தொழில் வளர்ச்சியில் முனைப்பு வேண்டும்


தொழில்  வளர்ச்சியில் முனைப்பு  வேண்டும்
x
தினத்தந்தி 13 Jun 2018 9:30 PM GMT (Updated: 13 Jun 2018 12:36 PM GMT)

தொழில் வளர்ச்சியில் கனரக தொழில் வளர்ச்சி மட்டும் எல்லா வளர்ச்சிகளுக்கும் வித்திட்டுவிடாது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியிலும் தொழில் வளர்ச்சி அடங்கி இருக்கிறது.

தொழில் வளர்ச்சியில் கனரக தொழில் வளர்ச்சி மட்டும் எல்லா வளர்ச்சிகளுக்கும் வித்திட்டுவிடாது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியிலும் தொழில் வளர்ச்சி அடங்கி இருக்கிறது. இந்த தொழில்களால்தான் உள்ளூர் வேலைவாய்ப்பு பெருகும். அதனால்தான் பொதுவாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை வலுவூட்ட, வளர்க்க அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், சமீபகாலமாக தமிழ்நாட்டில் கனரக தொழில் வளர்ச்சியில்லாமல் இருக்கிறது. பெரிய தொழில்களெல்லாம் அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிடுகிறதே என்ற கவலை எல்லோருக்கும் இருக்கிறது. இப்போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களிலும் வளர்ச்சியும் இல்லை, ஏற்கனவே இருந்த தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சியான தகவல் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பிலேயே கூறப்பட்டுள்ளது. 

2016–17–ல் மொத்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 67 ஆயிரத்து 310 ஆக இருந்தது. ஆனால் 2017–18–ல் இந்த நிறுவனங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 981 ஆக குறைந்துள்ளது. இந்த கணக்குப்படி, 49 ஆயிரத்து 329 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதுபோல, இந்த தொழில் நிறுவனங்களின் முதலீட்டு அளவு 2016–17–ல் ரூ.36 ஆயிரத்து 221 கோடியே 78 லட்சமாக இருந்தது. 2017–18–ல் ரூ.25 ஆயிரத்து 373 கோடியே 12 லட்சமாக சரிந்துள்ளது. வேலைவாய்ப்பு எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்துள்ளது. 18 லட்சத்து 97 ஆயிரத்து 619 பேர் 2016–17–ல் வேலைவாய்ப்பு பெற்றிருந்த நிலையில், 2017–18–ல் 13 லட்சத்து 78 ஆயிரத்து 544 ஆக குறைந்துள்ளது. 

இதற்கு முக்கிய காரணம் 2015–ம் ஆண்டு பெய்த கனமழையாலும், ‘வார்தா’ புயலாலும் பல நிறுவனங்கள் தங்கள் தஸ்தாவேஜுகளை இழந்தும், இருப்பிலிருந்த பொருட்களை இழந்தும், சிறு சிறு எந்திரங்கள், கருவிகள் பழுதடைந்தநிலையிலும், அதிலிருந்து மீளமுடியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பும், சரக்கு சேவைவரியும் அவர்களை அப்படியே அமுக்கிவிட்டது. இந்த தொழில்களெல்லாம் அன்றாடம் கையில் பணத்தை வைத்துக்கொண்டு, அனைத்து செலவுகளையும் மேற்கொள்ளவேண்டிய தொழில்களாகும். இதுமட்டுமல்லாமல், சரக்கு சேவைவரிக்கு முன்பு மத்திய ஆயத்த தீர்வைக்கான இலக்கு ரூ.1½ கோடி வர்த்தக அளவில் இருந்தது. இப்போது அது ரூ.20 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. குடிசைத்தொழில் மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு எந்திரங்கள் வாங்க மத்திய அரசாங்கம் கொடுத்து வந்த 15 சதவீத மானியம், கடந்த ஒரு ஆண்டாக கொடுக்கப்படவில்லை. மாநில அரசின் 25 சதவீத மானியமும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இப்படி குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைச் சுற்றி ஏராளமான பாதிப்புகள் நின்று கொண்டு அவர்களை நெருக்கிக் கொண்டிருக்கிறது. இந்தநேரத்தில் மத்திய–மாநில அரசுகள் உடனடியாக இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரசும் இந்த தொழில் நிறுவன பிரதிநிதிகளோடும், அவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டிய வங்கிகளோடும் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக இந்த தொழில் வளர்ச்சிக்கு இருக்கும் தடைக்கற்களை அகற்றவேண்டும். இல்லையென்றால், வருகிற ஆண்டில் இதன் பாதிப்பு மிக மோசமாக இருக்கும்.

Next Story