வேலைவாய்ப்பும், தொழில் வளமும் பெருக வேண்டும்


வேலைவாய்ப்பும், தொழில் வளமும் பெருக  வேண்டும்
x
தினத்தந்தி 3 July 2018 9:30 PM GMT (Updated: 2018-07-03T23:44:35+05:30)

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது.

ண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. 1980–களில் பொறியியல் படிப்புக்கு தமிழ்நாட்டில் இடம் கிடைக்காத ஏராளமான மாணவர்கள் அண்டை மாநிலங்களுக்கு படிக்கச்சென்றார்கள். உடனடி வேலைவாய்ப்பு என்றநிலை அப்போது தொடங்கியது. தமிழக மாணவர்களுக்கு தமிழ்நாட்டில் படிக்க வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தில் முதல்–அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். சுயநிதி கல்லூரிகள் தொடங்க தாராளமாக அனுமதியளித்தார். 

என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு இருந்தநிலை கடந்த சில ஆண்டுகளாக மாறிவிட்டது. பொறியியல் பட்டம் படித்தவர்கள் ஏராளமானவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் திணறுகிறார்கள். படித்து முடித்தவுடன் வேலைகிடைக்கும், நிறைய சம்பளம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் வங்கிகளில் கடன்பெற்று படித்த ஏழை மாணவர்களும் வேலைகிடைக்காத நிலையிலும், குறைந்த சம்பளத்தில் வேலைகிடைத்த நிலையிலும், வங்கிக்கடனை திரும்பக்கட்டமுடியாமல் தத்தளிக்கிறார்கள். பல என்ஜினீயரிங் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை முழுமையாக இல்லாததால் செலவுகளை தாங்கமுடியாத நிலையில் மூடிவிட்டார்கள். தற்போது அரசு மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளை சேர்த்தால் 509 பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. இந்த ஆண்டு இந்தக்கல்லூரிகளில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 747 இடங்கள் இருக்கின்றன. ஆனால், அண்ணா பல்கலைக்கழகத்தில் இதற்காக கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டவர்கள் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 453 பேர்தான். ஏறத்தாழ ஒரு லட்சம் காலியிடங்கள் இந்த ஆண்டு வரும். இதுமட்டுமல்லாமல், பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு, நேரடியாக என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்வதற்கு 35 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. இந்த ஆண்டு விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கையே 12 ஆயிரம்தான். ஏறத்தாழ ஒரு லட்சத்துக்கும் மேலான காலியிடங்களை வைத்துக்கொண்டு தனியார் பொறியியல் கல்லூரிகள் இயங்குவது கஷ்டமாகும். 

இதுமட்டுமல்லாமல், இதுவரை பொறியியல் கல்லூரிகளில் படித்தவர்கள் அதிக சம்பளத்தில் வேலைகிடைக்கவில்லை என்றாலும், பொறியியல் கல்லூரிகளில் விரிவுரையாளர்களாக, உதவிபேராசிரியர்களாக என்று ஆசிரியர் பணியில் சேரும் வேலைவாய்ப்பு ஓரளவுக்கு இருந்தது. பொறியியல் கல்லூரிகளில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்கவேண்டும் என்ற ஒரு விகிதாச்சாரம் இருக்கிறது. தற்போது இந்த விகிதாச்சாரத்தை 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று அகில இந்திய தொழில்கல்வி கவுன்சில் குறைத்துள்ளது. இதனால் பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களாக வேலைக்கு சேரலாம் என்ற வாய்ப்பும் உடனடியாக இல்லை. என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலைமை வளருவது மாநிலத்துக்கு நல்லதல்ல. உடனடியாக தமிழக அரசு வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்கு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமோ? அதை மிகத்தீவிரமாக எடுக்கவேண்டும். தொழில்வளர்ச்சியும் வேகமாக பெருகவேண்டும். பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் புதிதாக தொழில்தொடங்க ரூ.25 லட்சம்வரை கடன்வழங்கும் திட்டம் மந்தமாக செயல்படுத்தப்படுகிறது. இதையும் மத்திய அரசாங்கம் வேகப்படுத்தி, வேலைகிடைக்காதவர்கள் தொழில் தொடங்குவதற்கான கடன்வசதி வழங்கும் விதிமுறைகளையும் சற்று எளிதாக்கி, நிறையபேருக்கு வழங்கவேண்டும். மொத்தத்தில், தொழில்வளர்ச்சி வேண்டும், சுயதொழில் வளர்ச்சிவேண்டும், வேலைவாய்ப்பு பெருகவேண்டும். அப்படிப்பட்ட சூழ்நிலை வரும்போதுதான் படித்து முடித்தவர்களுக்கு வேலையில்லாத நிலையும், என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்க ஆளில்லாமல் காலியிடம் கிடக்கும் நிலையையும் தவிர்க்கமுடியும்.

Next Story