காவிரி பிரச்சினையில் இன்று வழிபிறக்குமா?


காவிரி பிரச்சினையில் இன்று வழிபிறக்குமா?
x
தினத்தந்தி 1 July 2018 9:30 PM GMT (Updated: 2018-07-01T17:26:54+05:30)

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கூட்டம் காலம்காலமாக தீர்வு காணப்படாமல் இருக்கும் காவிரி நீர் பிரச்சினைக்கு ஒரு தீர்வை கண்டுபிடிக்கும் வாசலை திறந்து வைக்குமா?, வழியைக் காட்டுமா? என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள். காவிரி என்பது சாதாரண நதியாக மட்டும் தமிழக மக்களால் கருதப்படுவதில்லை. 11 மாவட்ட மக்களின் உயிர்நாடியாக விளங்குவது காவிரி. சரித்திர காலந்தொட்டே காவிரி நீரை பங்கிடுவதில் ஆரம்பகாலத்தில் அன்பான கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் சமீபகாலங்களில் அன்பும் மறைந்துபோய், கருத்து வேறுபாடும் மறைந்துபோய் மோதல்–சச்சரவு என்ற புதிய வார்த்தைகள் இடம்பெற்றன. இதற்கு எப்போதுதான் ஒருதீர்வு கிடைக்கும்?, இரு மாநில மக்களின் நல்லுறவு எப்போது மேம்படும்? என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 

இந்த பிரச்சினையை தீர்க்க நியமிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பில், தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று உத்தரவிட்டது. இறுதித்தீர்ப்பில் இந்த அளவு 192 டி.எம்.சி. தண்ணீராக குறைக்கப்பட்டது. 192 டி.எம்.சி. எப்படி போதும்? என்று விவசாய பெருங்குடி மக்கள் வேதனையடைந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிலும் 14.75 டி.எம்.சி.யை குறைத்து 177.25 டி.எம்.சி. வழங்கவேண்டும் எனறு உத்தரவிட்டது. சரி போனது போகட்டும், இதாவது முறையாக கிடைத்தால் போதும் என்று மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில், அதற்கான ஒருவழியை காட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தையும், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசாங்கம் அமைத்துள்ளது. 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக எஸ்.மசூது ஹுசைன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்கிறார். ஏதோ கூடினோம், கலைந்தோம் என்றில்லாமல், இன்றைய கூட்டத்திலேயே தீர்வுகாண வழி காணப்படும் என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்புமாகும். பொதுவாக கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை அபரிமிதமாக பெய்தால்தான் அணைகளெல்லாம் நிரம்பி, இனிமேல் தேக்கி வைக்க முடியாது என்ற நிலையில், காவிரியில் தண்ணீரை திறந்துவிடுகிறார்கள். இவ்வாறு தமிழ்நாட்டை ஒரு வடிகாலாக பயன்படுத்தி திறந்துவிடும் தண்ணீரை, நமக்கு உரிமை படைத்த 177.25 டி.எம்.சி. தண்ணீரின் கணக்கில் சேர்க்கக்கூடாது. எங்களுக்கு உரிமை படைத்த தண்ணீரை, வடிகாலுக்காக திறந்துவிடும் தண்ணீரோடு சேர்க்கக்கூடாது என்பதுதான் மக்களின் கருத்தாகும். இன்றைய கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு, கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடுவது பற்றி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிறைவேற்றுவது குறித்து ஒரு செயல்திட்டம் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 1–ந் தேதி முதல் ஒவ்வொரு 10 நாட்களிலும் தமிழ்நாட்டிற்கு திறந்துவிடும் தண்ணீர் அளவுக்கு ஒரு கால அட்டவணை பிறப்பிக்கப்படும். இப்போது கர்நாடக மாநில அணைகளில் போதுமான தண்ணீர் இருப்பதால் இந்த மாதத்துக்கு உரிய ஏறத்தாழ 32 டி.எம்.சி. தண்ணீரை உடனடியாக திறந்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் கோரிக்கையை எஸ்.கே.பிரபாகர் அழுத்தி வலியுறுத்தி நல்ல வழிக்கான வாசலை திறந்துவிட்டு வரவேண்டும் என்று தமிழகம் வாழ்த்துகிறது.

Next Story