மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத 18 தொகுதிகள்


மக்கள்  பிரதிநிதித்துவம் இல்லாத  18  தொகுதிகள்
x
தினத்தந்தி 17 Jun 2018 9:30 PM GMT (Updated: 17 Jun 2018 11:53 AM GMT)

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் தொடங்கிய சலசலப்பு இன்னமும் விட்டபாடில்லை. ‘அ.தி.மு.க.’ என்றும், டி.டி.வி.தினகரனை ஆதரிப்போர் கொண்ட ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்றும் 2 கட்சிகள் இருக்கின்றன.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் தொடங்கிய சலசலப்பு இன்னமும் விட்டபாடில்லை. ‘அ.தி.மு.க.’ என்றும், டி.டி.வி.தினகரனை ஆதரிப்போர் கொண்ட ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்றும் 2 கட்சிகள் இருக்கின்றன. டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் 18–9–2017 அன்று பதவிநீக்கம் செய்து பிறப்பித்த உத்தரவு அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் 18 எம்.எல்.ஏ.க்களும், அடுத்தநாளே வழக்கு தொடர்ந்தனர்.

முதலில் நீதிபதி துரைசாமி முன்பும், பின்னர் நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையிலும் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 16–ந்தேதி முதல் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட பெஞ்சு முன்பு தொடங்கியது. விசாரணை முடிந்து 23–1–2018 அன்று தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் இந்த பெஞ்சு ஒத்தி வைத்தது. அன்று தொடங்கி தினமும் இந்த வழக்கின் தீர்ப்பு எப்போது வெளிவரும் என்று எதிர்பார்த்த நிலையில், யாரும் எதிர்பாராதவகையில் கடந்த 14–ந்தேதி தலைமை நீதிபதி இந்திராபானர்ஜியும், நீதிபதி எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதியும், செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தரும் வெளியிட்ட தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை 3–வது ஒரு நீதிபதியிடம் ஒப்படைக்கவும் கூறப்பட்டு இருந்தது. இந்த தீர்ப்பால் இருதரப்பில் யாருக்கும் சாதகமும் இல்லை, பாதகமும் இல்லை. பாதிப்பு என்றால் இந்த 18 தொகுதி மக்களுக்குத்தான். 2017–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18–ந்தேதி முதல் இந்த 18 தொகுதிகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லை. இதைக்குறிப்பிட்டு டி.டி.வி.தினகரனின் வலதுகரம்போல செயல்பட்ட தங்க தமிழ்செல்வன் 3–வது நீதிபதியிடம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும், வழக்கை வாபஸ் பெறுவதற்கான மனுவையும் தாக்கல் செய்யப்போவதாக கூறியிருக்கிறார். அதை நீதிபதி ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்தால், அந்த தொகுதிக்கு விரைவில் தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. 

இப்போது 3–வது நீதிபதி பெயரை மூத்த நீதிபதி ஹுலுவாடி ஜி.ரமேஷ் அறிவித்து, அந்த நீதிபதி விசாரணையை தொடங்கி எவ்வளவு காலத்தில் தீர்ப்பு வழங்குவார் என்று தெரியவில்லை. அவர் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி வழங்கிய தீர்ப்பு சரியா?, அல்லது நீதிபதி எம்.சுந்தர் வழங்கிய தீர்ப்பு சரியா? என்பதை அனைத்து தரப்பு வாதங்களையும் திரும்ப கேட்டுவிட்டுத்தான் தன் தீர்ப்பை வழங்குவார். 3–வது நீதிபதி விரைவில் விசாரணையை முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும். அவர் தீர்ப்பு நிச்சயமாக ஒரு சாராருக்கு சாதகமாகவும், மற்றொரு சாராருக்கு பாதகமாகவும்தான் இருக்கப்போகிறது. அதோடு இந்த பிரச்சினை முடியப்போவதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீலுக்கு போவார்கள் என்கிறார்கள் சட்டநிபுணர்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புதான் இந்த பிரச்சினைக்கு ஒரு இறுதி முடிவைக்காட்டும். ஆக, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகுதான் மீதமுள்ள 17 தொகுதிகளிலும் தொடர்ந்து 17 எம்.எல்.ஏ.க்களும் பதவியில் இருப்பார்களா?, இடைத்தேர்தல் வருமா? என்பது தெரியும். அதுவரையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாதநிலையே இந்த 17 தொகுதிகளிலும் நீடிக்கும்.

Next Story