மாநிலங்களவை துணைத்தலைவர் யார்?


மாநிலங்களவை துணைத்தலைவர் யார்?
x
தினத்தந்தி 22 Jun 2018 9:30 PM GMT (Updated: 22 Jun 2018 6:20 PM GMT)

அரசியல் சட்டப்படி மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றை கொண்டதுதான் பாராளுமன்றம்.

ரசியல் சட்டப்படி மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றை கொண்டதுதான் பாராளுமன்றம். மக்களவை நாடு முழுவதும் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் இருந்து தேர்ந் தெடுக்கப்பட்ட 543 உறுப்பினர்களையும், ஆங்கிலோ இந்தியன் சமுதாயத்தை சேர்ந்த 2 நியமன உறுப்பினர்களையும் கொண்டதாகும். மாநிலங்களவை என்பது நாடு முழுவதிலும் உள்ள சட்டமன்றங்க ளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மற்றும் நியமன உறுப்பினர் களையும் சேர்த்து 245 உறுப்பினர்களை கொண்டதாகும். மாநிலங்களவை தலைவராக துணை ஜனாதிபதி இருப்பார். துணைத்தலைவராக உறுப்பினர் களில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவ்வளவு நாளும் மாநிலங்களவை துணைத்தலைவராக கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பி.ஜே.குரியன் பதவி வகித்து வந்தார். அவருடைய பதவிகாலம் வருகிற ஜூலை 2-ந்தேதி முடிவடைகிறது. அவருக்கு பதிலாக, புதிய துணைத்தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகளை மாநிலங்களவை தலைவரான வெங்கையா நாயுடு தொடங்கிவிட்டார். இதையொட்டி, எந்த தேதியில் துணைத்தலைவர் தேர்தலை நடத்தலாம்? என்பது குறித்து பாராளுமன்ற விவகார மந்திரி அனந்தகுமாரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார். துணைத்தலைவராக யாரை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள்? என்பதுதான் இப்போது மிகுந்த கேள்விக்குறியாக இருக்கிறது.

பா.ஜ.க. கூட்டணியில் 106 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இப்போது சிவசேனா என்ன முடிவெடுக்கும்?, காஷ்மீரில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சி என்ன முடிவெடுக்கும்? என்பது யாருக்கும் தெரியவில்லை. எதிர்க்கட்சிகளிடம் 115 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதுதவிர, 6 உறுப்பினர்களைக்கொண்ட தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, 2 உறுப்பினர்களைக் கொண்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி, 9 உறுப்பினர் களைக் கொண்ட ஜனதாதளம் ஆகிய கட்சிகள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள்? என்பதையும் யாராலும் உறுதியாக சொல்லமுடியவில்லை. இதுமட்டுமல்லாமல், பா.ஜ.க. என்ன கணக்கு போடப்போகிறது?. எதிர்க்கட்சி களில் அதிக உறுப்பினர்கள் அதாவது, 50 உறுப்பினர் களைக்கொண்ட காங்கிரஸ் கட்சி என்ன முடிவு எடுக்கப்போகிறது? என்பது புரியாத புதிராக இருக்கிறது. அதுவரை எந்த முடிவையும் எடுக்காத தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும், பிஜு ஜனதாதளமும், எதிர்க்கட்சி பக்கம் சேர்வதாகவும் வெளிப்படையாக அறிவிக்க வில்லை. ஆளுங்கட்சி பக்கம் சேருவதற்கான அறிகுறியும் இல்லை. இவர்கள் யார் பக்கம் சேருகிறார் களோ?, அந்தபக்கம் வெற்றிவாகை சூடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

பா.ஜ.க. கட்டணியும் சரி, எதிர்க்கட்சிகளின் கூட்டணியும் சரி, யாரை நிறுத்தப்போகிறோம் அல்லது தேர்தலில் போட்டியிடாமல் விலகி நிற்கப்போகிறோம் என்பதை வெளிப்படையாக இன்னமும் தெரிவிக்க வில்லை. ஆனால், எல்லோருக்குமே தங்கள் கட்சி வேட்பாளரை துணைத்தலைவர் தேர்தலில் நிற்க வைப்பது என்ற எண்ணம் உள்ளூர இருக்கிறது. எதிர்க் கட்சிகளுக்கு இதுவொரு பெரிய சோதனை ஆகும். ஏனெனில், 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் நிற்கவேண்டும் என்ற முயற்சி கர்நாடக தேர்தலிலிருந்து தொடங்கிவிட்டது. அதன் தொடர்ச்சியாக மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் எதிர்க் கட்சிகளின் சார்பில் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லாமல், யாராவது ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றிப் பெற்றுவிட்டால், நிச்சயமாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஆக, ஒரு மவுனமான முயற்சி இருதரப்பிலும் தொடங்கிவிட்டது என்று மட்டும் தெரிகிறது.

Next Story