பிரதமர் மீது துரும்பு கூட விழக்கூடாது


பிரதமர் மீது துரும்பு கூட விழக்கூடாது
x
தினத்தந்தி 28 Jun 2018 9:30 PM GMT (Updated: 28 Jun 2018 2:10 PM GMT)

மக்களாட்சியின் மகத்துவமே கருத்துகள் மோதுவதே தவிர, துப்பாக்கி குண்டுகள் துளைப்பது அல்ல. அந்தவகையில் இந்திய ஜனநாயகத்தின்மீது 3 கரும்புள்ளிகள் இதுவரை விழுந்துள்ளன.

க்களாட்சியின் மகத்துவமே கருத்துகள் மோதுவதே தவிர, துப்பாக்கி குண்டுகள் துளைப்பது அல்ல. அந்தவகையில் இந்திய ஜனநாயகத்தின்மீது 3 கரும்புள்ளிகள் இதுவரை விழுந்துள்ளன. ‘தேசப்பிதா’ மகாத்மா காந்தி 1948–ம் ஆண்டு ஜனவரி 30–ந்தேதி பிரார்த்தனை கூட்டத்திற்கு சென்றுகொண்டிருந்த நேரத்தில், 37 வயதான புனே நகரத்தை சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சேயால் துப்பாக்கியால் சுடப்பட்டு, 3 குண்டுகள் மார்பில் பாய்ந்ததால் மரணமடைந்தார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவருடைய வீட்டில் மெய்க்காவலர்களாலேயே 31–10–1984–ல் சுடப்பட்டு இறந்தார். இதுமட்டுமல்லாமல், பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி அமைதிக்கு பெயர்போன தமிழ்நாட்டின் மண்ணிலேயே 21–5–1991 அன்று இரவு 10.30 மணிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய ஸ்ரீபெரும்புதூர் வந்தநிலையில், விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த தனு என்ற 20 வயது இலங்கை பெண் மனித வெடிகுண்டாக மாறி, அவருக்கு மாலை அணிவித்துக்கொண்டிருந்தநேரத்திலேயே இடுப்பில் மறைவாக கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்ததால் சின்னாபின்னமாக மரணமடைந்தார். இப்போது அதேபோன்ற ஒரு அச்சுறுத்தல் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திரமோடிக்கு வந்துள்ளது என்பதை கேட்கும்போது, ஒவ்வொரு குடிமகனின் நெஞ்சிலும் வேதனை வாட்டி எடுக்கிறது. 

கடந்த 7–ந்தேதி புனே நகர போலீஸ், மாவோயிஸ்டு ஆதரவாளரான ரோனாவில்சன் என்பவரது டெல்லி வீட்டை சோதனை செய்தபோது ஒரு கடிதம் கைப்பற்றியதாகவும், அதில் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைபோல, நரேந்திரமோடி கொல்லப்படுவார் என்று திட்டம் தீட்டியிருப்பதாகவும் கோர்ட்டில் தெரிவித்தது. இது பாதுகாப்பு அதிகாரிகளை முடுக்கிவிட்டுள்ளது. பிரதமரை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறப்பு பாதுகாப்புபடை யார் என்றாலும் சரி, அது மந்திரிகள் என்றாலும் சரி, உயர் அதிகாரிகள் என்றாலும் சரி, கடுமையான சோதனைக்குப்பிறகே பிரதமரை நெருங்கமுடியும் என்று விதிமுறைகளை வகுத்துள்ளது. பிரதமர் சுற்றுப்பயணம் செய்யும்நேரத்தில் மாநிலங்களில் போலீசார் அதிக விழிப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பிரதமர் எங்கு சென்றாலும், அவருக்கு 3 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். முதல் அடுக்கு சிறப்பு பாதுகாப்புபடை கட்டுப்பாட்டில் இருக்கும். 2–வது அடுக்கு துணை ராணுவப்படை பாதுகாப்பில் இருக்கும். 3–வது அடுக்கு மாநில போலீசார் பாதுகாப்பு அளிப்பார்கள் என்று திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பிரதமர் சாலைவழியாக மக்களை சந்திப்பதை தவிர்த்து, பொதுக்கூட்டங்களில் மட்டும் பேச அறிவுறுத்தப்பட்டுள்ளார். ஆக, இனி யாரையும் பிரதமர் அருகில் நெருங்க சிறப்பு பாதுகாப்புபடை அனுமதிக்காது. பிரதமராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டப்பிறகு அவர் அந்த கட்சிக்காக வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாமல், வாக்களிக்காதவர்களுக்கும், ஏன் ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கும் அவர்தான் பிரதமராவார். அவருக்கு ஒன்று நேர்ந்தால், அது ஒட்டுமொத்த தேசத்திற்கு தலைகுனிவாகும். எனவே, பிரதமரின் பாதுகாப்பில் இன்னும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். அவர்மீது ஒரு துரும்பும் விழுந்துவிடாதவகையில், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் போலீசார் விழிப்புடன் செயல்படவேண்டும். பிரதமரும் இப்போது பல கூட்டங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் நடத்துவதைபோல, பாதுகாப்பு கருதி மிக முக்கிய கூட்டங்கள்தவிர, அனைத்துக்கூட்டங்களையும் வீடியோ கான்பரன்சிங் மூலமே நடத்தலாம். மொத்தத்தில், பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க மத்திய–மாநில அரசுகள் சூளுரைத்துக்கொள்ளவேண்டும்.

Next Story