு முதல் 3 மாதம் ஆதார பயிற்சி என்று கூறப்படும் பவுண்டே‌ஷன் கோர்ஸ் என்று மசூரியில் முதல்கட்ட பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சியின்போது இந்தியா முழுவதும் இருந்து வந்துள்ள அதிகாரிகள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நண்பர்களாக பழகுவதற்கும், அவர்கள் பணிக்காலம் முடியும் மட்டும் அந்த நட்பு நீடிக்கப்படுவதற்கும் பெரிதும் உதவியாக இருக்கிறது. ஆனால் இப்போது மத்திய அரசாங்கம் இந்த ஆதார பயிற்சியில் அவர்கள் பெறும் மதிப்பெண்களையும் சேர்த்தப்பிறகே, அதாவது முதன்மை தேர்வு மதிப்பெண், ஆளுமை தேர்வு மதிப்பெண், ஆதார பயிற்சி மதிப்பெண்கள் மூன்றையும் சேர்த்து, அதன் அடிப்படையில்தான் பணிகளை ஒதுக்க தரவரிசை பட்டியலை வெளியிடவும், மேலும் எந்த மாநிலத்தில் பணி என்று முடிவெடுக்கவும் திட்டமிட்டுள்ளது. நிச்சயமாக இத்தகைய முடிவுகள் தேவையற்றது. 

மெயின் தேர்வு தாளை திருத்துபவர்கள் யாருடைய தாளை திருத்துகிறோம் என்று தெரியாமல் திருத்துகிறார்கள். ஆளுமை தேர்வை நடத்துபவர்களுக்கு ஒருமணி நேரத்துக்கு முன்புதான் அந்த தேர்வுக்கு வருகிறவர்கள் பெயரே தெரியும். ஆக, இந்த இரு தேர்வுகளிலும் ஊழலுக்கு இடமிருக்காது, சிபாரிசுக்கும் இடமிருக்காது. தகுதி அடிப்படையில் மட்டுமே தேர்வு நடக்கும். ஆனால், ஆதார பயிற்சி அப்படியல்ல. அங்கே விருப்பு வெறுப்புகளுக்கும், சிபாரிசுகளுக்கும், பாரபட்சத்துக்கும் நிச்சயமாக இடமிருக்க வாய்ப்புள்ளது. மேலும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கிராமப்புற மாணவர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தமிழிலேயே படித்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், பயிற்சியில் சேர்ந்த முதல் 3 மாதங்களில் புதிய சூழலுக்கு சகஜமாக திக்குமுக்காடி போய் நிற்பார்கள். இப்போது திட்டமிட்டிருக்கும் நிலையில் தேர்வுகள் நடந்தால், இந்தி பேசும் மாநில மாணவர்களும், ஆங்கிலம் அதிகம் தெரிந்தவர்கள் மட்டுமே சிறப்புபெற முடியுமேதவிர, மாநில மொழிகளில் படித்த மாணவர்களால் அந்த சிறப்பை பெறமுடியாது. எனவே, காலம்காலமாக இருந்துவரும் பழைய முறையே நீடிப்பது சாலச்சிறந்தது. இதில் புதிய முறையை புகுத்துவது சற்றும் உகந்ததல்ல.

Next Story