உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்


உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்
x
தினத்தந்தி 5 July 2018 9:30 PM GMT (Updated: 2018-07-06T00:01:05+05:30)

தமிழ்நாட்டில் கடந்த 2016–ம் ஆண்டு அக்டோபர் 24–ந்தேதியோடு 5 ஆண்டுகளை கடந்து, 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன.

மிழ்நாட்டில் கடந்த 2016–ம் ஆண்டு அக்டோபர் 24–ந்தேதியோடு 5 ஆண்டுகளை கடந்து, 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் தேர்தலை சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தன. ஆனால் எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தேர்தல் பணிகளும் தொடங்கப்பட்ட நிலையில், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தொடரப்பட்ட வழக்கால் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. இதுபோதாது என்று 2011–ம் ஆண்டு மக்கள்தொகையின் கணக்கின்படி, அறிவிக்கப்பட்ட மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து வார்டுகளை தொகுதி வரையறை செய்யவேண்டும் என்று தமிழகஅரசு நிறைவேற்றிய சட்டத்தாலும் தேர்தல் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியது. இப்போது தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால் வார்டுகளின் தொகுதி வரையறை பணிகள் உடனடியாக முடிந்தால்தான் முடியும். 

தற்போது வார்டு மறுவரையறை பணிகளில் 11 ஆயிரத்து 762 ஆட்சேபனை மனுக்கள் பரிசீலனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கவேண்டிய ரூ.5 ஆயிரம் கோடிக்கும் மேலான மானியம் இன்னும் கிடைக்காமல் இருக்கிறது. 14–வது நிதி ஆணையக்குழு கிராம ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியம் மற்றும் செயலாக்க மானியம் ஆகிய இரு மானியங்களை பரிந்துரை செய்துள்ளது. மொத்த மானியத்தொகையில் 90 சதவீதம் அடிப்படை மானியமாகும். 10 சதவீதம் செயலாக்க மானியம் ஆகும். அடிப்படை மானியத்தொகை கிடைத்தால்தான் கிராம ஊராட்சிகளில் அடிப்படை பணிகளான குடிநீர் வினியோகம், தெருவிளக்கு பராமரிப்பு, சுகாதாரம், மின்சார கட்டணம் மற்றும் குடிநீர் கட்டணம் ஆகியவற்றுக்காக பணம் செலவழிக்க முடியும். தமிழ்நாட்டில் 14–வது நிதிக்குழு வெளியிட்டுள்ள வழிமுறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட பஞ்சாயத்துக்களையும், நகரசபைகளையும் அமைப்பதற்குரிய சட்டங்களை மாநில அரசு பிறப்பிக்காவிட்டால் மானியங்கள் வழங்குவதற்கு பரிந்துரை செய்யமுடியாது என்று கூறப்படுகிறது. ஆனால் தமிழக அரசு இந்த கருத்தை மறுத்து மானியத்தை கோரியுள்ளது. 

2017–18–ம் ஆண்டுக்காக 14–வது நிதிக்குழு ரூ.1,263 கோடியே 96 லட்சத்தை அடிப்படை மானியமாகவும், ரூ.365 கோடியே 37 லட்சத்தை செயலாக்க மானியமாகவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கியிருந்தது. கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1,516 கோடியே 12 லட்சத்தை அடிப்படை மானியமாகவும், ரூ.194 கோடியே 78 லட்சத்தை செயலாக்க மானியமாகவும் நிர்ணயித்துள்ளது. இந்த 2 மானியங்களிலும் முதல் தவணைதான் மத்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளதே தவிர, இரண்டாவது தவணை இன்னும் வழங்கப்படவில்லை. இந்தநிலையில், இந்த நிதி ஆண்டுக்கான அடிப்படை மற்றும் செயலாக்க மானியமாக ரூ.1,800 கோடிக்குமேல் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், ரூ.2 ஆயிரம் கோடி கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் இந்த மானியங்களெல்லாம் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டுமென்றால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உடனடியாக தேர்தல் நடத்தும் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிடவேண்டும். ஏற்கனவே சொந்த வருவாய் குறைந்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டில், மத்திய அரசாங்க மானியங்கள் கிடைப்பதற்கும் தடைக்கற்களாக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் இல்லாதநிலை உருவாகிவிடக்கூடாது.

Next Story