இவர்கள் தியாகத்தின் அடையாளங்கள்


இவர்கள் தியாகத்தின் அடையாளங்கள்
x
தினத்தந்தி 11 Jun 2018 11:27 PM GMT (Updated: 2018-06-12T04:57:01+05:30)

மருத்துவ பணி என்பது உயிர்களை காப்பாற்றும் பணியாகும். அதனால்தான் மனிதநேயமிக்க மருத்துவ பணியில் புகழ்பெற்றவர்கள் மறைந்து ஆண்டுகள் பல உருண்டோடினாலும் உலகம் அவர்களை மறப்பதில்லை.

1853-ம் ஆண்டு அக்டோபர் முதல் 1856-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்வரை ரஷியாவுக்கும், பிரான்சுக்கும் இடையே நடந்த கிரிமியன் போர்முனைக்கு இரவில் கையில் ஒரு மண்எண்ணெய் விளக்கை எடுத்துக்கொண்டுபோய், காயம்பட்டுக்கிடந்த போர்வீரர்களுக்கு சிகிச்சை அளித்த இத்தாலி நாட்டைச்சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் என்ற நர்சைத்தான் இன்றைக்கும் நர்சு பணியில் இருப்பவர்களுக்கு ‘ரோல்மாடலாக’ உலகம் கருதுகிறது. அவர் பிறந்தநாள் அன்றுதான், ‘நர்சுகள் தினம்’ கொண்டாடப்படுகிறது. இதுபோல, புற்றுநோய் சிகிச்சைக்காக ரேடியம் கண்டுபிடித்த போலந்து நாட்டில் பிறந்து, பிரான்சில் வாழ்ந்த மேரி கியூரி, அதே ரேடியம் கதிர்வீச்சின் தாக்கத்துக்கு ஆளாகி மறைந்தார். இன்றைக்கும் ரேடியம் கண்டுபிடித்த அவரது மகத்தான சாதனையை மருத்துவர்கள் மறப்பதில்லை.

இப்போது கேரளாவில் அதுபோல, ‘நிபா’ வைரஸ் கொடிய தாக்குதலுக்கு ஆளான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, அதே ‘நிபா’ வைரஸ் தாக்கியதால் லினி சஜீஷ் என்ற 31 வயது நர்சு மரணம் அடைந்தார். கேரளா மாநிலம் பெரம்பரா தாலுகா மருத்துவமனையில் நர்சாக பணியாற்றிய லினியின் உடல் வீட்டிற்குக்கூட எடுத்துச்செல்லாமல், நேரடியாக மயானத்திற்கு கொண்டுபோய் தகனம் செய்யப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் அவரது தியாகத்தை போற்றியுள்ளது. அதுபோல, ‘நிபா’ வைரஸ் எளிதில் எல்லோரையும் தொற்றக்கூடிய நோய் என்பதால் அவர்களை பார்ப்பதற்கோ, இறந்தவர்களை தகனம் செய்வதற்கோ யாரும் முன்வருவதில்லை. இதுவரையில், ‘நிபா’ வைரசால் கேரளாவில் 16 பேர் இறந்திருக்கிறார்கள். தன் உயிரையும் பொருட்படுத்தாமல், கோழிக்கோடு மாநகராட்சியின் மருத்துவ அதிகாரியாக பணியாற்றும் டாக்டர் ஆர்.எஸ்.கோபகுமார் ‘நிபா’ வைரசால் பாதிக்கப்பட்டு இறந்த பலரின் உடல்களை தானே தூக்கிச்சென்று மின்மயானத்தில் தகனம் செய்து இருக்கிறார். சிலருக்கு அவர் இறுதிச்சடங்குகளையும் செய்திருக்கிறார்.

கடைசியாக ரசின் என்ற 22 வயது இளைஞர் மரணமடைந்த நேரத்தில், அவருக்கு ஆதரவாக அவருடைய உறவினர்கள் யாரும் இறுதிச்சடங்குகள் செய்ய முன்வரவில்லை. அவருடைய தகப்பனார் ஏற்கனவே காலமாகிவிட்டார். அவரது தாயார் ‘நிபா’ வைரசினால் பாதிக்கப்பட்டு கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்துமத சடங்குபடி நானே இறுதிச்சடங்கு செய்கிறேன் என்று ரசின் தாயாரிடம் அனுமதி வாங்கி, அவரது உடலை மயானத்திற்கு கொண்டுசென்று இறுதிச்சடங்குகளையும் செய்த டாக்டர் ஆர்.எஸ்.கோபகுமாரின் இந்த செயல் மிகவும் போற்றுதலுக்குரியது. நர்சு லினி, டாக்டர் ஆர்.எஸ்.கோபகுமார் ஆகியோர் தியாகத்தின் அடையாளங்களாக தங்கள் பணியை ஆற்றி இருக்கிறார்கள். தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், கொடூரநோய், உயிரைபறிக்கும் நோய், நமக்கு தொற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கும் நோய் என்பதையும் பொருட்படுத்தாமல், கருணைப்பணி ஆற்றிய இவர்கள் இருவரையும் மத்திய அரசாங்கம் உயர்ந்த விருதுகள் அளித்து கவுரவிக்கவேண்டும். மருத்துவ பணியில் உள்ள மற்றவர்களும் இவர்களைப்போல முன்மாதிரியாக பணியாற்றவேண்டும். மேலும் வாழ்ந்து மறைந்த, வாழும் இவர்களுக்கு என்ன சிறப்பு செய்தாலும் போதாது. எல்லா சிறப்புகளுக்கும் தகுதியானவர்கள் இவர்கள்தான்.

Next Story