சி.பி.எஸ்.இ.யின் தவறால் மாணவர்களுக்கு பாதிப்பா?


சி.பி.எஸ்.இ.யின் தவறால் மாணவர்களுக்கு பாதிப்பா?
x
தினத்தந்தி 13 July 2018 9:30 PM GMT (Updated: 2018-07-13T19:10:05+05:30)

இந்த ஆண்டு ‘நீட்’ தமிழ் தேர்வில் நிறைய கேள்விகள் தவறாக கேட்கப்பட்டு இருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி.யான டி.கே.ரங்கராஜன் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

ந்த ஆண்டு ‘நீட்’ தமிழ் தேர்வில் நிறைய கேள்விகள் தவறாக கேட்கப்பட்டு இருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் எம்.பி.யான டி.கே.ரங்கராஜன் சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட 180 வினாக்களில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, ‘ரகம்’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘நகம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ‘சிறுத்தை’ என்ற வார்த்தைக்கு பதிலாக ஆங்கில வார்த்தையான ‘சீத்தா’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இவ்வாறு 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்ததால், ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் கொடுக்கப் படவேண்டும் என்று அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது. நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது இந்த வழக்கை விசாரித்து மொழி மாற்றத்தில் தவறு நடந்திருக்கிறது என்பதை உறுதிபடுத்தினர். 

தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 49 கேள்விகளுக்கும் தலா 4 மதிப்பெண் வீதம் ஒவ்வொரு வருக்கும் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் புதிய தரவரிசை பட்டியல் 2 வாரத்தில் வெளியிடப்படவேண்டும் என்று உத்தரவிட்டனர். மொத்தம் 720 மதிப்பெண்களில், தமிழில் தேர்வு எழுதிய ஏறத்தாழ 24 ஆயிரம் மாணவர் களுக்கு இந்த 196 மதிப்பெண்கள் கூடுதலாக கொடுக்கப்பட இருக்கிறது. இந்த அடிப்படையில் புதிய தரவரிசை பட்டியல் வெளியிட்டால், தமிழில் தேர்வு எழுதிய 780 மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கொடுக்கவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். ஏற்கனவே கவுன்சிலிங் மூலம் இடம் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்ட 3,501 மாணவர்களின் இடங்களில் இருந்துதான் இந்த 780 பேருக்கும் இடம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரும். நிச்சயமாக அப்போது பெரிய குழப்பம் ஏற்படும். இந்த நிலைக்கு சி.பி.எஸ்.இ.தான் முழு பொறுப்பு. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்போகிறது.
 

மாநில மொழிகளில் ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர் களுக்கு அவர்கள் மாநில மொழியுடன் ஆங்கிலத்திலும் கேள்வித்தாள் வழங்கப்படும். ஒருவேளை மாநில மொழியில் மொழிபெயர்ப்பு தெளிவாக இல்லாமல் இருந்தால் ஆங்கில கேள்வித்தாளே இறுதியானதாக கருதப்படும் என்ற விதிகளை சி.பி.எஸ்.இ. தாக்கல் செய்யும் என்று கூறப்படுகிறது. ஆக, இனி முடிவு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு பிறகுதான் இருக்கிறது. சி.பி.எஸ்.இ. இவ்வாறு 49 கேள்விகளை தவறாக மொழிமாற்றம் செய்து, கேள்விகளை கேட்டிருந்தது நிச்சயமாக ஏற்புடையதல்ல. எதிர்காலத்தில் தமிழில் வினாக்களை தயாரிக்கும்போது, நல்ல நிபுணர்களின் துணையோடு தான் தயாரிக்கவேண்டும். விடைகளில் தவறு வரலாம். வினாக்களில் நிச்சயமாக தவறு ஏற்படக்கூடாது. தமிழக அரசும் தமிழ் மொழி வழிகல்வியில் படிக்கும் மாணவர் களுக்கு ஆங்கிலத்திலும் திறமையை வளர்க்க வேண்டும். ஒருவேளை சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. அப்பீலில் இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால், இந்த 780 இடங்களையும் இந்த ஒரு ஆண்டுக்கு மட்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், சுயநிதி கல்லூரிகளிலும் கூடுதலாக கொடுக்கவேண்டும். இதுமட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் அவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் அவர்களுக்கான கல்வி கட்டணத்தை மத்திய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும். 

Next Story