பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை


பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
x
தினத்தந்தி 10 Jun 2018 9:30 PM GMT (Updated: 10 Jun 2018 5:38 PM GMT)

கடந்த 5–ந்தேதி கொண்டாடப்பட்ட சுற்றுச்சூழல் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘மனதின்குரல்’ என்ற தலைப்பில் ரேடியோவில் பேசும்போது, ‘இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் பிளாஸ்டிக் மாசுகளை ஒழிப்போம் என்பதுதான்.

டந்த 5–ந்தேதி கொண்டாடப்பட்ட சுற்றுச்சூழல் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி ‘மனதின்குரல்’ என்ற தலைப்பில் ரேடியோவில் பேசும்போது, ‘இந்த ஆண்டு சுற்றுச்சூழல் தினத்தின் கருப்பொருள் பிளாஸ்டிக் மாசுகளை ஒழிப்போம் என்பதுதான். இந்த கருப்பொருளின் மகத்துவத்தை புரிந்துகொண்டு நாம் அனைவரும் பாலிதீன் மற்றும் குறைந்த தரமுள்ள பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்க்கும் முடிவை மேற்கொள்வோம்’ என்று நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். கடந்த 2 ஆண்டு களுக்கு முன்பே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை உருவாக்கியது. அதில் 50 மைக்ரான் தடிமனுக்கும் குறைவான பிளாஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்படவேண்டும் என்ற பிரிவு நாடு முழுவதும் முறையாக அமல்படுத்தப்படவில்லை.

இந்தநிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தன்று சட்டசபையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிகத்துணிச்சலான ஒரு அறிவிப்பை 110–வது விதியின்கீழ் அறிவித்தார். பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில்கொண்டும், இந்த தீங்கை நம் எதிர்கால சந்ததிக்கு விட்டுச்செல்லக்கூடாது என்ற உயரிய நோக்கத்திலும் தமிழ்நாட்டில் 2019–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதி முதல் பால், தயிர், வெண்ணெய், மருந்து பொருட்களுக்கான உரைகள் தவிர, தடிமன் வேறுபாடில் லாமல் இதர மக்காத பிளாஸ்டிக் பொருட்களான தாள்கள், தட்டுகள், தேனீர் மற்றும் தண்ணீர் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், ஸ்ட்ரா, கைபைகள், கொடிகள் உள்ளிட்ட வைகளை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் மற்றும் பயன்படுத்துதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தடைச்செய்யப் படுகிறது என்று அறிவித்தார். பொதுமக்களும், வியாபாரி களும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிபைகள், காகித உரைகள் போன்ற மக்கும் பொருட்களை பயன்படுத்துவதற்கு ஏதுவாகத்தான் உடனடியாக இதை அமல்படுத்தாமல், 2019–ம் ஆண்டு ஜனவரி 1–ந்தேதி முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவுசெய்துள்ளது என்றும் கூறினார். பொதுமக்களும் அதுவரை பொறுத்திராமல் இப்போதே பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பழகிக்கொள்ளவேண்டும். இனிமேல் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கப்போகும் தமிழக அரசு, இப்போது மாநிலம் முழுவதும் தேங்கிக்கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றவும் தகுந்த ஏற்பாடுகளை செய்து பிளாஸ்டிக் கழிவு இல்லா தமிழகம் என்ற நிலையை உருவாக்கவேண்டும்.

இதேநாளில் மத்திய அரசாங்கமும் மக்கும் தன்மைகொண்ட சானிடரி நாப்கின் அறிமுகப்படுத்தி யுள்ளது. 4 நாப்கின்கள் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை ரூ.10 என்று அறிவித்துள்ளது. முன்னோடியாக நாடு முழுவதும் 103 மருந்து கடைகளிலும், தொடர்ந்து 

3,603 ஜெனரிக் மருந்து கடைகளிலும் விற்கப்படும் என்று மத்திய ரசாயனம், உரங்கள் மற்றும் பாராளுமன்ற விவகார மந்திரி அனந்தகுமார் அறிவித்துள்ளார். இந்த சானிடரி நாப்கின்கள் உடல்நலத்துக்கு கேடுவிளைவிக்காது, சுற்றுச்சூழல் பாதிக்காது என்ற வகையில், ஜெனரிக் மருந்து கடைகளில் மட்டுமல்லாமல், அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்க மத்திய அரசாங்கம் ஏற்பாடு செய்யவேண்டும். முதல்–அமைச்சர் அறிவித்த பிளாஸ்டிக் தடை அறிவிப்பு நிச்சயமாக வரவேற்புக்குரியது. அதே நேரத்தில் இந்த தொழிலை நம்பி பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுதொழில் நிறுவனங்களுக்கும், அதை நம்பி வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கும் மாற்றாக ஏதாவது ஒரு வழியைக்காட்ட அரசு முயலவேண்டும். 

Next Story