மகிழ்ச்சியும், அதிர்ச்சியும்


மகிழ்ச்சியும், அதிர்ச்சியும்
x
தினத்தந்தி 27 Jun 2018 9:30 PM GMT (Updated: 27 Jun 2018 2:12 PM GMT)

தமிழ்நாடும், கர்நாடகமும் அண்டை மாநிலங்கள் என்ற வகையில், காலம்காலமாக நல்ல நட்புணர்வுடனேயே வாழ்ந்து வந்தனர்.

மிழ்நாடும், கர்நாடகமும் அண்டை மாநிலங்கள் என்ற வகையில், காலம்காலமாக நல்ல நட்புணர்வுடனேயே வாழ்ந்து வந்தனர். தமிழ்நாட்டில் குடியிருக்கும் கன்னட மக்களும் சரி, கர்நாடகாவில் குடியிருக்கும் தமிழக மக்களும் சரி, வேறொரு மாநிலத்தில் குடியிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், மகிழ்ச்சியோடு வாழ்க்கையை ஓட்டினர். யார் கண் பட்டதோ தெரியவில்லை. காவிரி பிரச்சினை விசுவரூபம் எடுத்து, இரு மாநிலங்களுக்கிடையேயான நல்லுறவுக்கு சற்றுபங்கம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், குடும்பத்தின் தலைவர் என்பதுபோல, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு நல்ல தீர்வை வழங்கியது. காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரிநீர் ஒழுங்காற்று குழுவும் ஜூன் 1–ந்தேதிக்குள் நியமிக்கப்படவேண்டும். இதில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை மத்திய அரசாங்கம் நியமிக்கும். தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பகுதிநேர உறுப்பினர்களை நியமிக்கவேண்டும் என்று உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி, காவிரி மேலாண்மை ஆணையமும் அமைக்கப்பட்டுவிட்டது. தலைவராக எஸ்.மசூத் உசேன் மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுவிட்டார். தமிழக அரசின் சார்பில் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுவிட்டனர். ஆனால், கர்நாடகா மட்டும் நியமிக்காமல் இழுத்துக்கொண்டே இருந்தது. இது தமிழக மக்களுக்கு சற்று மனச்சோர்வை ஏற்படுத்தியது. ஆனால், மத்திய அரசாங்கம் அதற்காக காத்திருக்கவில்லை. கர்நாடகம் சார்பில் உறுப்பினர்களை சேர்த்து காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவையும் முழுமையாக அறிவித்துவிட்டது. வேறு வழியில்லாமல் கர்நாடகமும் 2 உயர் அதிகாரிகளின் பெயர், பதவிகளை குறிப்பிட்டு அவர்களை 2 அமைப்புகளுக்கும் நியமிக்க தங்கள் ஆட்சேபனைகளோடு கருத்துரு அனுப்பிவிட்டது.

இதற்கு சிலநாட்களுக்கு முன்பு, ஓசூர் அருகேயுள்ள கனிமங்கலத்தில் ஒரு கோவில் விழாவில் கலந்துகொள்வதற்காக வரும் வழியில் கர்நாடக முதல்–மந்திரி குமாரசாமியின் தகப்பனாரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, நிருபர்களிடம் பேசும்போது, ‘கர்நாடக விவசாயிகளைபோல, தமிழக விவசாயிகளும் எங்கள் சகோதரர்கள்தான். அவர்கள் உரிமை பாதுகாக்கப்படவேண்டும். இந்த ஆண்டு நல்ல பருவமழை பெய்திருக்கிறது. இது கர்நாடக மாநிலம், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட உதவியுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் பயனடைவார்கள்’ என்று அன்பொழுக பேசினார். கர்நாடக மாநிலத்தின் ஒரு பழம்பெரும் அரசியல்வாதி இவ்வாறு கூறியது, எல்லோருக்கும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் அளிக்கிறது. தேவேகவுடா கூறியதுபோன்ற சகோதர உணர்வு கர்நாடக முதல்–மந்திரிக்கும் அமைச்சர்களுக்கும், அரசியல்கட்சிகளுக்கும் இருக்கவேண்டும் என்றுதான் தமிழகம் விரும்புகிறது. அந்த உணர்வு இருந்தால் இந்த பிரச்சினையே ஒரு முடிவுக்கு வந்துவிடும். தேவேகவுடா கூறிய அதேநாளில் முதல்–மந்திரி குமாரசாமி எதிர்ப்பு கருத்துகளை கூறியது அதிர்ச்சியாக இருந்தது.

இதுமட்டுமல்லாமல், இப்போது திடீரென்று மத்திய அரசாங்கம் தன்னிச்சையாக முடிவு எடுத்து இருக்கிறது. இதுபற்றி விவாதித்து முடிவெடுக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டப்போகிறோம் என்று கர்நாடக மந்திரி கூறியிருக்கிறார். இனி இந்த பிரச்சினைக்கு தீர்வை ஏற்படுத்துவது, காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு கிடைப்பதை உறுதிப்படுத்துவது காவிரி மேலாண்மை வாரியம், காவிரிநீர் ஒழுங்காற்றுகுழு கையில்தான் இருக்கிறது. டெல்லியில் ஜூலை 2–ந் தேதி கூடப்போகும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தில் இதற்கு தெளிவான வழிகான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.

Next Story