ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி


ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி
x
தினத்தந்தி 8 Jun 2018 9:30 PM GMT (Updated: 2018-06-09T00:36:37+05:30)

நாக்பூரில் நேற்றுமுன்தினம் நடந்த ‘ராஷ்டிரீய ஸ்வயம் சேவக் சங்’ என்று கூறப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கலந்து கொள்ளும் முன்பு பெரிய சர்ச்சை கிளம்பியது.

நாக்பூரில் நேற்றுமுன்தினம் நடந்த ‘ராஷ்டிரீய ஸ்வயம் சேவக் சங்’ என்று கூறப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கலந்து கொள்ளும் முன்பு பெரிய சர்ச்சை கிளம்பியது. அவருடைய மகள் சர்மிஸ்தா, தன் தந்தை ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் கலந்து கொள்வதை குறிப்பிட்டு, இது பா.ஜ.க.வுக்கும், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கும் உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிடுவதற்கான ஒரு வாய்ப்பை கொடுத்துவிடும். ஏனெனில், பேச்சுகள் மறைந்து விடும். ஆனால் காட்சிகள் எப்போதும் மறையாமல் இருக்கும் என்று கூறினார். பல காங்கிரஸ் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

ஆனால் சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று சந்திப்பதுபோல, காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் எதிர்முகமாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ். இயக்க கூட்டத்துக்கே பழம்பெரும் காங்கிரஸ்காரரான பிரணாப்முகர்ஜி சென்று அந்த கூட்டத்திலேயே தன் கருத்தை வலியுறுத்தி பேசினார். ‘‘சமயகொள்கை, மதம், வெறுப்பு, சகிப்பின்மை மூலமாக இந்தியாவை அடையாளப்படுத்த எத்தகைய முயற்சிகள் நடந்தாலும் அது நாட்டை நீர்த்துப்போக செய்துவிடும். மதசார்பின்மையும், அனைத்தையும் உள்ளடக்கும் பண்பும்தான் நமது நம்பிக்கையாகும். இத்தகைய ஒருங்கிணைந்த கலாசாரம்தான் நம் அனைவரையும் ஒரே நாடாக உருவாக்கியுள்ளது’’ என்பது போன்று மனதில் உள்ளதை பட்டவர்த்தனமாக சொன்னது காங்கிரஸ் கட்சியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவனர் ஹெட்கேவார் வீட்டுக்கு சென்று பார்வையாளர்கள் குறிப்பேட்டில் அன்னை இந்தியாவின் மாபெரும் மகனுக்கு மரியாதை யையும், அஞ்சலியையும் செலுத்த வந்திருக்கிறேன் என்று எழுதியது அரசியலில் அனைவரும் கடைபிடிக்கவேண்டிய நாகரிகத்தை பறைசாற்றியது. 

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்பவர்களுக்கு 3 ஆண்டுகள் பயிற்சிகள் அளிக்கப்படும். அந்த 3 ஆண்டு பயிற்சிக்கு முன்னால் 7 நாட்கள் பிராத்மிக் பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு 21 நாட்களும், மூன்றாம் ஆண்டில் 25 நாட்களும் பயிற்சி அளிக்கப்படும். யோகா, தேசபக்தி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும். முதலாம் ஆண்டு பயிற்சி ஏதாவது ஒரு மாவட்டத்தில் 20 நாட்கள் அளிக்கப்படும். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கள்ளக்குறிச்சியில் நடந்தது. இரண்டாம் ஆண்டு பயிற்சி ஒவ்வொரு பிராந்திய மாநிலங்களையும் சேர்த்து, ஏதாவது ஒரு மாநிலத்தில் நடக்கும். இந்த ஆண்டு தென்மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டம் அம்பத்தூரில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நடந்தது. கல்லூரி மாணவர்களுக்கு காஞ்சீபுரத்தில் நடந்து கொண்டிருக் கிறது. 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு பழனியில் நடந்தது. மூன்றாம் ஆண்டு பயிற்சி நாக்பூரில்தான் நடக்கும். இந்த பயிற்சிக்கு அனைத்து மாநிலங்களில் இருந்தும் பயிற்சிபெற்றவர்களை தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள். இந்த மூன்றாம் ஆண்டு பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத்தான் பிரணாப்முகர்ஜி அழைக்கப் பட்டிருந்தார். வெவ்வேறு கொள்கைகள் உள்ள அமைப்புகளின் கூட்டத்தில் கலந்துகொள்வது சிறப்பான மனிதர்களின் சிறப்புக்குரிய பண்பாகும். ஆர்.எஸ்.எஸ். இயக்கக்கூட்டத்தில் காங்கிரஸ் கொள்கைகளில் வேரூன்றிய பிரணாப்முகர்ஜியும், ஆர்.எஸ்.எஸ். இயக்கக் தலைவர் மோகன் பகவத்தும் தங்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்ளும்போது, கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு இரு கருத்துகளையும் ஒன்றாக கேட்க வாய்ப்பு இருந்தது. இதுபோல, மாற்று முகாம்களில் உள்ள தலைவர்களை தங்கள் கட்சி கூட்டங்களுக்கும் அழைக்கும் பண்பினால் அரசியல் நல்லிணக்கம் வேரூன்றி தழைக்கும். 

Next Story