பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத போராட்டங்கள்


பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத போராட்டங்கள்
x
தினத்தந்தி 26 Jun 2018 9:30 PM GMT (Updated: 2018-06-26T17:45:16+05:30)

தமிழ்நாட்டின் 25–வது கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்ற நாளிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

மிழ்நாட்டின் 25–வது கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்ற நாளிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒவ்வொரு மாவட்டமாக அவர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அப்போது, மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளை அழைத்து கூட்டம்போட்டு, அந்த மாவட்டத்தில் அரசு பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது? என்று கலந்துரையாடுகிறார். இவ்வாறு செல்லும் கூட்டங்களில், ‘அரசு அதிகாரிகளுக்கு, தான் எந்தவித உத்தரவும் பிறப்பிப்பதில்லை, மேலும் ஆய்வு நடத்துவதில்லை, அவர்களுடன் கலந்துரையாடல்தான் செய்கிறேன்’ என்று தெள்ளத்தெளிவாக கூறுகிறார். இன்னும் ஒருசில மாவட்டங்கள்தான் அவர் செல்ல வேண்டியதிருக்கிறது.

இந்தநிலையில், கவர்னர் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது என்றுகூறி, கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இவ்வாறு நாமக்கல்லில் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக இதுபோன்ற போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு, ஏதேனும் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டுவிடுவார்கள். ஆனால், நாமக்கல்லில் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் கருப்புக்கொடி காட்டுவதை தவிர்த்து, சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்கின்ற வகையில் கொடியைக்காட்ட முற்பட்ட காரணத்தினால்தான் தவிர்க்கப்பட முடியாதநிலையில் கைது செய்யவேண்டியதிருந்தது என்று முதல்–அமைச்சர் கூறினார். இந்த கைதைக்கண்டித்து சென்னையில் கவர்னர் மாளிகை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் 1,111 பேர்மீது போலீசார் இந்திய தண்டனை சட்டம் 143, 188 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, கவர்னர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்டிருந்த செய்திக்குறிப்பில், கவர்னர் மாவட்டங்களில் ஆய்வு எதுவும் நடத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டி, இந்திய தண்டனை சட்டம் 124–ன்கீழ் ஜனாதிபதியையோ, கவர்னரையோ அவர்களது பணிகளை செய்யவிடாமல் தடுத்தால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்க வழி உள்ளது என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இப்போது மேலும் ஒரு புது பிரச்சினை தலைதூக்கியுள்ளது. 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தாலும், எங்களது போராட்டம் தொடரும் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஜனநாயகத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், பொதுமக்களை பொறுத்தமட்டில், அரசியல் கட்சிகள் என்றாலும் சரி, தொழிற்சங்கம் என்றாலும் சரி, யார் போராட்டம் நடத்தினாலும் தங்களுக்கு பாதிப்பு இல்லாத இடங்களில் நடத்தவேண்டும். சாலைமறியல் மற்றும் சாலைகளில் போராட்டங்கள் நடத்தினால் அந்தவழியில் போகமுடியாமல் பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். மாற்று வழியில் போக்குவரத்தை திருப்பிவிட்டாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அன்றாட வாழ்க்கையில் பெரும் பங்கம் ஏற்படுகிறது. இந்தநிலையை தவிர்க்க, ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துபவர்களுக்கு பொதுமக்கள் செல்லும் பாதையை தவிர்த்து, தனியாக மைதானம் போன்ற இடங்களை போலீசார் ஒதுக்கி கொடுக்கவேண்டும். நீங்கள் நடத்தும் போராட்டத்திற்காக நாங்கள் ஏன் பாதிக்கப்படவேண்டும்? என்பதுதான் பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது. அரசும், அரசியல் கட்சிகளும் இதை பரிசீலிக்கவேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

Next Story