இணை செயலாளர் அந்தஸ்தில் நிபுணர்கள்


இணை  செயலாளர் அந்தஸ்தில்  நிபுணர்கள்
x
தினத்தந்தி 12 Jun 2018 9:30 PM GMT (Updated: 2018-06-12T18:43:04+05:30)

சிவில் சர்வீசஸ் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு ஐ.ஏ.எஸ். பணி ஒதுக்கப்படும். மசூரியில் பயிற்சி பெற்றபிறகு அவர்கள் மாநில அரசு பணிக்கு ஒதுக்கப்படுவார்கள்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு ஐ.ஏ.எஸ். பணி ஒதுக்கப்படும். மசூரியில் பயிற்சி பெற்றபிறகு அவர்கள் மாநில அரசு பணிக்கு ஒதுக்கப்படுவார்கள். முதலாவதாக சார்பு செயலாளர் அந்தஸ்தில் சப்–கலெக்டர்களாக பணியாற்றுவார்கள். சார்பு செயலாளர்களுக்குமேல், துணைசெயலாளர், இணைசெயலாளர், கூடுதல் செயலாளர், செயலாளர், தலைமை செயலாளர் என்று பதவி உயர்வுபெற்று பல பதவிகள் வகிப்பார்கள். துணைசெயலாளர் அந்தஸ்தில் இருக்கும்போது அல்லது இணைசெயலாளர் அந்தஸ்திற்கு வரும்போது மாவட்ட கலெக்டராக பணியாற்றுவார்கள். மாநிலஅரசு பணியிலிருந்து மத்திய அரசாங்க பணிக்கு அதிகாரிகள் செல்வது உண்டு. ஆனால், மத்தியஅரசு பணிக்கு செல்லும்போது, மாநிலத்தில் பணியாற்றும் அந்தஸ்தில் ஒருபடி கீழேதான் பணியாற்றவேண்டிய நிலை ஏற்படும். எடுத்துக்காட்டாக, மாநில அரசு பணியில் கூடுதல் செயலாளர் அந்தஸ்தில் இருப்பவர்கள் மத்தியஅரசு பணிக்கு செல்லும்போது இணை செயலாளராகத்தான் பணியாற்றுவார்கள்.

மத்திய அரசாங்க பணியில் இணைசெயலாளர் பதவி என்பது மிகமுக்கியமான பதவி ஆகும். இணை செயலாளர்கள்தான் அரசின் திட்டங்களை உருவாக்குவதிலும், வகைப்படுத்துவதிலும், நிறைவேற்றுவதிலும் மிகமுக்கியமாக பங்காற்றுவார்கள். இந்தநிலையில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மட்டுமே வகித்துவரும் இணைசெயலாளர் பதவிகளில், வருவாய், நிதிசேவைகள், பொருளாதார விவகாரம், வர்த்தகம், விமானப்போக்குவரத்து, விவசாயம், கூட்டுறவு, நெடுஞ்சாலைகள், கப்பல்போக்குவரத்து, சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற 10 அமைச்சகங்களில் அந்தத்துறைகளில் நிபுணத்துவம்பெற்ற 10 பேரை நியமிப்பதற்காக மத்திய அரசாங்கம் திட்டம் வகுத்துள்ளது. தனியார் நிறுவனங்கள், கன்சல்டன்சி நிறுவனங்கள், சர்வதேச மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், மத்திய அரசாங்க பொதுத்துறை நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களை 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள்வரை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 

இந்தத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டால், அனைத்து துறைகளிலும் சேர்த்து 50 நிபுணர்களை நியமிக்கவும் அரசு எண்ணியுள்ளது. அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மத்தியஅரசாங்கம், தனக்கு வேண்டியவர்களை அரசின் முக்கியமான பணியில் அமர்த்தவும் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை உள்ளே புகுத்தவும் முடிவுசெய்துள்ளது. சமுகநீதி கொள்கைக்கு இது எதிராக அமையும். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடமும் மனசோர்வை ஏற்படுத்தும் என்பதுபோன்ற பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிர்வாகத்தில் சிறந்தவர்கள் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகம் இல்லை. அதேநேரத்தில் அந்தந்த துறையில் ஆழ்ந்த அனுபவமும், நல்ல பட்டறிவும், ஞானமும் கொண்டவர்களால் இன்னும் சிறப்பான திட்டங்களை தீட்டமுடியும். எடுத்துக்காட்டாக, வேளாண்துறையில் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி எடுக்கும் முடிவைவிட, வேளாண் விஞ்ஞானியாலோ, வேளாண் பல்கலைக்கழகத்தில் நல்ல அனுபவம் பெற்றுள்ள பேராசிரியரின் அறிவாற்றலாலோ இன்னும் சிறப்பான முடிவுகளை எடுக்கமுடியும் என்றும் ஒருசாரார் கூறுகின்றனர். நிபுணர்களின் சேவையை பெறுவதில் எந்ததவறும் இருக்கமுடியாது. ஏற்கனவே இவ்வாறு நியமனங்கள் நடந்ததற்கு முன்னுதாரணங்கள் இருக்கின்றன. அந்தவகையில் இதை வரவேற்கலாம். ஆனால், எதிர்க்கட்சிகள் கூறுவதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது. வேண்டியவர்களை நியமிக்காமல், இவர்களால் இந்த துறைக்கு நல்ல நிபுணத்துவம், உயர்வு கிடைக்கும் என்ற வகையில் மட்டும் நியமித்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

Next Story