தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்


தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்
x
தினத்தந்தி 20 Jun 2018 9:30 PM GMT (Updated: 2018-06-21T00:26:21+05:30)

ஆசிரியர் தகுதித்தேர்வில் அதிரடியாக ஒரு உத்தரவை சி.பி.எஸ்.இ. பிறப்பித்து, அடுத்தநாளே அதில் இருந்து பின்வாங்கி பழைய முறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரியர் தகுதித்தேர்வில் அதிரடியாக ஒரு உத்தரவை சி.பி.எஸ்.இ. பிறப்பித்து, அடுத்தநாளே அதில் இருந்து பின்வாங்கி பழைய முறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த அறிவிப்பையும் அறிவிக்கும் முன்பு அதன் சாதக பாதகங்களை நன்கு பரிசீலித்தபிறகே முடிவெடுக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த செயல் நடந்துள்ளது. மாநில கல்வி திட்டத்திலும் சரி, மத்திய கல்வி திட்டத்திலும் சரி, ஆசிரியர் பயிற்சி படித்தால் மட்டும் போதாது, தகுதித்தேர்விலும் வெற்றிப்பெறவேண்டும் என்ற நிலையில் ஆசிரியர் நியமன தேர்வுகள் நடக்கின்றன.

சி.பி.எஸ்.இ. என்று கூறப்படும் மத்திய செகண்டரி கல்விவாரிய பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா மற்றும் தனியார் பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக சி.பி.எஸ்.இ. நிறுவனம் தகுதித்தேர்வை நடத்துகிறது. மொழிப்பாடங்களை பொறுத்தமட்டில், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், அசாமிய மொழி, வங்காள மொழி, குஜராத்தி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, மிஜோ, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், திபேத்திய மொழி, உருது மற்றும் மேகாலயா, அசாம் மாநிலங்களில் பேசப்படும் காசி, கரோ ஆகிய 20 மொழிகளில் ஏதேனும் இரு மொழிகளை தேர்ந்தெடுத்து ஆசிரியர்கள் இந்தத்தேர்வில் பங்கேற்கமுடியும் என்பதுதான் நடைமுறை.

பொதுவாக, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இந்தத்தேர்வை எழுதும் ஆசிரியர்கள் ஆங்கிலத்தை முதல் மொழியாகவும், தமிழை 2-வது மொழியாகவும் கொண்டு தேர்வு எழுதிவந்தனர். திடீரென சமீபத்தில் ஒருநாள் ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தியை தவிர, மற்ற 17 மொழிகளையும் இந்த பட்டியலில் இருந்து நீக்க சி.பி.எஸ்.இ. உத்தரவிட்டது. ஆக, முதல்தாளில் ஆங்கில தேர்வை எழுதும் ஆசிரியர்கள், 2-வதுதாளில் இந்தி அல்லது சமஸ்கிருதத்தில் ஒரு மொழியை தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம் புகுத்தப்பட்டது. மேலும், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களில் 1 முதல் 8-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் 2-ம் மொழியாக தாய்மொழியையும் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருக்கும்போது அந்த மொழி தெரியாத ஆசிரியர்கள் இருப்பதில் என்ன பயன்?. இந்த முறையை அமல்படுத்தினால், இந்தி பேசும் மாநிலங்களை சேர்ந்த ஆசிரியர்களே நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களிலும் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட பிரகாசமான வாய்ப்பு இருக்கும். தமிழகத்தை சேர்ந்த ஆசிரியர்களுக்கு தமிழ்நாட்டில் பணிபுரியவே இந்த வாய்ப்பு மறுக்கப்படும். சி.பி.எஸ்.இ.யின் இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கனிமொழி எம்.பி., இது நாட்டில் மற்றொரு மொழிப்போருக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தார். நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு அலையைக்கண்ட மத்திய அரசாங்கம் உடனடியாக இந்த உத்தரவு ரத்து செய்யப்படும். எப்போதும்போல 20 மொழிகளிலும் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்தது. எல்லா மாநில மக்களும் தங்கள் தாய்மொழியை உயிருக்கும் மேலாக நேசிப்பவர்கள். எனவே, இப்போதுபோல எப்போதும் மொழிகள் விஷயத்தில் மத்திய அரசாங்கம் கைவைக்கக்கூடாது. அது தேன்கூட்டில் கைவைப்பது போலாகிவிடும். தமிழ்மொழிக்கு இடமில்லை, இந்திக்குத்தான் இடம், சமஸ்கிருதத்துக்குத்தான் இடம் என்றால், தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளவேமாட்டார்கள். கொந்தளித்துவிடுவார்கள்.

Next Story