நதிநீர் இணைப்புத்திட்டம் வேகமெடுக்க வேண்டும்


நதிநீர் இணைப்புத்திட்டம் வேகமெடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 15 Jun 2018 9:30 PM GMT (Updated: 15 Jun 2018 1:36 PM GMT)

நதிநீர் இணைப்புத்திட்டம் பற்றி நீண்ட பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும், ‘காலா’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய பிறகு, எல்லோருமே இதன் தொடக்கம்பற்றி நினைக்கத் தொடங்கி விட்டார்கள், பேசத்தொடங்கிவிட்டார்கள், எழுத தொடங்கிவிட்டார்கள்.

திநீர் இணைப்புத்திட்டம் பற்றி நீண்ட பல ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தாலும், ‘காலா’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசிய பிறகு, எல்லோருமே இதன் தொடக்கம்பற்றி நினைக்கத் தொடங்கி விட்டார்கள், பேசத்தொடங்கிவிட்டார்கள், எழுத தொடங்கிவிட்டார்கள். ‘‘நதிகள் இணைப்பு என்பது என் வாழ்க்கையில் இணைந்த ஒன்று. என் வாழ்க்கையின் ஒரேகனவு தென் இந்திய நதிகளை இணைப்பதுதான். அதுமட்டும் நடந்துவிட்டால், அடுத்தநாளே கண்ணை மூடினாலும் பரவாயில்லை’’ என்று பேசினார். நீண்ட பல ஆண்டுகளாகவே பல பெரியவர்கள் நதிநீர் இணைப்புக்கு முயற்சி எடுத்து வந்தார்கள். 2002–ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரதமராக இருந்த வாஜ்பாய் அரசு நதிகளை இணைக்கும் திட்டத்தை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், இதற்காக செயல்திட்ட குழுவையும் அமைத்தது. அந்தக்குழு தென்னக நதிகளை ஒருங்கிணைக்கவும், இமயமலையிலிருந்து உற்பத்தியாகும் நதிகளை இணைக்கவும் 2 திட்டங்களை தயாரித்தது. தென்னக நதிகள் இணைப்புத் திட்டத்தின்கீழ் மகாநதி, கோதாவரி நதிகளின் உபரிநீரை பெண்ணாறு, கிருஷ்ணா, வைகை, காவிரி நதிகளுக்கு திருப்பிவிட அந்தக்குழு பரிந்துரைத்திருந்தது. மேலும் கேரளா, கர்நாடகாவில் மேற்கு நோக்கி அரபிக்கடலுக்குள் பாயும் நதிகளை கிழக்கு நோக்கி திருப்பவும் இந்தக்குழு முடிவு செய்தது. ரூ.5 லட்சம் கோடி செலவில் நதிகளை இணைக்க முடியும். அதன் காரணமாக நாட்டில் உணவு உற்பத்தியை அதிகரிக்க முடியும். இந்தத்திட்டத்தை 2016–ம் ஆண்டுக்குள் செயல்படுத்திவிடலாம் என்றும் அந்தக்குழு அறிவித்தது. ஆனால் அடுத்தமுறை வாஜ்பாய் அரசு அமையாததால் இந்தத்திட்டம் தலையெடுக்காமல் அப்படியே அமுங்கிப்போய்விட்டது. 

தமிழ்நாட்டில் முதல்–அமைச்சர்களாக இருந்த கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நதிநீர் இணைப்பை தொடர்ந்து வலியுறுத்தினர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நதிநீர் இணைப்புக்காக பாராளுமன்றத்தில் தனிநபர் மசோதா தாக்கல் செய்து விவாதமும் நடந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி குறைந்த பட்ச செயல் திட்டத்திலும் இதை சேர்க்க வழிவகுத்தார். நெல்லையிலிருந்து காவிரி படுகை வழியாக சென்னை வரை 1,500 கிலோ மீட்டர் நதிகள் இணைப்புக்காக நடைபயணமும் மேற்கொண்டார். ஊர்கூடி இழுத்தால்தான் தேர்நகரும் என்பதுபோல, இப்போது இதற்கான முயற்சி அசைய தொடங்கிவிட்டது. அண்மையில் சேலத்தில் நடந்த அரசு விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அனைவருக்கும் ஒரு நம்பிக்கை கொடுக்கும் சில கருத்துகளை வெளியிட்டார். கோதாவரி–காவிரியை இணைக்கும் மிகப்பெரிய திட்டத்தை மத்திய அரசாங்கம் உருவாக்க இருப்பதாக மத்திய நீர்வளத்துறை மந்திரி நிதின்கட்காரி தன்னிடம் சொன்னதாக அறிவித்தார். கோதாவரியில் அதிக நீர் வருகிறது. அந்தநீரை தெலுங்கானா, ஆந்திரா வழியாக தமிழகத்திற்கு கொண்டு வந்து மாயனூர் தடுப்பணையில் இணைக்க வேண்டும். கோதாவரி தண்ணீர் 125 டி.எம்.சி. தமிழ்நாட்டுக்கு வழங்க மத்திய அரசாங்கம் திட்டம் தீட்டியுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை முதல்–அமைச்சர் கூறியிருக்கிறார். 

மத்திய மந்திரி தெரிவித்த இந்த உறுதிமொழியை அப்படியே விட்டுவிடாமல், உடனடியாக செயலுக்கு கொண்டுவர தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதில் அனைத்து அரசியல் கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்களும் இதுதான் முதல் பணி என்று அரசுக்கு துணை நிற்கவேண்டும். தமிழக பா.ஜ.க. தலைவர்களும், மத்திய அரசாங்கத்தை ஆண்டு கொண்டிருக்கும் பா.ஜ.க. தலைமைக்கு தங்களின் வேண்டுகோளை வலுவாக தெரிவிக்க வேண்டும். 

Next Story